Take a fresh look at your lifestyle.

80 வயதில் ஹீரோவான எஸ்.ஏ. சந்திரசேகர்!

அண்மையில் நடந்த சினிமா படவிழாவில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா  பேசும்போது, “தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. புதியவர்கள் வர வேண்டும்’ என போகிற போக்கில் சொல்லி வைத்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று புதிய ஹீரோக்கள் வர ஆரம்பித்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், 80 வயதான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இன்னொருவர் கிட்டத்தட்ட அவரது வயதை எட்டிய நகைச்சுவை நடிகர் செந்தில். இருவருமே, கதாநாயகன்களாக இப்போது நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

எஸ்.ஏ.சி., ஹீரோவாக நடிக்கும் படம் – ‘கூரன்’. அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்க,  சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நாய் முதன்மைக் கதாபாத்திரத்திலும் அந்த நாய்க்கு நீதி பெற்றுக்கொடுக்கும் வழக்கறிஞராக எஸ்.ஏ. சந்திரசேகரனும் நடித்துள்ளனர்.

ஒய்.ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்டோரும்  நடித்துள்ளனர். ‘கூரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு சுவாரஸ்மாக இருந்தது.

அதன் ஒரு பகுதி:

“வயதை மீறிய உற்சாகமும் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் கடவுள் கொடுத்த பரிசு – ஓடிக் கொண்டே இருக்கிறேன்- இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் – மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் – எதையும் பாரமாகத் தலையில் போட்டுக் கொள்வதில்லை.

கடைசி வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் – எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

‘இந்தப் படத்தை பற்றி சொல்ல வேண்டும் – பலவகையிலும் ‘கூரன்’ வித்தியாசமான படம் – என்னுடைய 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ‘கூரன்’ வித்தியாசமான படம்  என்று சத்தியம் செய்வேன்.

வாய்பேச முடியாத – ஆனால், அறிவுள்ள ஜீவனாக இருக்கும் ஒரு நாய், தன்னுடைய சட்டப் போராட்டத்திற்கு நீதிமன்றம் வரை சென்று சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சி சொல்கிறது – அது எப்படிச் சொல்கிறது என்பதுதான் படத்தின் சுவாரசியம்.

இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை – டூயட் இல்லை – டான்ஸ் கிடையாது – இதில் நடித்தவர்களில் நானும் ஒய்.ஜி. மகேந்திரனும் 80 வயதுக்காரர்கள்

இந்தப் படத்தை டெல்லியில் (முன்னாள் மத்திய அமைச்சர்) மேனகா காந்தி சமீபத்தில் பார்த்துள்ளார் – படத்தைப் பார்த்து விட்டுக் கண் கலங்கினார்” என நெகிழ்ந்தார் ஏஸ்.ஏ. சந்திரசேகர்.

‘கேங்ஸ்டர்’ பட ஹீரோ செந்தில்!

இப்போது, நகைச்சுவை நடிகர் செந்தில் ஹீரோவான கதை.

கவுண்டமணியுடன் இணைந்து பல ஆண்டுகள், கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர்  செந்தில். பழம்பெறு(ரு)ம் உதாரணம் ‘கரகாட்டக்காரன்’. சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்து வாங்கியவர்.

ரஜினிகாந்துடன் வீரா, அருணாச்சலம், படையப்பா போன்ற படங்களில் பட்டையைக் கிளப்பியவர் செந்தில். கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த செந்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

கதையின் நாயகனாக செந்தில் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து பொன்னம்பலம், கனல் கண்ணன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கேங்ஸ்டராக நடிக்கிறார், செந்தில்.

சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தை முரளி பிரபாகரன் தயாரிக்கவுள்ளார். படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றுள்ளது.

நாற்காலிக்கான போட்டியைக் கதைக்களமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நான்கு கேங்ஸ்டர்களுக்கு இடையில் நடக்கிறது. இதில் வெல்வது யார் என்பதே கதையின் கரு.

சூர்யா சொன்னார்.. எஸ்.ஏ.சி.யும், செந்திலும் வந்து விட்டார்கள்.

– பாப்பாங்குளம் பாரதி.