Take a fresh look at your lifestyle.

நாதஸ்வரத்துடன் போட்டியிடும் எஸ். ஜானகியின் குரல்!

திரைத் தெறிப்புகள் – 33:

*
தமிழ் மண்ணுக்கே உரித்தான இசைக் கருவிகளில் நாதஸ்வரம் ஓர் அற்புதம். எத்தனையோ இசைக் கலைஞர்கள் நாதஸ்வர இசையைக் கொண்டாட வைத்திருக்கிறார்கள்.

இந்தியா சுதந்திர அடைந்த பொழுதில் கூட, நாதஸ்வர இசைதான்  பெருமையோடு இசைக்கப் பட்டிருக்கிறது.

திருவாவடுதுறை ராஜரத்தினம், ஷேக் சின்ன மௌலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், எம்.பி.என். சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி இந்த வரிசையில் முக்கியமான நாதஸ்வரக் கலைஞரான காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையும், குரல் பாவங்களில் பல உச்சங்களைத் தொட்ட எஸ். ஜானகி அவர்களின் கனிந்த குரலும் போட்டியிட்டது ஓர் சிறப்பான திரை அனுபவம்.

1962ம் ஆண்டில் வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இடம்பெற்ற “சிங்கார வேலனே தேவா” என்று துவங்கும் அருமையான பாடலுக்கு இசையமைத்தவர் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

நாதஸ்வரத்துடன் போட்டியிடும் இந்தப் பாடலை எழுதியவர் கு.மா. பாலசுப்ர மணியம்.

‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் இந்தப் பாடல் ஆரம்பிக்கும் காட்சியமைப்பே மாறுதலாக இருக்கும்.

திரைப்படத்தில் நாதஸ்வரக் கலைஞராக நடித்திருக்கும் ஜெமினி கணேசன், சாவித்ரியிடம் “சாந்தா உட்கார்…. ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்” என்று கேட்பார்.

அதற்கு “என் இசை… உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்…” என்று மெல்லிய புன்னகையோடு தயங்குவார் சாவித்ரி.

அதற்கு ஜெமினி சில உவமைகளை அடுக்கி- இப்படிச் சொல்வார்.

“இந்த சிங்காரவேலன் சன்னதியில் நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும். பாடு… பாடு… சாந்தா…” என்று சொல்லி முடித்ததும், சாவித்ரிக்காக பாட ஆரம்பிம்பார் ஜானகி.

“சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா…”

என்று பாடியதும், அதைத் தொடர்ந்து ஒலிக்கும் காருக்குறிச்சியாரின் நாத அருவியான நாதஸ்வர இசை.

“செந்தூரில் நின்றாடும் தேவா…
திருச்செந்தூரில் நின்றாடு தேவா
முல்லைச் சிரிப்போடும் முகத்தோடு
நீ வா வா…”

-என்று ஜானகியின் குரலும் ,
நாதஸ்வர இசையும் பின்னிப் பிணைந்திருக்கும் இந்தப் பாடல் அந்தக் காலத்திலேயே தனித்தனி ட்ராக்-குகளாக எடுக்கப்பட்டதாக நேர்ப்பேச்சில் தெரிவித்திருந்தார் எஸ்.ஜானகி.

“செந்தமிழ் தேவனே கேளாய்
இன்று சிறை மீட்டு குறை தீர்க்கவே வா…”

– என்று அந்தப் பாடல் நிறைவடையும்போது நம் மனதில் ஜானகியின் இனிமையான குரலும் ஒட்டியிருக்கும்.

காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரம் இசையும் அதே இனிமையோடு ஒட்டி உறவாடியிருக்கும்.

தமிழ்த் திரையுலகில் இதைப் போலவே பாடலும், நாதஸ்வர இசையும் கைகோர்த்தபடியான பாடல் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இடம் பெற்றிருந்தாலும், அதற்கு முன்பே அதே கலவையோடு முன்தடம் இட்டிருக்கிறது ‘கொஞ்சும் சலங்கை’யின் கொஞ்சலான பாடல்.

-மணா.