Take a fresh look at your lifestyle.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’யைப் பாராட்டிய ரஜினி, ராஜமவுலி!

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.

மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம்  வெளியிட்டது. இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

கடந்த  1 ஆம் தேதி ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான இந்தப் படம் ஆரம்ப நாட்களில் கவனிக்கப்படவில்லை. வசூல் குறைவாகவே இருந்தது. ஊடகங்கள், படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதால் படத்துக்கு  கூட்டம் அலை மோதியது.

வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலைக் கடந்துவிட்டது. 

கேரளா, கர்நாடகா மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் இப்படம் ஜப்பானிலும் வெளியாகிறது.

இதனிடையே, படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சசிகுமாரை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: 

‘படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்துக்கு சொல்லவா வேண்டும்.

“தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க. சொல்ல வார்த்தையே இல்ல. அந்த அளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க.

சமீபகாலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்” என சூப்பர்ஸ்டார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை’ என சசிகுமார் பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமவுலி புகழாரம்:

இதேபோல், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு இயக்குநர் ராஜமவுலியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மிகவும் அற்புதமான ஒரு படத்தைப் பார்த்தேன். மனதுக்கு இதமான படம் – தொடக்கம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது” என்று தெரிவித்துள்ளார், தெலுங்கு தேசத்து பிரமாண்ட இயக்குநர்.

– பாப்பாங்குளம் பாரதி.