Take a fresh look at your lifestyle.

‘ஸ்வீட் ஹார்ட்’ – காதலை உணரும் தருணம்!

இன்றைய தேதியில் ‘காதல் திரைப்படம்’ என்பது ரொம்பவே சவாலான விஷயம். அதுவும் ‘சொல்லாமலே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவே உனக்காக’, ‘நீ வருவாய் என’, ‘காதல் கோட்டை’ பாணியில் வித்தியாசமாக இல்லாமல் மிகச் சாதாரணமான காதலைக் காட்ட ரொம்பவே சிரமப்படுகின்றன நம் இயக்குநர்கள்.

ஆனாலும் சமகாலக் காதலை, காதலர்களை, அவர்கள் காதலை நோக்குகிற பார்வையை வெளிப்படுத்துகிற திரைப்படங்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் ஒன்றாக அமைந்திருக்கிறது ‘ஸ்வீட் ஹார்ட்’.

ஸ்வினீத் எஸ்.சுகுமார் எழுதி இயக்கியிருக்கிற இப்படத்தில் இசையமைத்திருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா.

ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் இருவரும் இதில் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இவர்களோடு அருணாச்சலேஸ்வரன், பௌஸீ, ரெஞ்சி பணிக்கர், சுரேஷ் சக்ரவர்த்தி, ரேஷ்மி கார்த்திகேயன் உள்ளிட்டவர்களோடு ரெடின் கிங்ஸ்லியும் ‘கௌரவமாக’ இதில் தலைகாட்டியிருக்கிறார்.

இப்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

‘ரொமாண்டிக் காமெடி ட்ராமா’ வகைமையில் இப்படம் அமைந்திருப்பதாகச் சொன்னது ட்ரெய்லர். உண்மையில் படம் அப்படித்தான் அமைந்திருக்கிறதா?

 ‘ஸ்.ஹா.’ கதை!

ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கின்றனர்; திருமணம் என்று வரும்போது இருவருக்குள்ளும் சில எதிர்பார்ப்புகள் எழுகின்றன; அவற்றில் பல முரண்களாகத் தலையெடுக்கின்றன.

தடைகள் தகர்ந்து, அவற்றை அவர்களே தகர்த்து,

இறுதியில் ஒன்றிணைந்தார்களா என்று சொல்கிற வழக்கமான காதல் கதையாகவே ‘ஸ்வீட் ஹார்ட்’ இருக்கிறது.

இந்தக் கதையைச் சுவாரஸ்யப்படுத்த, இதில் வரும் வழக்கமான கதாபாத்திரங்களை அசாதாரணமானதாக மாற்ற வேண்டும். அதுவும் இப்படத்தில் நிகழ்ந்திருக்கிறது.

சிறு வயதில் நாயகனும் அவரது சகோதரியும் தந்தையோடு வளர நேரிடுகிறது. காரணம், அவர்களது தாய் வீட்டை விட்டு வெளியேறி, வேறொருவரோடு வாழத் தொடங்கியதுதான்.

அந்த நிகழ்வு நாயகனைக் கடுமையாகப் பாதிக்கிறது. சகோதரியைப் போல, அவரால் எளிதில் தாயின் நிலைப்பாட்டைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை.

அவரது நினைவலைகளில் அது தடையாக மாறி, சீனப்பெருஞ்சுவரை விடப் பெரிதாக வளர்ந்து நிற்கிறது. ‘திருமண வாழ்வில் பெண்களை நம்ப முடியாது’ என்ற எண்ணம் அவருக்குள் வேரூன்றி விடுகிறது.

அதைவிடப் பெரிதாக, தான் நெருக்கமாக உணரும் உறவுகள் தன்னை விட்டு அகன்றுவிடும் என்று நம்புகிறார். காதலி, நண்பன், சகோதரி உட்படப் பலர் அது தவறு என்று சொன்னாலும், அவரால் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

அந்தத் தடைகள் உடைபடாதா, அதனை நாயகன் தகர்த்தெறிய மாட்டாரா என்று காத்துக் கிடக்கிறார் நாயகி. பார்வையாளர்களான நமக்கும அதே நிலைமைதான் என்பதுவே இப்படத்தின் பெரிய பலவீனம்.

நல்லதொரு ‘ஐடியா’!

