Take a fresh look at your lifestyle.

பிரபுதேவா அடுத்த ஆட்டத்துக்குத் தயாரா?

திரைத்துறையில் வெற்றி தோல்விகளைத் தாண்டி நீடித்து நிற்பது மிகப்பெரிய சாதனை. அந்த வகையில், பதின்ம வயதில் நடனத்துறையில் முத்திரைப் பதித்து இன்றளவும் திரையுலகில் தனித்துவத்தோடு உலா வருகிற ஒரு ஆளுமை பிரபுதேவா.

நடனக்கலைஞர், நடன இயக்குநர், நாயக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று வெவ்வேறு அடையாளங்களைத் தனதாக்கிக் கொண்டவர்.

இடையே சில காலம் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம், இயக்குநர் பணி வேலைகள் என்று தமிழ் சினிமா ரசிகர்களிடம் இருந்து விலகி நின்றவர் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து திரையில் தோன்றி  வருகிறார்.

பெயர் சொல்லும் வெற்றிகளைப் பெறாதபோதும், அவர் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதும் அடுத்த தலைமுறையோடு கைகோர்க்கத் தயாராக இருப்பதும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற விஷயங்கள்.

தனித்துவமான நட்சத்திரம்!

‘மௌனராகம்’ படத்தில் ‘பனி விழும் இரவு’ பாடலுக்கு ஜான்பாபுவும் மாலினியும் ஆடுகையில், அவர்களின் பின்னால் புல்லாங்குழல் வாசிக்கும் சிறுவனாகத் திரையில் முகம் காட்டினார் பிரபுதேவா.

பள்ளிப்படிப்புக்கு டாட்டா காட்டிவிட்டு அந்த வயதில் தந்தை சுந்தரத்தின் நடனக்குழுவில் இணைந்தவர் ‘அக்னி நட்சத்திரம்’, ‘ஜீவா’ உட்படச் சில படங்களில் ஆடினார்.

வெற்றிவிழா படத்தில் வரும் ‘தத்தோம் தலாங்கு தத்தோம்’ பாடல் படப்பிடிப்பின்போது சுந்தரம் அங்கிருக்க முடியாத சூழலில், அதனை முழுமையாக பிரபுதேவாவே வடிவமைத்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் வரும் ‘ரம் பம் பம் ஆரம்பம்’ பாடலில் நடன இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கில் முன்னணியில் இருந்த பல நாயகர்களை ஆட்டுவித்திருக்கிறார்.

‘பரதன்’ படத்தில் வரும் ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் பானுப்ரியாவுக்கு நிகராக விஜயகாந்தை நடனமாட வைத்திருப்பார் பிரபுதேவா.

நடனத்தில் பெரிதாக விருப்பமில்லாத விஜயகாந்த், அவரது விருப்பத்திற்கு இணங்க அப்பாடலுக்காகப் பத்து நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார்.

அப்பாடலில் நாயகன் நாயகியின் ஆடைகள், ஆடும் விதம், ப்ளூமேட்டில் படமாக்கப்பட்ட விதம், ஷாட் கட் செய்யப்பட்ட விதம் அனைத்துமே இன்றும் புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் அமைந்திருக்கும்.

ஒரு பிரேமில் நாயகன் நாயகியோடு இணைந்தே அல்லது கொஞ்சம் வேறுபட்டோ பாடல் காட்சியில் நடனக்குழுவினர் ஆடி வந்த காலகட்டத்தில், தனக்கென்று தனி பாணியை உருவாக்கியவர் பிரபுதேவா.

அவரது சகோதரர் ராஜு சுந்தரமும் அந்த வகையில்தான் கொரியோகிராஃபியை கையாண்டார் என்றபோதும், அவரது படைப்புகளில் எளிமை அதிகமிருக்கும். பிரபுதேவாவோ அதற்கு நேரெதிரானவர்.

பிரபுதேவா வடிவமைத்த பாடல்களில், ஒவ்வொரு பிரேமிலும் நான்கைந்து அடுக்குகளை நாம் காண முடியும்.

