ஆர்.எம். வீரப்பனின் ‘சத்யா மூவீஸ்’, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை வைத்து 6 படங்களை தயாரித்துள்ளது. இவற்றில் கடைசி மூன்று படங்களும், எம்.ஜி.ஆரின் சினிமா உலக வாழ்க்கையில் மட்டுமின்றி, அரசியலிலும் பிணைப்பு உள்ளவை.
‘சத்யா மூவீஸ்’ தயாரிப்பான 4-வது படமான ‘காவல்காரன்’ உருவான சமயத்தில் தான், எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார். அந்த நேரத்தில் (1967) தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், ஆளும் காங்கிரஸ் தூக்கி வீசப்பட்டு, திமுக முதன்முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.
கழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் முகம் தாங்கிய சுவரொட்டிகள் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டு, திமுக வெற்றிக்கு அடிகோலியது. அடுத்து வந்த ‘ரிக்ஷாக்காரன்’, அதிமுக தொடங்கப்படுவதற்கு அடித்தளமிட்டது.
‘சத்யா மூவீஸ்’ நிறுவனம் எம்.ஜி.ரை வைத்து தயாரித்த 6-வது மற்றும் கடைசி படம் – ‘இதயக்கனி’. அதிமுக தொடங்கப்பட்டதும், சுடச்சுட உருவான இந்தப் படத்தில் பூடகமாகவும், நேரடியாகவும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றன.
எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரும் வெற்றிப்படைப்பாக அமைந்த ‘இதயக்கனி’ உருவான விதம் குறித்து இங்கே பார்க்கலாம்.
சிரத்தை எடுத்து படமாக்கிய ‘ஓபனிங்’ பாடல்:
அதுவரை எம்.ஜி.ஆர். படங்களில், இந்தி நடிகைகள் கதாநாயகியாக நடித்ததில்லை. பாடல் காட்சிகளில் தோன்றி உள்ளார்களே தவிர, முழுமையான நாயகியாக, எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க வைத்ததில்லை.
அந்த நேரத்தில், இந்திய சினிமா உலகில் புதிய அலையை ஏற்படுத்தி இருந்த ‘தோரஹா’ எனும் இந்திப் படத்தில் நடித்திருந்த ராதா சலுஜாவை, ‘இதயக்கனி’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தனர்.
அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கான ‘ஓபனிங்’ பாடலை முற்றிலும் வித்தியாசமாக எடுக்க முடிவு எடுக்கப்பட்டது. ஜாதி, மத, இன, மொழி பேதமற்ற எம்.ஜி.ஆரை, அதே குணங்களுடன் கூடிய காவிரித்தாயுடன் ஒப்பிட்டு, அந்தப் பாடலை உருவாக்க விரும்பினார், படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன்.

காவிரி ஆறு, அண்டை மாநிலமான கர்நாடகத்தின் குடகு பகுதியில் பிறக்கிறது.
ஆனால், அந்த நதி, கர்நாடகாவை மட்டுமின்றி, புதுச்சேரி. தமிழகம் உள்ளிட்ட மக்களின் தாகம் தீர்க்கிறது. வேளாண் தொழிலுக்கு, ஆதாரமாகவும் விளங்குகிறது.
அந்தப் பாடல் காட்சியில் காவிரியின் பெருமை வரிகளாகவும், பரந்து விரிந்த அதனது பாதை காட்சிகளாகவும் பிரமிப்பூட்டும் வகையில் வெள்ளித்திரையில் விரியும்.
‘தென்னகமாம் இன்பத் திருநாட்டில்’ என ஆரம்பிக்கும் அந்தப் பாடலை கவிஞர் புதுமைப் பித்தன் எழுதி இருந்தார்.
ஆர்.எம். வீரப்பன், இயக்குநர் ஜெகந்நாதன், ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் காவிரித்தாய் உற்பத்தியாகும் தலைக்காவிரியில் தொடங்கி, அந்த நதி தவழ்ந்தோடும் பல நூறு கிலோ மீட்டர் தூரப்பகுதிகளில் எல்லாம் பயணித்து, ‘நதிமூலம்’ அறிந்தனர்.
பின்னர் தலைக்காவிரி, ஆடுதாண்டும் காவிரியாக சுருங்கும் இடம், அகண்ட காவிரியாக விரியும் பகுதி என, அதன் முழு வனப்பையும் படம் பிடித்தனர். இதன் உள்ளடக்கம் பிடித்துப் போனதால், இந்தப் பாடல் காட்சியில் நடிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் அக்கறை காட்டினார்.
கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள மெர்க்காரா எனும் இடத்தில் அரங்கம் அமைத்து, 200 துணை நடிகர்களுடன் அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
இந்தப் பாடல் காட்சியில் தான், தமிழக வரலாற்றை புரட்டிப்போட்ட அண்ணா திமுகவின் கொடி முதன் முதலாக காட்டப்பட்டது.
இரட்டை இலைச்சின்னமும், அதிமுகவின் முதல் வெற்றியும், இந்தப் பாடலில், மக்கள் மனதில் அழுத்தமாய் பதிவு செய்யப்பட்டது.
இந்தப் பாடல் காட்சியை பார்ப்பதற்காகவே, லாரிகளை ஒப்பந்தம் செய்து, அதில் நின்றுகொண்டே பயணித்து, திரையரங்குகளுக்கு வந்தது ஜனத்திரள்.
திருவிழா போல் நிகழ்ந்த ‘கிளைமாக்ஸ்’ படப்பிடிப்பு:
‘இதயக்கனி’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’ சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் ‘மாங்க்ரோவ்’ காட்டில் படமாக்கப்பட்டது.

அதற்கு முன் எந்த மொழி சினிமாவின் ‘ஷூட்டிங்’கும் அங்கு நடந்ததில்லை. கட்டுக்குலையாத அழகைத் தாங்கி இருந்த அந்த இருண்ட பிரதேசம், ஆபத்தையும் ஒரு சேரக் கொண்டிருந்தது.
கள்ளக் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்கள் அங்கே நடப்பது வழக்கம். மனித நடமாடம் இல்லாத எரியா. வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று ஷுட்டிங் நடைபெற்றது.
எதிரிகளை எம்.ஜி.ஆர்., படகில் துரத்திச்சென்று சண்டைப் போடும் காட்சி படமானது. 2 வாரகாலம் எம்.ஜி.ஆர். தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
15 நாட்களும் பல்லாயிரக்காண மக்கள், அவரை காணக்கூடினர். தினந்தோறும் திருவிழாக் கூட்டம்.
1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி வெளியான ‘இதயக்கனி’ மாபெரும் வெற்றி பெற்றது.
– பாப்பாங்குளம் பாரதி.