உண்மையைச் சொன்னால், ஒரு ஆண் பெண்ணின் அன்றாட வாழ்விலுள்ள, நீண்டகாலப் புண்களை ஆற்றும் மருந்தாக காதல் மட்டுமே இருக்க முடியும் என்பது நல்லதொரு ‘ஐடியா’.

அதற்காக, ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் இருக்கும் சில தருணங்களைக் காட்சிகளாக அமைத்து, அவை முன்பின்னாக நகரும் வகையில் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்வீனித் சுகுமார்.

‘பிகினிங்லாம் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா’ என்று ‘வின்னர்’ கைப்புள்ள ‘டயலாக்’குக்கு நேரெதிராக, ‘ஸ்வீட் ஹார்ட்’டில் கிளைமேக்ஸ் பகுதி சுகிக்கும் அளவுக்கு முன்பாதி அமையவில்லை.

வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்வதாக, அவ்வப்போது சமகாலச் சம்பவங்களோடு ‘பிளாஷ்பேக்’ இடம்பெறுவதாக, திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், ‘அது ஆடியன்ஸுக்கு புரிய வேண்டுமே’ என்றொரு விஷயத்தை வசதியாக மறந்திருக்கிறார் இயக்குநர்.

நாயகியின் ‘ஹேர்ஸ்டைல்’லில் வித்தியாசத்தைக் காட்டி அதனை உணர்த்தியிருந்தாலும், நமக்கு அது உடனடியாகப் பிடிபடுவதில்லை.

நாயகனிடத்தில் பெரிதாக மாற்றங்கள் இல்லாதது அதற்கொரு காரணம்.

படத்தில் வரும் பெரும்பாலான பாத்திரங்களின் தோற்றத்தை, வானிலை மாற்றத்தை இடம்பெறச் செய்திருந்தால் அந்தக் குறை காணாமல் போயிருக்கும்.

கதாபாத்திரங்களின் வார்ப்பைப் பொறுத்தவரை, நாயகன் அம்மா எப்படிப்பட்டவர் என்பதைத் திரைக்கதையில் விலாவாரியாகச் சொல்லியிருக்க வேண்டும்.

இயக்குநர் அதனைச் செய்யவில்லை. தந்தைப் பற்றியும் பெரிதாக விளக்கங்கள் இல்லை. ஆனால், படம் முழுக்க ‘என்னோட அம்மா அப்பா மாதிரி’ என்று நாயகன் பேசுகிறார் அல்லது பிற பாத்திரங்கள் அது பற்றிப் பேசுகின்றன. அது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

நாயகன் நாயகி இடையே பிரிவு ஏற்பட்டு சில காலம் கழித்து இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க முயல்கின்றனர் என்பதுவே இக்கதையின் யுஎஸ்பி.

அதன் பின்னிருக்கும் காரண காரியங்கள் நிச்சயம் திருப்பத்தை ஏற்படுத்துபவை. ஆனால், அவற்றைத் திரையில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சப்பென்று இருக்கிறது.

‘அந்த பக்கமா போவோம், ஆள் இருந்தா பார்த்துப் பேசுவோம், இல்லன்னா வந்துருவோம்’ என்று ‘சும்மா’ பயணிப்பது போன்று கதாபாத்திரங்களின் நடமாட்டத்தை வடித்து ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’டை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

அது நிச்சயம் படத்திற்குப் பலம் சேர்க்காது என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பார்.

ஆனால், இது போன்ற குறைகளைத் தாண்டி இப்படத்தில் சிலாகிக்கச் சில விஷயங்கள் இருக்கின்றன. அது நாயகன் நாயகி பாத்திரங்கள் மட்டுமல்லாமல், அவர்களோடு சேர்ந்து பயணிக்கிற இன்னொரு ஜோடியை திரையில் காட்டிய விதம் அதிலொன்று.

நாயகன் வசிக்கும் குடியிருப்பில், இன்னொரு கட்டடத்தில் இருக்கும் பெண்ணும் ஒரு சிறுவனும் வரை நோக்கி அடிக்கடி கையாட்டி பேசுவதாக சில ஷாட்கள் வருகின்றன. அந்தக் காட்சிகள் கிளைமேக்ஸ் பகுதிக்கு அடித்தளம் இட்டிருப்பது அருமை.

