அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் – கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’.
இதில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.
மரணப் படுக்கையில் இருந்த குடும்பப் பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் குறித்த துயர நகைச்சுவைக் கதையாக ‘அடல்ட் காமெடி’ பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலும் குவித்து வருகிறது. வைபவுக்கு இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படம் 2ஆவது வாரத்திலும் 150க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக்கிற்காக விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘பெருசு’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையினை ஹன்சல் மேத்தா மற்றும் முகேஷ் ஷாப்ரா ஆகியோர் இணைந்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறு முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘பெருசு’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை, வெளியீட்டிற்கு முன்பே விற்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.