முன்வரிசையில் நாயகன் நாயகி ஆடிக் கொண்டிருக்கும்போது பக்கவாட்டில், பின்னால், அதற்கும் பின்னால் ஆடிக் கொண்டிருப்பவர்கள் வெவ்வேறு அசைவுகளைத் தந்து கொண்டிருக்க, சில நேரங்களில் வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தினரும் கும்மாளம் இடுவதாக ஒரு ஷாட் அமையும்.

ஒவ்வொரு முறை பார்க்கிறபோதும் ஏதேனும் ஒன்றை உற்றுக் கவனிக்கிற வகையில் உழைப்பு கொட்டப்பட்டிருக்கும். அதுவே, அகில இந்திய அளவில் அவரை புகழ் பெற்றவராக மாற்றியது.

‘கடினமான அசைவுகளை சொல்லிக் கொடுத்துவிட்டு, ஒரு சேரில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டவாறே ‘ஆடுங்க’ என்று நாயகிகளிடத்தில் சொல்வது பிரபுவின் பாணி’ என்று ஒரு பேட்டியில் நடன இயக்குநர் ஜான் பாபு குறிப்பிட்டிருக்கிறார்.

நாயகர்கள் நாயகிகளின் விருப்பங்களுக்குத் தகுந்தவாறு அந்தக் காலகட்டத்தில் இருந்த நடன இயக்குநர்கள் நடன அசைவுகளை வடிவமைத்தபோது, அதிலிருந்து பிரபுதேவா முற்றிலும் வேறுபட்டு நின்றார். ஆனால், அதற்கான பலன் தியேட்டர்களில் தெரிந்தது.

குறிப்பாக, தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ் போன்ற அடுத்த தலைமுறை நாயகர்கள் வெற்றி பெற அது போன்ற கடின உழைப்பு உதவியாக இருந்திருக்கிறது.

இன்றும் பிரபுதேவா கொரியோகிராஃபி செய்த பாடல்கள் இவைதான் என்று சொல்லும்படியாகவே அவை தனித்துவத்தோடு இருக்கும்.

திரையில் முகம்!

பாடல்களுக்கு ஏற்ப நடன வடிவமைப்பைக் கையாளும்போது மட்டுமே இசைக் கேட்பது பிரபுதேவாவின் வழக்கம். ஒரு பேட்டியில் அவரே ஒப்புக்கொண்ட விஷயம் இது.

திரும்பத் திரும்ப ஒரு பாடலைக் கேட்கும்போது, இப்படித்தான் நடனம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள் உதிக்கும்.

அதற்கேற்ப நடனக்குழுவினர் இருக்க வேண்டிய இடங்கள், அவர்களது அசைவுகள், செட்டில் இருக்கும் விஷயங்களைப் பயன்படுத்துவது,

அனைவரது ஆடைகள் வடிவமைப்பு என்று பலவற்றை அவர் யோசித்துவிடுவாராம்.

’ஏப்ரல் மேயில’, ‘சின்ன ராசாவே’, ‘லாலாக்கு டோல் டப்பிமா’, ‘மாங்கா மாங்கா குண்டு மாங்கா’, ‘சிக்கு புக்கு ரயிலே’, ‘கொடுத்தாலும் கொடுத்தாண்டா’

பாடல்கள் வழியே ரசிகர்களிடம் முகம் காட்டினார். அவர்களூக்கு நன்கு அறிமுகம் ஆனார்.

மேற்சொன்ன பாடல்கள் எல்லாமே, எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் உள்ளுக்குள் உற்சாகத்தைக் கொப்பளிக்கச் செய்பவை. ஒரு பிரபுதேவா ரசிகராக, ரசிகையாக இருந்தால் மட்டுமே அதனை உணர முடியும்.

நடனத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘இவரையே முழுப்படத்துல ஹீரோவா வர வச்சா எப்படியிருக்கும்’ என்று சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் யோசிக்கத் தொடங்கினர்.

அதனை முதலில் சாத்தியப்படுத்தியவர் இயக்குநர் பவித்ரன். அவரது ‘இந்து’ படத்தில் பிரபுதேவாவை முதன்முறையாக நாயகன் ஆக்கினார். அதன் தொடர்ச்சியாக, ஷங்கரின் இரண்டாவது படமான ‘காதலன்’னில் நடித்தார்.

