Take a fresh look at your lifestyle.

சர்ச்சையாகும் சிவாஜியின் ‘அன்னை இல்லம்’!

தமிழ்த் திரை உலகின் மாபெரும் அடையாளம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜியின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தில் நிகழும் விவகாரங்கள், உவப்பானதாக இல்லை.

அவரது சாந்தி தியேட்டரை இடித்து விட்டார்கள். இப்போது அவர் வாழ்ந்த ‘அன்னை இல்லம்’ அவலநிலைக்கு உள்ளாகியுள்ளது.

சிவாஜியின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள பட நிறுவனம் – ஈசன் புரொடக்சன்ஸ்.

இந்த நிறுவனம், விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற சினிமாவைத் தயாரித்தனர்.

படத்தைத் தயாரிக்க தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் எனும் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சம் ரூபாய் கடன் வாங்கினர். கடனை திருப்பிக் கொடுக்கவில்லை.

வட்டியுடன் 9 கோடியே 39 லட்சம் ரூபாய் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனபாக்கியம் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரனை நடுவராக கொண்டு, இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடந்தது.

தனபாக்கியம் நிறுவனத்துக்கு ரூ. 9 கோடியே 39 லட்சம் வழங்கக்கோரி, துஷ்யந்துக்கு நடுவர் உத்தரவிட்டார். துஷ்யந்த் பணம் கொடுக்கவில்லை. இதனால் உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. துஷ்யந்த் பதில் ஏதும் அளிக்கவில்லை.

போதுமான அவகாசம் வழங்கியும் பதில் மனு தாக்கல் செய்யாததால், சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

துஷ்யந்த் தந்தை ராம்குமார் தரப்பில், ‘சிவாஜி கணேசனின் வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லை – எனது சகோதரர் நடிகர் பிரபு பெயரில் வீடு உள்ளது – ஜப்தி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, உரிமையாளராக இல்லாவிட்டால் வீட்டை, எப்படி ஜப்தி செய்ய முடியும் எனக் கூறி, ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய அனுமதியளித்ததுடன், பதில் மனுவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

‘செய்திகளின் மூலம் தான் இந்த வீடு சிவாஜி கணேசனின் வீடு என தெரிந்து கொண்டேன் – இந்த வழக்கில் பலமுறை அவகாசம் வழங்கியும், துஷ்யந்த் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்தக் கடன் பிரச்சினை குறித்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும்’ என அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

– பாப்பாங்குளம் பாரதி.