Take a fresh look at your lifestyle.

கதையே இல்லாமல் கதை சொன்ன ‘பாஸ்மார்க்’

‘கல்யாண பரிசு’ மூலம் இயக்குனரான ஸ்ரீதர் பின்னாட்களில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘சிவந்த மண்’, ‘உரிமைக்குரல்’, ‘ஓ மஞ்சு’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைவெல்லாம் நித்யா’ எனப் பல வித்தியாசமான திரைப்படங்களைத் தந்திருக்கிறார்.

ஆனாலும் அவரது ‘தேனிலவு’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டி வரை உறவு’, ’தென்றலே என்னைத் தொடு’ போன்ற படங்களுக்கான ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

காரணம், மிக மெலிதான கதையைக் கொண்டிருந்தாலும் திரைக்கதை வழியே ஸ்ரீதர் உருவாக்கிய மாயாஜாலம். அப்படிப்பட்ட சிறந்த பொழுதுபோக்கு படங்களை ஆக்குவது எளிதான காரியமல்ல.

அவற்றின் வெற்றி எந்தளவுக்கு மிகப்பெரியதாக இருக்குமோ, அதே அளவுக்கு அவை தோல்வியுறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

சில நேரங்களில் திரையுலக ‘ட்ரெண்ட்’டில் இருந்து விலகி நிற்பதும் கூட, அப்படிப்பட்ட படங்களை ரசிகர்கள் காணாமல் தவிர்க்கக் காரணமாகிவிடும்.

கிட்டத்தட்ட அந்த வரிசையில் இடம்பெறுகிற பொழுதுபோக்கு படங்களில் ஒன்று ‘பாஸ்மார்க்’. 1993-ம் ஆண்டு ஜூலை 23 அன்று இப்படம் வெளியானது.

பாலகிருஷ்ணன் இதனை இயக்கியிருந்தார். தேவா இதற்கு இசையமைத்திருந்தார்.

‘பாஸ்மார்க்’ கதை!

இப்படத்தின் கதையே நாயக பாத்திரமான முரளியின் வித்தியாசமான குணாதிசயம் சார்ந்தது தான். யாராவது, ஏதாவதொரு சவாலை முன்வைத்தால், ‘நான் தயார். எவ்வளவு பந்தயம்’ என்று களத்தில் இறங்குவது முரளியின் இயல்பு.

இப்படி இருக்கும் ஒருவர் வேலை எதையும் பார்க்காமல், பெற்றோர் ஆதரவில் நாளும் வளர்ந்துகொண்டே இருப்பார். அந்த பெற்றோரும் ‘நம்ம புள்ளைதானே’ என்று அவரைக் கண்டும் காணாமலும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட ஒரு இளந்தாரிக்கு அதே வயதில் சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்களும் அவரை மாதிரியே வேலைவெட்டி எதற்கும் செல்ல மாட்டார்கள்.

பலரிடம் பந்தயம் கட்டி வெற்றி பெற்ற நாயகன், ஒருநாள் வில்லனிடம் தோற்றுப் போவார். அதனால் நாயகியின் குடும்பம் பாதிப்புக்கு உள்ளாகும்.

செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில், நாயகியின் குடும்பத்தினருக்கு உதவ முற்படுவார் நாயகன். இதிலும் முரளி அதையே செய்கிறார். நாயகியாக வரும் சாந்தியைக் கவர்கிறார். அவரது காதலைப் பெறுகிறார்.

கடைசியில், இருவரும் பெற்றோர்கள் ஆசியுடன் ஒன்றுசேர்ந்தார்களா என்பதை ஒரு ‘பந்தயத்துடன்’ நிறைவு செய்வதாக அமைந்திருக்கும் ‘பாஸ்மார்க்’.

‘உங்க பையன் / பொண்ணு படிப்புல கெட்டியா’ என்று கேட்பவர்களிடம், ‘இல்லங்க, பாஸ்மார்க் வாங்கிடுவான் / ள்’ என்று சொல்வதில் சில பெற்றோர்களுக்குச் சங்கடமாக இருக்கலாம்.

ஆனால், சினிமாவுலகில் அந்த ‘பாஸ்மார்க்’ வார்த்தை ஒருகாலத்தில் சகஜமானதாக இருந்தது. பிரமாண்டமான வெற்றியைப் பெறாவிட்டாலும், ‘ஓகே’ என்று சொல்லும்படியான வரவேற்பைப் பெற்றன. அதற்கேற்றவாறு அவற்றின் உள்ளடக்கம் இருக்கும்.

கிட்டத்தட்ட அப்படியொரு வரவேற்பு கிடைத்தால் போதும் என்று இயக்குனர் இந்த டைட்டிலை சூட்டியிருப்பாரோ என்று யோசித்ததுண்டு.

ஆனால், இப்படத்தின் உள்ளடக்கம் அப்படி இருக்காது. நல்லதொரு பொழுதுபோக்கை அளிக்க முயற்சித்திருக்கும்.

அதற்கேற்ப இதில் பாடல்கள், சண்டைக்காட்சிகள், நகைச்சுவை, செண்டிமெண்ட் என அந்த காலகட்டத்து கமர்ஷியல் படங்களுக்கான ‘பேக்கேஜ்’ சரியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

தேவாவின் பாடல்கள்!

‘பாஸ்மார்க்’ என்றவுடன் நினைவுக்கு வருவது சிவரஞ்சனி உடன் ராம்கி பாடி ஆடுகிற ‘ஏறிக்கய்யா ஏறிக்கய்யா என் ரிக்‌ஷாவுல’ பாடல்தான். இன்றைய ‘ஜென்ஸீ’ தலைமுறையையும் ‘கூஸ்பம்ஸ்’ ஆக்கிற அளவுக்கு ‘செமயான’ குத்துப்பாடல் அது.

