‘புஷ்பா’ திரைப்படம் அதில் கதாநாயகனாக நடித்த அல்லு அர்ஜுனை, நாடு முழுக்க ஒரே இரவில் பிரபலமாக்கி விட்டது. ராஷ்மிகா மந்தனா, பஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.
நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்த புஷ்பா, 2021 ஆம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம், பல்வேறு மொழிகளில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் சாதனைப் படைத்தது.
இந்தப்படம் மூலம், சிறந்த நடிகராக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வாங்கினார், அல்லு அர்ஜுன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா 2 – THE RULE’ எனும் பெயரில் தயாராகி வருகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், முதல் பாகத்தை விட கூடுதல் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. இந்தப் படத்தில் நடிக்க சம்பளம் ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டார், அல்லு அர்ஜுன் .
ஆச்சர்யமாக உள்ளதா?
ஆம். ஊதியத்துக்கு பதிலாக படத்தின் லாபத்தில் பங்கு கேட்டுள்ளார். படத்தின் லாபத்தில் பங்கு கேட்கும் நடைமுறை இந்தி சினிமா உலகில் தான் இதுவரை இருந்து வந்தது.
அந்தக் கலாச்சாரத்தை தெலுங்கு சினிமா உலகுக்கும் எடுத்து வந்துள்ளார், அல்லு. படத்தின் மொத்த லாபத்தில் 33 சதவீதத்தை தனக்கு ஊதியமாகக் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் கோரிக்கையை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக் கொண்டது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘புஷ்பா – 2’ எப்படியும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வசூலித்தால் அல்லு அர்ஜுனுக்கு 333 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும். இந்தியாவில் இந்தி நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான், தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகியோர் தான் இதுவரை அதிக சம்பளம் வாங்கி வந்தார்கள்.
பட்ஜெட் மற்றும் கால்ஷீட் தேதிகளை கணக்கில் கொண்டு, ஒரு படத்துக்கு 150 முதல் 200 கோடி ரூபாய் வரை பெற்று வந்தனர்.
‘ஜெயிலர்’ படம் சூப்பர்ஹிட் ஆனதால், ரஜினிகாந்த், இதனைத் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துள்ள படத்துக்கு 210 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்.
அவரையும் மிஞ்சி விட்டார், அல்லு அர்ஜுன். இந்தியாவில் இன்றைக்கு அதிக ஊதியம் பெறும் நடிகராக திகழ்கிறார், புஷ்பா நாயகன்.
-பாப்பாங்குளம் பாரதி.