Take a fresh look at your lifestyle.

வலியின் ரணத்தை வார்த்தையில் சொன்ன வாலி!

மனிதனின் உணர்வுகளை, ஏக்கங்களை, வலிகளை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில்தான் ஒரு திரைப்படத்தில் பாடல் இடம்பெற்றிருக்கும்.
 
அந்த வகையில் இளம் விதவை ஒருவரின் உணர்வுகளை சொன்ன பாடல்தான், “அழகு மலராட” பாடல்.
 
நான் இப்படியே இருக்கிறேன், என் வாழ்வு இப்படி வீணாகிவிட்டதே, தனக்கு ஒரு ஆண் துணை இல்லையே என்பதை ஸ்ரீரங்கத்து கவிஞன் வாலி பாட்டில் எழுதினார் என்று சொல்வதை விட உணர்வுகளை உரித்துப் போட்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு பரிசலில் செல்லும் முன்பே படகு கவிழ்ந்து மரணித்துவிட,
 
ராசியில்லாத பெண் என ஊர் முத்திரை குத்த, அவரின் வாழ்க்கை கேள்விக்குறியாக, அவரின் தந்தை குடித்துக் குடித்து குடி நோயாளியாக… – இப்படிச் செல்கிறது அவரின் சூழல்.
 
இந்தச் சூழலில் தனக்கு தெரிந்த பரதக்கலை மூலம் நாயகி சூழ்நிலையை உலகுக்கு எடுத்துரைக்கிறாள். தன் சோக சூழ்நிலையைச் சொல்ல வேண்டும்.
 
அந்த சோக சூழ்நிலையானது நம் உணர்வுகளை உருக்குவதாய் மட்டுமல்லாமல், ஆழ்ந்த புலமையுடன் எழுதப்பட்ட வரிகளாய் இருக்க வேண்டும்.
 
அத்தகு வரிகளைத் தான் கவிஞர் வாலி எழுதி இருந்தார்.
 
சமூகத்தில் முற்றிலும் ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலியை இந்த வழிகளில் எல்லாம் சொல்ல முடியுமா என ஆச்சரியப்பட வைத்தார். இதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தைகள் ஆழமானவை.
 
விரல் கொண்டு மீட்டாமல்…
வாழ்கின்ற வீணை…
குளிர் வாடை கொஞ்சாமல்…
கொதிக்கின்ற சோலை…
 
ஆகாயம் இல்லாமலே…
ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று…
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது…
 
ஊதாத புல்லாங்குழல்…
எனதழகு சூடாத பூவின் மடல்
 
இந்த வரிகளைக் கேட்கும்போது இப்படி எல்லாம் ஒரு பெண்ணின் கணவன் இல்லாத ஏக்கத்தை எழுத முடியுமா?  வியத்தகு பாடல் வரிகள் என வியக்க வைத்தார் கவிஞர் வாலி.
 
இதற்கு மேல் ஒரு பெண்ணின் கணவன் இல்லா ஏக்கத்தை, அதுவும் வாலிப வயது பெண்ணின் கணவன் இல்லா ஏக்கத்தை அழகா சொல்லி விட முடியாது.
 
பாடல் வரிகளோடு சேர்த்து இளையராஜா அவர்களின் இசையும், ரேவதி அவர்களின் அழகான நடனமும், ராகவேந்தர் அவர்களின் ஜதி சொல்லும் விதமும் அனைவரையும் கவர்ந்தது.
 
இப்பாடல் சந்த்ரகான்ஸ் என்ற கர்நாடிக் ராகத்தில் வந்த பாடல் இது. ஜானகியம்மா அவர்களின் குரலில் அருமையான பாடல்.
 
படம் வந்து 41 வருடம் கழித்தும் கேட்டவுடன் மனதில் பச்சக்கென்று ஒட்டி கொண்டு காலை ஒருமுறை கேட்டுவிட்டால் அன்றைக்கு முழுவதும் மனதில் நின்று நர்த்தனமாடும் பாடல் இது.
 
– அபிராம் அருணாச்சலம்