மேற்சொன்னவற்றில் இருக்கும் ‘ப்ளஸ் பாயிண்ட்’கள் மீது கவனத்தைக் குவிக்காமல், நாயகி சொன்ன காரணத்துக்காக அவரது அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழே நாயகன் நாள் முழுக்கக் காத்துக் கிடப்பதாகக் காட்டியிருப்பது கதையின் ஆன்மாவைச் சிதைத்திருக்கிறது.

ஒரு மேடை நாடகத்தை ‘சினிமாவாக’ மாற்றியது போன்றிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், படத்தொகுப்பாளர் தமிழ் அரசன் உள்ளிட்ட இத்யாதி தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பானது, இயக்குநர் விரும்பிய உலகத்தைக் கட்டமைத்திருக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசை காதலில் காதலர்கள் உருக வழி வகுத்திருக்கிறது. குறிப்பிட்ட காட்சிகளை இயக்குநர் என்னவிதமாகத் திரையில் காட்ட விரும்புகிறாரோ, அந்தத் தன்மையைத் தன் இசையின் மூலமாக உருவாக்குவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

நாயகியும் நாயகனும் கடைசியாகச் சந்தித்தபோது நிகழ்ந்தது என்ன என்பதை சின்னச் சின்ன நிகழ்வுகளாகத் திரைக்கதையில் அடுக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் மைய இழையாகவும் அதுவே இருக்கிறது.

கிளைமேக்ஸில் அவையனைத்தும் மொத்தமாக இடம்பெறும்போது, சீரியசான காட்சி சிரிப்பை வரவழைப்பதாக மாறுகிறது. அதற்கு பக்கபலமாக இருப்பது யுவனிசை தான்.

நாயகன் ரியோ ராஜ், நாயகி கோபிகா ரமேஷ் இருவரும் அற்புதமாக நடித்திருக்கின்றனர்.

அதுவும் ஒரேமாதிரியான முகபாவனைகளுடன் ஒருநாள் முழுக்கத் தோற்றமளிப்பது போன்று திரையில் வந்து போயிருப்பது ‘ஆவ்சம்’. அவர்கள் இருவரது நடிப்புதான், திரைக்கதையில் இருக்கும் பொத்தல்களைச் சகித்துக்கொள்ளச் செய்கிறது.

நாயகனின் நண்பனாக வரும் அருணாச்சலேஸ்வரன், அவரது காதலியாக வரும் பௌஸீ இருவருமே ‘செம’ நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

நாயகன், நாயகியை மட்டுமே சுற்றிவரும் கதையில் இருந்து ஆசுவாசம் அளிக்க, இவர்கள் இருவரையும் இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். இன்னும் சிரிப்பூட்டியிருக்கலாம்.

ரெடின் கிங்ஸ்லிக்கு இதில் ‘கௌரவ’ வேடம். தனது இருப்பைச் சரியாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மலையாள திரைக்கதையாசிரியர் ரெஞ்சி பணிக்கர் இதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பில்டப்’ இருக்குமளவுக்கு அவருக்கான காட்சிகள் அமைக்கப்படவில்லை.

இது போக சுரேஷ் சக்ரவர்த்தி, துளசி உட்படச் சுமார் ஒரு டஜன் கலைஞர்கள் இதில் வந்து போயிருக்கின்றனர்.

நாயகனின் சகோதரியாக வரும் ரேஷ்மி கார்த்திகேயன் நம் கவனிப்பைப் பெறுகிறார்.

‘இன்றைய காதலர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி காதலைத் தெரிவிக்கின்றனர்; ஆனால், காதலை முதன்முறையாக உணர்ந்தது எப்போது என்று அறிந்திருக்கிறார்களா’ எனக் கேள்வி எழுப்புகிறது ‘ஸ்வீட் ஹார்ட்’.

அப்படிப்பட்ட உணர்தல் சண்டை சச்சரவுகளைத் தாண்டி ஒரு ஜோடியை உயிர்ப்போடு வாழ வைக்கும் என்கிறது. அதனை அடிக்கோடிட்டுக் காட்டும்விதமான காட்சிகளை இன்னும் அதிகமாக நிறைத்திருந்தால் சுவாரஸ்யம் மேலும் கூடியிருக்கும்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்