இரண்டுமே பிரபுதேவாவுக்கு வெவ்வேறு விதமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தன.

1994ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானவர் அதற்கடுத்த பத்தாண்டுகளில் சுமார் 35 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களும் அவற்றில் அடக்கம்.

தனக்குக் கிடைத்த வரவேற்பைச் சாதகமாக்கிக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. தனது இமேஜுக்கு ஏற்ற கதைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டார்.

மேற்சொன்ன படங்களில் பிரபுதேவாவின் நடிப்பு யதார்த்தமாகத் தெரியும் வகையில் இருக்கும். இயக்குநர்களின் நடிகராக அவர் இருந்ததை உணர்த்தும்.

அடுத்த கட்டம்!

சோகம், வருத்தம், அப்பாவித்தனம், அலட்சியம், குயுக்தி, கோபம், ஆத்திரம், ஆணவம் என்று திரையில் காட்ட வேண்டிய உணர்வினைத் துல்லியமாக வெளிப்படுத்துகிற கலைஞர்களில் ஒருவர் பிரபுதேவா.

ஒரு காலகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு சில நடிகர்களின் கைகளுக்குச் சென்றன. அவர்களுக்கு வெற்றிகளாக மாறின. அதனால், அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

வேறு மொழிப் படங்களில் நடிக்கத் துணிந்தவர், 2005இல் ’நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டேனா’ எனும் தெலுங்குப் படம் மூலமாக இயக்குநர் ஆனார்.

ஆனால், அதற்கும் முன்னர் 2000களில் தானே இயக்கி நாயகனாக நடிப்பதற்கான முயற்சிகளைத் தமிழில் மேற்கொண்டிருக்கிறார் பிரபுதேவா.

அவை சரியாக அமையவில்லை. தயாரிப்பாளர் முத்.அம்.சிவகுமார் போன்றவர்களின் நேர்காணல்கள் அதனை நமக்குத் தெரியப்படுத்துகின்றன.

இயக்குநராக பெற்ற வெற்றிகள், பிரபுதேவாவை வேறொரு திசை நோக்கித் தள்ளியது. இந்தியில் ‘வாண்டெட்’டாக சல்மான்கானுக்கு வெற்றிப்பாதை காட்டியவர், தமிழில் போக்கிரி, எங்கேயும் காதல் உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். இந்தியில் 8 படங்கள் தந்திருக்கிறார்.

இடையே தேவி, களவாடிய பொழுதுகள், மெர்குரி, லட்சுமி என்று வித்தியாசமான படங்களில் நாயகனாகத் தெரிய மெனக்கெட்டார்.

ஆனால், அவை பெரிய கவனிப்பைப் பெறவில்லை. இந்த ஆண்டில் மட்டும் அவரது நடிப்பில் சுமார் 5 படங்கள் தமிழில் வரவிருக்கின்றன.

இந்தச் சூழலில், நாயகன் எனும் அந்தஸ்தை விட்டு விலகி வேறுவிதமான பாத்திரங்களை நோக்கி பிரபுதேவா நகர்ந்தால் சிறப்பாக இருக்கும். வில்லன் என்றில்லாமல் திரைப்படத்தில் திருப்பம் ஏற்படுத்தும் பாத்திரமாக அது இருந்தால் நல்லது.

அப்படிப்பட்ட திரைப்பட வாய்ப்புகளைத் தேடிப் பிடிப்பதும், அதில் தன்னைப் பொருத்திக் கொள்வதுமே அவரது நடிப்பை ரசிப்பவர்களுக்கான பரிசாக இருக்கும். அதற்கேற்ற காலம் இப்போது கனிந்திருக்கிறதாகவே தெரிகிறது.

இன்று பிரபுதேவா 52ஆவது வயதை நிறைவு செய்திருக்கிறார்.

ஒரு நடிகராக, நடன இயக்குநராக, இயக்குநராக, தயாரிப்பாளராக அவர் தனது திரை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர, இந்த நாள் இனிய பல நாட்களின் தொடக்கமாக அமையட்டும்..!

-மாபா