கீர்த்தி சுரேஷ், ராதிகா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, சென்ராயன், சூப்பர் சுப்பாராயன், அஜய் கோஷ், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, அக்ஷதா அஜித், குகாஸினி, காயத்ரி ஷான் நடிப்பில் ஜே.கே சந்துரு இயக்கியிருக்கும் படம் ‘ரிவால்வர் ரீட்டா’.
Passion Studios மற்றும் The Route நிறுவனங்கள் சார்பில் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரித்துள்ளனர்
பாண்டிச்சேரியின் தாதாவான டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்பாராயன்) ஜெயபால் ரெட்டி (அஜய் கோஷ்) என்ற ஆந்திர தாதாவின் உறவினரை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கொன்று விட, பதிலுக்கு டிராகுலா பாண்டியனை கொலை செய்யத் திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறான் ரெட்டி.
நிலம் வாங்கிய விஷயத்தில் ஏமாந்து பல கோடி இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

டிராகுலா பாண்டியனின் தலையைக் கொண்டு வருவோர்க்கு பல கோடி ரூபாய் பரிசு என்று அறிவிக்கிறான் ரெட்டி.
லோக்கல் தாதா ஒருவன் (கல்யாண்) லல்லு (சுரேஷ் சக்கரவர்த்தி) என்ற பெண் புரோக்கரை வைத்து, டிராகுலா பாண்டியனை மயக்கி அங்கே வைத்துக் கொன்று தலையை எடுக்க முயல்கிறான்.
போதையில் டிராகுலா பாண்டியன் வீடு மாறிப் போய்விடுகிறார். அந்த வீடுதான் தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி (ராதிகா) மூத்த மகள் ரீட்டா (கீர்த்தி சுரேஷ்) குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட மூத்த பெண் (காயத்ரி ஷான்), இளைய மகள் (அக்ஷதா அஜித்) ஆகியோர் இருக்கிறார்கள்.
போதையில் டிராகுலா பாண்டியன் உள்ளே போய் தள்ளாட, அம்மா அடித்த அடியில் பாண்டியன் உயிர் போகிறது.
லோக்கல் தாதா அந்த வீட்டுக்குள் போய், பிணத்தைத் தூக்கி தலையை வெட்டி ரெட்டியிடம் கொடுத்து பணம் வாங்க திட்டமிடுகிறான்.
ஆனால், அதற்குள் பெண்கள் பயந்து பாடியை எங்காவது கொண்டு போய் வீசுவதற்கு, ஒரு கார் வாங்குகிறார்கள். பாண்டியனின் துப்பாக்கியை ரீட்டா எடுத்துக் கொள்கிறாள்.
லோக்கல் தாதவைக் கொன்று அந்த இடத்துக்கு வருகிறான் துணை தாதா ஒருவன்.
போலீஸ்காரர் ஒருவரின் (ஜான் விஜய்) அடாவடியை யூ டியூபில் போட்டாள் என்பதற்காக ரீட்டா மீது அவர் கோபமாக இருக்கிறார்.

காரில் பிணத்தை மறைக்க ரீட்டா மற்றும் குடும்பம் காரில் பயணிக்க, துணை தாதா, போலீஸ், பாண்டியன் மகன் ஆகியோர் அந்தக் காரை துரத்துகிறார்கள்.
காரணம் அந்தக் கார் டிராகுலா பாண்டியனிடம் இருந்து திருடப்பட்ட கார். அது ரீட்டா குடும்பத்துக்கு தெரியாது.
ரீட்டா அண்ட் ஃபேமிலிக்கு என்ன ஆனது? பாண்டியன் தலை யாருக்குப் போனது? ரெட்டியால் தலையை வாங்க முடிந்ததா? என்பதே ‘ரிவால்வர் ரீட்டா’.
டிராகுலா பாண்டியன் இடம் மாறிப் போவது, சாவது என்ற டுவிஸ்ட்டுகள் ஓகே தான். ஆனால் டீடெய்ல் செய்வதில் எதைக் காமெடியாக சொல்வது, எதை சீரியசாக சொல்வது என்பதில் பலத்த குழப்பம்.
டிராகுலா பாண்டியன் செத்த பிறகு ரீட்டா வீட்டில் எல்லோரும் அந்தக் கால தூர்தர்ஷன் டிராமா போல பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
அதே நேரம் காமெடிக்கு அப்பாற்பட்டு சில திருப்பங்கள் அருமை.
ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட சிலர் அவ்வப்போது லைட்டாக சிரிக்கவும் வைக்கிறார்கள்.
எவன் தலையைக் கொண்டு வருவான், எவன் சொல்வது உண்மை என்று மாறி மாறி வரும் போன்களால் ரெட்டி சீரியசாக டென்சன் ஆவதுதான் நல்ல காமெடி.
பாண்டியனின் உடல் அடிக்கடி இடம் மாறுதலில் நடப்பது எல்லாம் தமிழ் சினிமாவில் ஐம்பது வருடங்களாக வந்து கொண்டிருக்கும் அதே காட்சிகள்.
அதே நேரம் துப்பாக்கி முனையில் அடுத்தடுத்து பேசியே கீர்த்தி சுரேஷ் கொண்டுவரும் திருப்பங்களும் திடீர் காதலன், மாப்பிள்ளை காமெடியும் சிறப்பு.
ஆரம்பக் காட்சியை கடைசியில் கொண்டு வந்து கோர்க்கும் விதமும் ஓகே.
ஒரு காப்பி விளம்பரத்தில் ”கிச்சன் வரைக்கும் போயிட்டீங்க… அப்படியே காபியும் போட்டுட்டு வாங்களேன்…” என்று கீர்த்தி சுரேஷ் சொல்வாரே.. அதே போலத்தான் படத்திலும் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

சீரியல்களில் எல்லாம் இதைவிட சிறப்பாக நடித்துள்ளார் ராதிகா.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு ஓகே. ஷான் ரோல்டன் இசை, பிரவீன் படத்தொகுப்பில் எல்லாம் கொண்டாட இந்தப் படத்தில் ஒன்றும் இல்லை.
பொதுவில் இது ஒன்றும் தப்பான கதை இல்லைதான். ஆனால், ஒன்று இதை முழு சீரியசாக ஹீரோயினை மையப்படுத்தும் படமாக செய்து இருக்க வேண்டும்.
அல்லது முழு காமெடியாக எடுத்திருக்க வேண்டும். அதற்கு ஒழுங்காக எழுதணும்.
சாதாரண டயலாக்கையே பிரபல நடிக, நடிகையர் சும்மா ராகம் போட்டுச் சொன்னால் அது காமெடி ஆகாது.
ரெடின் கிங்ஸ்லி தாடையைத் தொங்க விட்டபடி எதை சொன்னாலும் அது காமெடி ஆகிவிடாது.
எழுத்திலே காமெடி வர வேண்டும். அதை ஒரு பிரபல காமெடி நடிகர் நடிக்கும்போது அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகும்.
தயாரிப்புத் தரம் சிறப்பு.
மொத்தத்தில் ரிவால்வர் ரீட்டா – பொம்மைத் துப்பாக்கி.
– சு. செந்தில் குமரன்