அப்பாடலோடு இப்படத்தில் வரும் ‘உன் புன்னகை போதுமடி’, ‘பட்டிக்காட்டு குட்டி இவ பொல்லாத ஆளு’ பாடல்களையும் புறநகர் தனியார் பேருந்துகளில் ஒருகாலத்தில் ரசித்த அனுபவம் சிலருக்கு இருக்கக்கூடும். இப்போது கேட்டாலும், அந்த நினைவுகள் அவர்களுக்குள் கிளர்ந்தெழும்.

தேனிசைத் தென்றல் தேவாவின் ‘ஒரிஜினாலிடி’யை தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்களுக்கு இப்படப் பாடல்கள் ஒரு உதாரணம்.

போலவே, ‘ரொமான்ஸ் காமெடி’ வகைமைக்கு ஏற்ற பின்னணி இசையையும் தந்திருப்பார்.

படத்தின் பட்ஜெட் எந்தளவுக்கு இருந்தது என்று தெரியவில்லை. ஏனென்றால், காட்சிகள் நிகழும் களத்தைச் சரிவரக் காட்டாதவாறு முழுக்க ‘க்ளோஸ் அப்’ ஷாட்களை இதில் நிறைத்து வைத்திருப்பார் ஒளிப்பதிவாளர் நிவாஸ்.

இதில் நட்சத்திரப் பட்டாளம் அதிகம் என்பது அதற்கான காரணமாக இருக்கலாம். அவர்களது நடிப்புக்கு மரியாதை தர வேண்டுமென்று அவரும் இயக்குனரும் விரும்பியிருக்கலாம்.

இந்தப் படத்தில் ராம்கியோடு வரும் விவேக், கிங்காங் மற்றும் எஸ்.எஸ்.சந்திரன், சச்சு, வாசு விக்ரம், வடிவுக்கரசி, விஜய் கிருஷ்ணராஜ் என்று பலருக்கு முக்கியத்துவம் தந்திருப்பார் இயக்குனர்.

நாயகிகள் கஸ்தூரி, நந்தினி இருவருக்கும் பெரிதாக இதில் காட்சிகள் இருக்காது. அதேநேரத்தில், அவர்களது பாத்திரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்காது.

ஜனகராஜின் நகைச்சுவை வெடிச்சிரிப்புக்கு வழிவகுக்காவிட்டாலும் ‘புன்னகை’ புரிய ஏத்ததாக இருக்கும்.

கனமான வில்லன் பாத்திரம் இல்லாதபோதும், இதுபோன்ற காமெடி படங்கள் எளிதாக கிளைமேக்ஸில் பதற்றம் கொள்ள வைக்கும். அதற்குத் தக்கவாறு நாயகனின் ‘பந்தயம்’ இடுகிற குணத்தைப் பயன்படுத்தியிருப்பதும் இப்படத்தின் உள்ளடக்கம் கனகச்சிதமாகத் திட்டமிடப்பட்டதைக் காட்டும்.

தொண்ணூறுகளில் ‘மருதுபாண்டி’, ‘இணைந்த கைகள்’ வழியே ஆக்‌ஷன் ஹீரோவாக முத்திரை பதித்த பிறகும் கூட ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட் ட்ராமா, ஹாரர் என்று விதவிதமான கதைகளில் நடித்து வந்தார் ராம்கி. தெலுங்கு திரையுலகில் வரவேற்பு கிடைத்தும் கூட, தமிழில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ராம்கிக்குப் பெரிதாக ரசிகர்மன்றங்கள் இல்லாவிட்டாலும் 70ஸ், 80ஸ் கிட்ஸ்களில் பலர் அவரை ரசித்திருப்பார்கள் என்பது திண்ணம். முக்கியமாக, அவரது ஹேர்ஸ்டைல் மற்றும் அலட்டிக்கொள்ளாமல் யதார்த்தமாக நடிக்கிற பாங்கு பலருக்குப் பிடிக்கும். விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் அதற்கு மரியாதை செலுத்தியிருப்பார் இயக்குனர் நிதிலன் சாமிநாதன்.

அப்படிப் பலரது மனதில் பதிந்திருக்கிற ராம்கியின் பிம்பத்தைத் தாங்கிப் பிடிக்கிற ஒரு திரைப்படம் ‘பாஸ்மார்க்’. இப்போதும் இதனை யூடியூபிலோ அல்லது தொலைக்காட்சியிலோ காணும்போது மனம் இலகுவாகுவதை உணர முடியும்.

கதையே இல்லாமல் திரையில் கதை சொல்வது கடினம். அதனாலேயே, இன்று ஏதேனும் ஒரு களத்தை, பிரச்சனையைக் கையிலெடுத்துக்கொண்டு ‘சேஃப்டி கேம்’ ஆடுகின்றனர் பல இயக்குனர்கள். அப்படி ‘தனித்துவத்தை’க் காட்டுவதுதான் எளிதாகக் கவன ஈர்ப்பை உருவாக்கும் என்பதை மறுக்க முடியாது.

ஆனால், அப்போக்கில் இருந்து விலகி நிற்கிற இயக்குனர்களை, கதாசிரியர்களை, அவர்களது படைப்புகளை நாம் முழுமையாகக் கவனித்து உள்வாங்குகிறோமா என்ற கேள்வி பல ரசிகர்களிடத்தில் இன்றளவும் இருந்து வருகிறது. அக்கேள்வியை எழுப்புகிற படங்களில் ஒன்றாக விளங்குகிறது ‘பாஸ்மார்க்’. 

  • உதயசங்கரன் பாடகலிங்கம்