Take a fresh look at your lifestyle.

ராஜமவுலி படத்தின் பெயர் ‘கருடா‘?

‘ஈ’யை ஒரு கேரக்டராக வைத்து ‘நான் ஈ’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் எஸ்.எஸ். ராஜமவுலி. இதனைத் தொடர்ந்து ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’, ‘ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய ‘பான் இந்தியா’ சினிமாக்களைத் தந்தார்.

இந்தப் படங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்டு வசூல் அள்ளின. இந்தி சினிமாக்கள்தான் ‘பான் இந்தியா’ எனும் பிம்பத்தை உடைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி.

அவர் கடைசியாக கொடுத்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்த நட்சத்திரங்கள், அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்து அவை ரிலீசும் ஆகிவிட்டன.

ஆர்.ஆர்.ஆர். ஹீரோ ராம்சரண், ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து முடித்து விட்டு, அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

‘பான் இந்தியா’  விருப்பம் நிறைவேறி விட்டதால், ‘பான் வேர்ல்டு’ படத்தை இயக்க வேண்டும் என்பது ராஜமவுலியின் கனவாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் யோசித்தவர், ‘பான் வேர்ல்டு’ சினிமாவைத் தொடங்கி விட்டார்.

ராஜமவுலியின் புதிய படத்தில் தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இருவரும் கை கோர்க்கும் முதல் படம் – இது. ராஜமவுலிக்கு வழக்கமாக கதை –திரைக்கதை எழுதும் விஜயேந்திர பிரசாத், இந்தக் கதையை எழுதியுள்ளார்.

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி, இந்தப் படத்துக்கும் இசை அமைக்கிறார். ‘பான் வேர்ல்டு’ படம் என்பதால் உலகின் பல நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

‘இண்டியானா ஜோன்ஸ்’ பாணியிலான இந்தப் படத்தின் முதல் கட்ட ‘ஷூட்டிங்’ ஐதராபாத்தில் உள்ள தொழிற்சாலையில் தற்போது நடைபெற்று வருகிறது.

முக்கியக் கேரக்டரில் பிரியங்கா சோப்ரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியில் கோலோச்சிய இவர், இப்போது ஹாலிவுட் சினிமாக்களில் நடித்து வருகிறார்.

விஜய் ஜோடியாக, ‘தமிழன்’ படத்தில் நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா, இந்தப் படத்தில் வில்லியாக நடிக்கிறார். ஐதராபாத் ‘ஷூட்டிங்’கில் மகேஷ்பாபு, பிரியங்கா பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், இந்தப் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு பாகங்களாக உருவாகிறது இந்தப் ‘பான் வேர்ல்டு’ படம். முதல் பாகம் 2027 ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2029 ஆம் ஆண்டும் வெளியாகிறது.

படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய். தற்போது ‘SSMB 29’ என பெயர் சூட்டப்பட்டு, படப்பிடிப்பு நடக்கிறது. படம் குறித்த புதிய செய்திகளை ஐதராபாத் ‘ஷூட்டிங்’ முடிந்ததும், ராஜமவுலியும் மகேஷ்பாபுவும் கூட்டாக வெளியிட இருப்பதாகத் தகவல்.

‘கருடா’ என இந்தப் படத்துக்கு ‘டைட்டில்’ வைத்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

– பாப்பாங்குளம் பாரதி