Take a fresh look at your lifestyle.

‘பொன்மன்’ – ரசிகர்களுக்கு ‘தங்கமானவனா’?

இந்தாண்டின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து பசில் ஜோசப் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன.

‘பிரவீன் கூடு ஷாப்பு’ திரைப்படம் த்ரில்லர் வகைமையில் அமைந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக ‘த்ரில்லர் ட்ராமா’ வகைமையில் அமைந்த ‘பொன்மன்’ தற்போது தியேட்டர்களை எட்டியிருக்கிறது.

ஜோதிஷ் சங்கர் இயக்கியிருக்கிற இப்படத்திற்கு ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்திருக்கிறார்.

‘ஜெய்பீம்’ லிஜி மோள் ஜோஸ், ‘ஆவேஷம்’ சஜின் கோபு, ஆனந்த் மன்மதன், தீபக் பரம்போல் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

‘பொன்மன்’ படத்தின் உள்ளடக்கம் நம்மை எளிதில் படத்துடன் ஒன்ற வைக்கிறதா?

‘பொன்மன்’ கதை!

தங்க மகன் அல்லது தங்கமானவன் என்ற பொருளைத் தாங்கி நிற்கிறது ‘பொன்மன்’.

மீனவ கிராமமொன்றைச் சேர்ந்தவர் ஸ்டெபி கிராஃப் (லிஜிமோள் ஜோஸ்). முப்பதைத் தாண்டியும் திருமணமாகாமல் அவர் வீட்டில் இருப்பது, தாயைக் (சந்தியா ராஜேந்திரன்) கவலைக்குள்ளாக்குகிறது.

ஸ்டெபியை விட வயதில் மூத்த சகோதரன் ப்ரூனோவோ (ஆனந்த் மன்மதன்), கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேரப் பணியாற்றுவதில் விருப்பத்தோடிருக்கிறார்.

அதேநேரத்தில், ‘கட்சி தன் பின்னால் நிற்கும்’ என்ற அசட்டுத் தைரியத்தில் சாதாரண விஷயங்களையும் பிரச்சனை ஆக்க முயல்கிறார்.

ஒருநாள், தேவாலயச் சுவரில் கட்சி சுவரொட்டி ஒட்டியதைச் சிலர் தடுக்க, அவர்களைத் தாக்குகிறார் ப்ரூனோ. அதனால், அவர் தலைமறைவாகத் திரிய வேண்டிய சூழல் நிலவுகிறது. தகவல் அக்கம்பக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்குத் தெரிய வருகிறது.

இந்த நிலையில், ஒரு இறால் பண்ணையை நிர்வகித்து வரும் மரியானோ (சஜின் கோபு) உடன் ஸ்டெபிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்படுகிறது.

கல்யாணம் அன்று 25 சவரன் நகையுடன் மணமகளை அனுப்புவதாக வாக்குறுதி தருகிறார் ஸ்டெபியின் தாய்.

ஆனால், அவரால் அதனை ஏற்பாடு செய்ய முடிவதில்லை.

ப்ரூனோவைத் தலைமறைவாக வைத்துப் பாதுகாக்கும் கட்சித்தொண்டர்கள் சிலர், இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள ஒரு வழியைச் சொல்கின்றனர்.

நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் பி.பி.அஷீஸ் (பசில் ஜோசப்) மூலமாக இதனை சரி செய்ய முடியும் என்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் வீட்டிற்கு வருகிறார் அஷீஸ். ஸ்டெபி விரும்பிய நகைகளை முன்னரே வாட்ஸ்அப் வழியே காட்டி, அதனைக் கையோடு எடுத்து வருகிறார்.

மொய்ப் பணம் வந்த கையோடு, கணக்குப் பார்த்து, நகையின் மதிப்புக்கு ஈடான தொகையைக் கொடுத்துவிட வேண்டும் என்பது அஷீஸ் விதிக்கும் நிபந்தனை.

குறிப்பாக, முதலிரவுக்கு மணப்பெண்ணை அனுப்புவதற்கு முன்பாக அனைத்து கணக்குகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதை அழுத்திச் சொல்கிறார்.

உறவினர்கள் தரும் மொய் பணம், அஷீஸ் கொடுத்த நகையில் 12 பவுன் நகைக்கு ஈடானதாக இருக்கிறது. அதனால், 13 பவுன் நகையைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு கூறுகிறார் அஷீஸ். ஆனால், மணப்பெண் ஸ்டெபியை விட்டு மரியானோ நகர்வதாக இல்லை.

அதன்பின் அவர்களது முதலிரவு நிகழ்கிறது. அடுத்த நாள் காலையில் மரியானோ வீட்டுக்கு இருவரும் செல்கின்றனர். அங்கு, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்குப் பின்னும் கூட, ஸ்டெபியால் அந்த நகைகளை அஷீஸிடம் திருப்பித் தர இயலுவதில்லை.

ஆனால், ‘மீதமுள்ள நகைகளைத் திருப்பி வாங்காமல் கொல்லத்தில் இருக்கும் நகைக்கடைக்குத் திரும்பிச் செல்வதில்லை’ என்பதில் உறுதியாக இருக்கிறார் அஷீஸ்.

