Take a fresh look at your lifestyle.

கவனம் ஈர்த்த சில ட்ரெய்லர்கள்!

124

ஒரு திரைப்படத்தைக் காணச் செய்யப் பல உத்திகள் திரைத்துறையினரால் பின்பற்றப்பட்டு வருகின்றன. சுவரொட்டிகள், தட்டிகள், பேனர்கள் முதல் தீப்பெட்டி போன்ற மக்கள் பயன்பாட்டுப் பொருட்கள் சிலவற்றிலும் கூடத் திரைப்படங்கள் வெளியீடு சம்பந்தப்பட்ட விளம்பரங்களை வெளியிட்டு வந்தனர்.

தினசரிகள், பத்திரிகைகள் போன்ற ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்கி பின்னர் வானொலி, தொலைக்காட்சி என்று நீண்டு இன்று இணைய வெளியை நோக்கி நகர்ந்து வருகிறது அந்த உலகம்.

அந்த வரிசையில் இன்று பிரதானமாக இருப்பது டீசர், ட்ரெய்லர் வெளியீடுகள். இதனை ‘சைடு ரீல்’ என்று அழைத்த காலமொன்று உண்டு.

முன்பெல்லாம் ட்ரெய்லர் என்பது தியேட்டர்களில் இடைவேளை நேரத்தில் திரையிடப்படும். அதைப் பார்க்கவே தனியாகவே ஒரு கூட்டம் வரும்.

பார்க்க வந்தது மட்டமான படமாக இருந்தால், தங்களது நட்சத்திரம் நடித்த அந்த ட்ரெய்லரை பார்த்ததே போதும் என்று இரண்டாம் பாதியில் ஏறக் கட்டுவார்கள்.

அதற்கேற்ப, சம்பந்தப்பட்ட படத்தின் ட்ரெய்லரும் எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைக்கும் அளவுக்கு இருக்கும். போலவே, எல்லா படங்களும் அப்படியொன்றைக் கொண்டிருக்கவில்லை.

காரணம், அதற்காகத் தனியாகச் செலவு பிடிக்கும். பிலிம் ரோல்களை பிரிண்ட் செய்து, தனியாகப் படத்தொகுப்பாளர் வைத்து ‘கட்’ செய்து பின்னணி இசையைக் கோர்க்க வேண்டும் என்பதுதான்.

மிக எளிமையான படங்களை எடுத்து தன்னையும் தான் சார்ந்த தயாரிப்பாளர்களையும் வளப்படுத்திய இயக்குநர் விக்ரமன், தான் அறிமுகமான ‘புது வசந்தம்’ படத்திற்குக் கண்டிப்பாக ட்ரெய்லர் வேண்டும் என்று தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் வலியுறுத்தினாராம். அவரும் செலவைக் கண்டுகொள்ளாமல், அதனைத் தயார் செய்ய உதவியிருக்கிறார்.

விக்ரமன் எதிர்பார்த்தது போலவே, ‘நான்கு ஆண்களுடன் ஒரு பெண் எப்படி ஒரே அறையில் நட்புணர்வுடன் வாழ்கிறாள்’ என்பதைச் சொன்ன அப்படம் முதல் நாளே ‘ஹவுஸ்ஃபுல்’ ஆக அந்த ட்ரெய்லர் உதவியிருக்கிறது.

இப்போது ஒரு படம் வெளியாவதற்கு முன் ‘ட்ரெய்லர்’ வெளியாவது கட்டாயமாகிவிட்டது. அது வராவிட்டால்தான், ‘அப்படியா’ என்கின்றனர் ரசிகர்கள்.

இந்த வாரம் வந்த ட்ரெய்லர்களில் நம் கவனம் கவர்ந்தது ‘ஆகக் கடவன’ ட்ரெய்லர்.

முழுக்கப் புதுமுகங்கள் நடித்திருக்கிற, பணியாறியிருக்கிற இப்படமானது ஆளில்லா ஒரு சாலையில் ‘பஞ்சர்’ ஆகி நிற்கிற வண்டிகளை குறிவைத்து திருடிச் செல்கிற ஒரு கும்பலின் ‘அட்ராசிட்டி’யை பேசுகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் வகைமையில் இருக்கிற படம் என்றாலும், ஒரே இடத்தை மட்டுமே திரைக்கதை சுற்றிச் சுற்றி வருமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. அதையும் மீறிக் கவர்கிறது தர்மா எழுதி இயக்கியிருக்கிற இப்படத்தின் ட்ரெய்லர்.

ரொமான்ஸ், ஆக்‌ஷன், த்ரில்லர், ட்ராமா, பயோபிக் என்று ட்ரெண்ட் மாறினாலும் கூட, இடையிடையே ஒரு ‘ஹாரர்’ காமெடி வந்து குட்டையக் குழப்புவது சமீபகாலமாகத் தொடர்ந்து வருகிறது.

