திரைத் தெறிப்புகள்-22:
*
தமிழ் மொழியை நேசிப்பவர்கள் யாரும் வெகு சுலபமாக இந்தப் பாடலை மறந்துவிட முடியாது.
புரட்சிக்கவி பாரதிதாசனால் எழுதப்பட்டு இசை இரட்டையர்களான எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் கூட்டு இசையமைப்பில் உருவாகி 1965-ல் வெளிவந்த “பஞ்சவர்ணக் கிளி” என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை தனது தேன் குரலில் அருமையாக பாடியிருப்பார் பி. சுசீலா.
“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…”
என்று கேட்கும் – காதுகளைக் குளிர வைக்கும் இந்தப் பாடலில் தான் எவ்வளவு சத்தான வரிகள்!
“தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்.
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்.
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்.
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்றத் தீ”!
என்று நிறைவு பெறும் இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் வெளிவந்த காலகட்டம் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்தக் காலம். மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே வந்து போராடிச் சிறைப்பட்ட காலம். பலர் மொழிக்காகத் தங்கள் உயிரை ஈந்தக் காலம்.
தமிழகத்தின் அரசியல் வரலாற்றையே மாற்றியமைத்தக் காலம்.
அந்தக் கொதிப்பான போராட்டத்தின்போது, போராடியவர்களின் நெஞ்சில் பிஞ்சுத் தீயைப் போன்று சுடர்விட்ட பாடல் இது என்பது தான் கூடுதல் சிறப்பு.