ஆனால், மரியானோவின் முரட்டு சுபாவமும், அவர் வாழும் கிராமம் குறித்த தகவல்களும் அவரைப் பயமுறுத்துவதாக இருக்கின்றன.

அனைத்தையும் மீறி, மரியானோ வாழும் ஊருக்கு அஷீஸ் சென்றாரா, ஸ்டெபியிடம் இருந்து அந்த நகைகளை வாங்கினாரா?

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்களை இப்படம் தரும் என்பது கமர்ஷியல் படம் பார்க்கும் எவரும் அறிந்ததே.

ஆனால், நாயகப் பாத்திரமான அஷீஸ் வில்லத்தனமான மரியானோவிடம் இருந்து நகைகளை வாங்கினாரா, இல்லையா என்பதை நகைச்சுவையாகவும் பரபரப்புடனும் திரையில் சொன்ன வகையில் கவர்கிறது ‘பொன்மன்’. அது மட்டுமல்லாமல் படம் பார்ப்பவர்களை எளிதாகத் திரையோடு ஒன்ற வைக்கிறது.

கலக்கும் பசில்!

ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய ‘நாலஞ்சு செருப்பக்கார்’ எனும் கதையைத் தழுவியது இப்படம். இதன் திரைக்கதையை அவருடன் இணைந்து ஜஸ்டின் மேத்யூ அமைத்திருக்கிறார்.

எளிய மக்களின் வாழ்வைச் சொல்கிற கதை என்றபோதும், ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பவர்களை ‘முரட்டுத்தனமானவர்களாக’ச் சித்தரித்திருப்பது எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ளும்விதமாக உள்ளது.

அந்த ஒரு விஷயத்தைப் புறக்கணித்துவிட்டால், இப்படம் தரும் திரையனுபவம் ‘வாவ்’ ரகத்தில் சேரும். ‘தங்கமானவன்’ என்று நாயக பாத்திரத்தைக் கொண்டாடுவதோடு, இதர பாத்திரங்களின் வடிவமைப்பையும் ரசிக்கும் வகையில் உள்ளது இப்படம்.

திரையில் யதார்த்தத்தை வெளிப்படுத்துகிற சானு ஜான் வர்கீஸின் ஒளிப்பதிவு, காட்சிகளைச் செறிவாக உணரச் செய்கிற நிதின் ராஜ் அரோலின் படத்தொகுப்பு,

உள்ளடக்கத்தில் கமர்ஷியல் அம்சத்தை நிறைக்கும் வகையில் ஜஸ்டின் வர்கீஸ் தந்துள்ள கலக்கலான பாடல்கள் மற்றும் பின்னணி இசை உட்பட இதில் இடம்பெற்ற தொழில்நுட்ப அம்சங்கள் ‘அருமை’ என்று சொல்லும் வகையில் உள்ளன.

ரஞ்சித் கருணாகரன் மற்றும் ஜோதிஷ் சங்கரின் தயாரிப்பு வடிவமைப்பு, கிரிபேஷ் அய்யப்பன்குட்டியின் கலை வடிவமைப்பில் கதை நிகழும் களங்கள் திரையில் யதார்த்தம் போல் தோற்றமளிக்கின்றன.

நடிப்பில் பசில் ஜோசப் ஒருபக்கம் அசத்த, இன்னொரு பக்கம் லிஜி மோள் ஜோஸ், ஆனந்த் மன்மதன், சஜின் கோபு, சந்தியா ராஜேந்திரன், ஜெயா குரூப்,

தீபக் பரம்போல் என்று சுமார் ஒன்றரை டஜன் நடிகர் நடிகைகள் அவ்வப்போது நமக்கு ஆச்சர்யர்யங்களைத் தந்து செல்கின்றனர்.

அனைத்தையும் மீறி, இரண்டாம் பாதியில் பல காட்சிகள் ‘கலக்குற பசிலு’ என்று சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

இயக்குநர் ஜோதிஷ் சங்கர் ‘யதார்த்தம்’ என்று உணரவைக்கும் திரைக்கதை ட்ரீட்மெண்ட் உடன் ஒரு கமர்ஷியல் திரைப்படத்தைத் தந்திருக்கிறார்.

அதற்கு நியாயம் செய்யும்விதமான உள்ளடக்கம் அமையப் பெற்றிருப்பதால் ‘பொன்மன்’னைக் கொண்டாடலாம்.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

#பொன்மன்_விமர்சனம் #Ponman_review #Ponman  #பசில்_ஜோசப் #Basil_joseph #ஜோதிஷ்_சங்கர் #Jotish_shankar #ஜஸ்டின்_வர்கீஸ் #Justin_varghese #லிஜி_மோள்_ஜோஸ் #lijomol_jose #சஜின்_கோபு #Sajin_gopu #ஆனந்த்_மன்மதன் #Anand_manmadhan #தீபக்_பரம்போல் #Deepak_parambol #சந்தியா_ராஜேந்திரன் #Sandiya_rajendiran #ரஞ்சித்_கருணாகரன் #Ranjith_karunakaran #ஜோதிஷ்_சங்கர் #Jyotish_sankar