Take a fresh look at your lifestyle.

‘கூலி’ படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய அமேசான் பிரைம்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘லால்சலாம்’, ‘வேட்டையன்’ படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன. இப்போது அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இது ‘பான் இந்தியா’ படம். சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் படங்கள் தொடர்சியாக வசூல் குவித்து வருகின்றன. இதனால் ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலியில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் சத்யராஜ். இளம் வயதிலேயே ரஜினிக்கு தந்தையாக ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் நடித்தவர் சத்யராஜ்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘என்னம்மா கண்ணு’ பாடல் மிகவும் பிரபலம். அந்தப் பெயரிலேயே சத்யராஜ், ஒரு படத்தில் நடித்தார்.

‘சிவாஜி’ படத்தில் வில்லனாக நடிக்க, முதலில் அவரைத்தான் அணுகினார், இயக்குநர் ஷங்கர். சத்யராஜ், ஏனோ, மறுத்து விட்டார். அதன் பிறகே, சிவாஜியில், சுமன். வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

‘கூலி’ படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் என்பதால், தொலைக்காட்சி உரிமையை அந்த நிறுவனமே வைத்து கொள்ளும்.

ஓடிடி விற்பனைக்கு, முதலில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், அமேசான் பிரைம் நிறுவனத்தின் விலை அதிகமாக இருந்ததால், அந்த நிறுவனத்துக்கு ஓடிடி உரிமையை சன் பிக்சர்ஸ் கொடுத்துவிட்டதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் தகவல்.

ஓடிடி உரிமமே பெரிய தொகைக்கு விலை போயுள்ளது என்றால் படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தும் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

– பாப்பாங்குளம் பாரதி