திரைத் தெறிப்புகள் 34:
*
கடலோரக் காற்றைப் போல, மிகவும் தனித்துவமானது ஜே.பி. சந்திரபாபுவின் குரல்.
தமிழ் சினிமாவில் சொந்தக் குரலில் பாடி நடித்த நகைச்சுவை நடிகர்களில் கலைவாணருக்கு அடுத்தபடியாக தன்னுடைய வித்தியாசமான குரலில் பாடிய பாடல்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவர் சந்திரபாபு.
தமிழ்த் திரை இசையுலகில் அவர் தனித்தும், ஜோடி சேர்ந்தும் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் நெருங்கிப் பழகியவரான சந்திரபாபு, தத்துவச் சாயல் கொண்ட பல அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
“பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே…”
-என்று 1960-ம் ஆண்டில் வெளிவந்த கவிஞர் கண்ணதாசன் தயாரித்த ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தில் வெளிவந்த இந்தப் பாடலை எழுதியவரும் கண்ணதாசன் தான்.
கேட்பவர்களை சட்டென்று ஈர்க்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி.
பாடும்போது உச்சரிப்பில் தனிக் கவனம் செலுத்திப் பாடியிருக்கிற சந்திரபாபு, ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடும்போது மனம் உருகியோ அல்லது நடனமாடியோ அந்தப் பாடல்களின் இயல்புக்கேற்ற படி பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
“இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்.
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்.
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்.
மனிதன் அழுதால்
இயற்கை சிரிக்கும்…”
என்று நகரும் பாடலில் “மனிதன் அழுதால்? இயற்கை சிரிக்கும்” என்கின்ற வரியை பாடும்பொழுது திரையில் மெல்லிய சிரிப்பை நழுவ விட்டிருப்பார் சந்திரபாபு.
“அன்னையின் கையில் ஆடுவது இன்பம்.
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்.
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்.
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்…”.
– என்று நிறைவடையும் இந்தப் பாடலில், கவியரசருக்கே உரித்தான எளிமையான தத்துவ மொழியில் “தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்” என்கின்ற வரி பழைய தத்துவ மரபில் பல ஞானிகள் வாழ்ந்து உணர்த்தியதின் சாரம் தான்.
எந்நேரமும் கவலை படர்ந்த மனதுடன் தன்னை எப்போதும் இறுக்கத்துடன் வைத்திருப்பவர்களைக் கூட, இந்தப் பாடலைக் கேட்கும் கணம் – அந்த மன இறுக்கத்தைச் சற்றே நெகிழச் செய்யும் கணமாகவும் இருக்கும்.
இதைவிட ஒரு பாடல் என்ன செய்துவிட முடியும்..?
*
– மணா