Take a fresh look at your lifestyle.

ஒரு பாடல்… ஒரு சவால்: ‘பாவ மன்னிப்பு’ சுவாரஸ்யம்!

​1961-ம் ஆண்டு, திரையுலகமே திரும்பிப் பார்த்த பிளாக் பஸ்டர் திரைப்படம், பாவ மன்னிப்பு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையும், இயக்குநர் ஏ.பீம்சிங்கின் பிரம்மாண்டமான இயக்கமும் படத்தை சிகரம் தொட வைத்தன.
 
ஒவ்வொரு பாடலையும் ரசிகன் இருக்கையைவிட்டு எழ முடியாதபடி அத்தனை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் பீம்சிங்.
 
​”வந்த நாள் முதல்” – சைக்கிளில் சிவாஜி, பின்னணியில் கண்ணைப் பறிக்கும் இயற்கை ரம்யம்!
 
​”காலங்களில் அவள் வசந்தம்” – கார்டன் செட்டிங்கில் ஒரு கிளாஸிக்!
 
​”பாலிருக்கும் பழமிருக்கும்” – சிவாஜியின் ஹம்மிங் மட்டும் போதும் என்று கவிதை போல எடுத்த காட்சி!
 
– ​இப்படி எல்லாப் பாடல்களும் கொண்டாட்டமாய் இருக்க, ஒரு பாடல் மட்டும் சோகத்தின் உச்சம்: “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்!”.
​கவியரசரின் வரிகள் சாதாரணமானவை அல்ல. சிரிப்பு, அழுகை, மற்றும் சிரித்தபடியே அழும் நிலை – இந்த மூன்று உணர்ச்சிப் பிரவாகத்தையும் ஒருங்கே விவரிக்கும் வரிகள் அவை.
 
இந்தப் பாட்டை சாதாரணமாக எடுத்தாலே வெற்றிதான். ஆனால்… ​நடிப்பின் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் கையில் இருக்கும்போது, சாதாரணமாய் எடுக்க முடியுமா?
 
​பீம்சிங்கிற்குள் ஒரு மின்னல் வெட்டியது. இந்தப் பாடலை வேறு யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு கோணத்தில் எடுக்க வேண்டும். இந்தப் படத்தின் சோகப் பாட்டைக் கூட, ரசிகர்கள் கைதட்டி ரசிக்க வேண்டும்!
​சிரிக்க ஒரு க்ளோசப், அழ ஒரு க்ளோசப், இரண்டின் கலவைக்கு இன்னொன்று – இது சுலபம். ஆனால் பீம்சிங்கின் கற்பனை அதற்கும் மேலே பறந்தது.
 
​”இந்த மூன்று உணர்ச்சி பாவங்களையும் ஒரே சமயத்தில், ஒரே ஃப்ரேமிற்குள் காட்டினால் எப்படி இருக்கும்?”
 
​இதுதான் பீம்சிங்கின் மனதில் உதித்த மேஜிக்! இன்றுள்ள கிராபிக்ஸ் வசதிகள் அப்போது இல்லை. எல்லாமே மேனுவல் உழைப்பு, ஃபிலிம் சுருளில் ரிஸ்க் எடுக்கும் வேலை.
 
ஆனால், சிவாஜியை வைத்து எடுக்கும்போது ஏன் யோசிக்க வேண்டும்?
​தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்-மிடம் தனது புதுமையான ஐடியாவை முன்வைத்தார் பீம்சிங்.
 
அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை: “ஃப்ரேம் சரியாக இருந்தால் போதும், உடனடியாகச் செய்துவிடலாம்!”
தயாரானார் பீம்சிங். சிவாஜி கணேசனிடம் காட்சியின் உத்தியை விளக்கினார். அவருக்கும் இதில் ஒரு சவால் உணர்ச்சி தொற்றிக்கொண்டது!
20 நிமிடங்களில் முடிந்த மாஸ்டர் பீஸ்!
படப்பிடிப்பு தொடங்கியது. பீம்சிங்கின் டைரக்‌ஷன், 10 நிமிடங்கள்! கேமராவின் ஃப்ரேமிங், 10 நிமிடங்கள்! மொத்தம் 20 நிமிடங்களுக்குள் அந்தச் சிக்கலான “இன்-கேமரா காம்போசிட் ஷாட்” படமாக்கப்பட்டு முடிந்தது!
இதைக் கண்ட ஏவிஎம் நிறுவனர் மெய்யப்ப செட்டியார் வியந்து போனார். “இந்த ஒரு ஷாட்டுக்காக ஒருநாள் வீணாகிவிடுமோ என்று கவலைப்பட்டேண்டா பீமு!” என்று நெகிழ்ந்துள்ளார்.
சிவாஜியின் ஆளுமை!
அதற்குப் பீம்சிங் சொன்ன பதில் தான், அந்த வரலாற்று ஷாட்டின் ரகசியம்:
 
​”சிவாஜி கணேசன் இருக்கும்போது நான் நடிகரைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டேன்.
 
என் கவனம் முழுவதும் ஃப்ரேமிங்கில் மட்டுமே இருக்கும். காரணம் என்னவென்று தெரியவில்லை, கேமரா முன் நிற்கும் சிவாஜி கணேசனின் ஒவ்வொரு அசைவும் துல்லியமாக இருக்கும். அவரது நடிப்பு, நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாக வாரிக் கொடுக்கும்!”
சிவாஜியின் துல்லியமான டைமிங், ஒரே இடத்தில் நின்று மூன்று வெவ்வேறு உணர்ச்சிகளை ஒரு நொடிகூடப் பிசகாமல் கொடுத்ததால்தான், அந்தப் பாடல் காட்சியின் மூன்று முகங்களும் ஒரே ஃப்ரேமிற்குள் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்து, திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பதிந்தது!
 
முதலில் சிவாஜி கணேசனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!
– செந்தில்வேல் சிவராஜ்