Take a fresh look at your lifestyle.

ரஜினி ரசிகர்களால் நிம்மதி போச்சு: மூதாட்டி புலம்பல்!

லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆதரவைப் பெற்றவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிவீட்டு முன்பு ரசிகர்கள் திரள்வார்கள்.

தங்கள் தலைவரிடம் வாழ்த்து பெற்றுச்செல்வதற்காக வரும் ரசிகர் பட்டாளம். பட்டாசு வெடிப்பது, ’தலைவர் வாழ்க’ என முழக்கமிடுவது வழக்கம்.

இந்த முறையும் பொங்கல் தினத்தன்று ரஜினி இல்லம் முன்பாக ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
முழக்கம் எழுப்பினர்.

பண்டிகை தினங்களின் போது ரசிகர்கள் போடும் சத்தங்களால், ரஜினியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில், பொங்கலன்று மூதாட்டி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் ரஜினி வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர். வீட்டில் இருந்து ஆவேசத்துடன் வெளியே வந்த மூதாட்டி, அங்கே குவிந்திருந்த செய்தியாளர்களிடம் புலம்பி தீர்த்து விட்டார்.

‘ஒவ்வொரு பண்டிகைக்கும் எங்கள் வீட்டு முன் சத்தம் கேட்கிறது. வீட்டுக்கு முன்பு வந்து நின்று கத்தி கூச்சல் போடுகிறார்கள். நல்ல நாளில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை.

கேட்டை திறந்து எல்லோரையும் உள்ளே விடுங்கள். அவர்கள் தலைவரை பார்க்கட்டும். பண்டிகை நேரத்தில் இவ்வளவு கூட்டம் கூடுகிறார்கள். எங்களால் சாமி கும்பிட முடியவில்லை’ என குமுறி விட்டு, அவர் வீட்டுக்குள் போய் விட்டார்.

இதனிடையே தனது இல்லம் முன்பாக திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

‘அனைவரும் ஆரோக்கியத்துடன், மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். சந்தோஷமாக இருக்கும்.’ என்று ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. பின்னர் ரசிகர்கள் அமைதியாக கலைந்து சென்றார்கள்.

மூதாட்டியின் புலம்பலில் நியாயம் இல்லாமல் இல்லை.

-பாப்பாங்குளம் பாரதி.