அந்த வரிசையில் இந்த வாரம் வந்திருக்கிறது ‘ஜின் – தி பெட்’ பட ட்ரெய்லர். ஏற்கனவே இந்த ‘ஹாரர் கான்செப்ட்’டில் ஸ்தம்பிக்க வைக்கிற படங்கள் வந்திருக்கின்றன.

முகேன் ராவ், பவ்யா த்ரிக்கா, ராதாரவி, பாலசரவணன், இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி உட்படப் பலர் நடித்திருக்கும் இப்படம் அந்த வரிசையில் சேருமா எனத் தெரியவில்லை. இதனை இயக்கியிருக்கிறார் டி.ஆர்.பாலா.

ஜுனியர் என்.டி.ஆர். இந்தித் திரையுலகில் கால் பதிக்கிற திரைப்படம் ‘வார் 2’. ஹ்ரித்திக் ரோஷன் நாயகனாக நடிக்கிற இப்படத்தில் அவர் வில்லன். அயன் முகர்ஜி இயக்கியிருக்கிற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் ‘டப்’ ஆகி வெளியாகிறது.

ட்ரெய்லரில் படுகவர்ச்சியாகத் தோன்றியிருக்கிறார் கியாரா அத்வானி. உண்மையில் இந்தப் படத்தில் அவர் ‘கேம் சேஞ்சர்’ ஆக இருக்கிறாரா எனத் தெரியவில்லை.

தமிழ்ப் பதிப்பு ட்ரெய்லர் மட்டுமே சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது. அதிரடிப் பட பிரியர்கள் இந்த ட்ரெய்லரை நிச்சயம் திரும்பத் திரும்பப் பார்ப்பார்கள்.

‘நீ என் உயிரைக் காப்பாத்துனவன்’ என்று ‘நாயகன்’ படச் சாயலோடு தொடங்குகிறது ‘தக் லைஃப்’ ட்ரெய்லர். கமல்ஹாசன், சிம்பு இருவரும் நேருக்கு நேர் மோதுகிற காட்சியாக்கத்தைக் கொண்டிருக்கிறது இப்படம்.

இதுவும் ஒரு ‘கேங்க்ஸ்டர் ஆக்‌ஷன் ட்ராமா’ தான் என்கிறது ட்ரெய்லர். த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக்செல்வன், நாசர் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருப்பதால் சுவாரஸ்யம் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘விண்வெளி நாயகா’ என முடிகிறது ட்ரெய்லர். அது கமல் ரசிகர்களை குஷிப்படுத்தும்.

சில படங்கள் முழுக்க நகைச்சுவையாக இருக்கும். அதை கோடிட்டுக் காட்டுகிற வகையில் சில ட்ரெய்லர்கள் இருக்கும். அப்படியொன்றாக இருக்குமோ இது என்கிற அபிப்ராயத்தை உண்டுபண்ணுகிறது ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்’ பட ட்ரெய்லர். விக்ரம் ராஜேஷ்வர் – அருண் கேசவ் இயக்கியிருக்கிற இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார்.

வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ், ராஜேந்திரன், ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்க்ஸ்லி, இளவரசு, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உடன் இதில் மறைந்த ஷிஹான் ஹுசைனியும் நடித்திருக்கிறார்.

எத்தனை நாள் காத்திருப்பைக் கடந்து வந்தாலும், நிச்சயம் இது ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையைத் தாங்கி நிற்கிறது இந்த ட்ரெய்லர்.

வழக்கம்போல சில ஆங்கில படங்களின் தமிழ்ப் பதிப்பு ட்ரெய்லர்கள் நம்மைச் சட்டென்று கவரும். அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருக்கிறது ‘ஜுராசிக் பார்க் ரீபர்த்’ ட்ரெய்லர்.

‘சத்தம் போடாதீங்க, அந்த மிருகம் நம்மளை நோக்கி வந்துகிட்டு இருக்கு’ என்று அலறுகிற குரலில் வசனம் பேசுகிற படம் இது என்பதைப் பெயரை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.

‘அதை ஏன்யா இவ்ளோ சத்தமா சொல்ற’ நாம் அலறுகிற வண்ணம் எஸ் எஃப் எக்ஸ் மற்றும் வி எஃப் எக்ஸ் இந்தப் படத்தில் தரமாக இருக்கும் என்று நம்பலாம்.

அதற்கு வித்திடுகிறது ஸ்கார்லெட் ஜோகன்சன், மஹர்ஷலா அலி, ஜோனதன் பெய்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியிருக்கிற ‘ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த்’ ட்ரெய்லர்.

-மாபா