‘மிடில் கிளாஸ் லைஃப்ல தான் எவ்வளவு அட்வெஞ்சர்’ என்கிற தொனியிலான வசனம், சமீபத்தில் வந்த ‘மெட்ராஸ் மேட்னி’யில் இடம்பெற்றிருந்தது. கிட்டத்தட்ட அப்படியொரு அனுபவத்தைத் தருமோ என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘பறந்து போ’ ட்ரெய்லர்.
கற்றது தமிழ், தங்க மீன்கள் தந்த இயக்குனர் ராமின் ஆறாவது படைப்பு இப்படம். ஐந்தாவது படமான ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைக்கு வரத் தாமதம் ஆக, ‘பறந்து போ’ முந்திக் கொண்டிருக்கிறது.
மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ், மிதுல் ரெயான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.
எப்படி இருக்கிறது ‘பறந்து போ’ தருகிற திரையனுபவம்?
பற.. பற.. கதை!
‘கோழி பற.. பற.. குஞ்சு பற.. பற..’ என்று சிறு வயதில் விளையாடிய அனுபவத்தை 90’ஸ் கிட்ஸ்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய தலைமுறையினர் பெற்றிருப்பார்கள். கிட்டத்தட்ட அப்படியொரு அனுபவத்தை நமக்குத் தரவல்லது ‘பறந்து போ’.
மகன் அன்புவை (மிதுல் ரெயான்) வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, வெளியே வேலைக்குச் செல்கிறவர் கோகுல் (மிர்ச்சி சிவா). அவரது மனைவி குளோரி (கிரேஸ் ஆண்டனி).
கோகுலும் அன்புவும் சென்னையில் இருக்க, குளோரியோ கோயம்புத்தூரில் தங்கியிருக்கிறார். அங்கிருக்கும் கொடிசியா வளாகத்தில் நடக்கிற ஒரு கண்காட்சியில் அவரது சேலைக் கடையும் இடம்பெற்றிருக்கிறது.
தங்கள் சக்திக்கு மீறிச் செலவு செய்து, ஒரு தனியார் பள்ளியில் அன்புவைச் சேர்த்திருக்கின்றனர் கோகுல் – குளோரி. மகனுக்காக என்ன செய்யவும் தயாராக இருக்கின்றனர்.
ஆனாலும், அவர்களது பாசத்தோடு அன்புவின் எதிர்பார்ப்புகள் பொருந்துவதாக இல்லை.
அரையாண்டு விடுமுறை என்பதால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறார் அன்பு. அது அவரது இயல்பைச் சிதைக்கிறது. அப்போது, வெளியுலகம் காண்பதுவே அவருக்கு ஆசுவாசம் தரும் என்கிற நிலை உருவாகிறது.

ஒருவாறாக அதனைப் புரிந்து கொள்கிறார் கோகுல். ‘சும்மா ஒரு ரைடு போகலாமே’ என்று மகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார்.
வழியில் ஒரு நபரைச் சந்தித்ததும் அலறுகிறார் கோகுல். ‘பைக் லோனுக்கான தவணை’ கட்டாமல் இருப்பதால், அதனைக் கேட்டு நச்சரிக்கும் அந்த நபரின் செல்போன் அழைப்புகளை அவர் தவிர்த்ததே அதற்குக் காரணம்.
கோயம்புத்தூரில் இருந்து குளோரி கொண்டுவரும் பணத்தில் அந்தக் கடனை அடைத்துவிடலாம் என்கிற எண்ணத்தில், ‘இன்றைய தினம் இவரிடம் இருந்து எஸ்கேப் ஆனால் போதும்’ என்று பைக்கை முறுக்குகிறார் கோகுல்.
சென்னையை விட்டு வெளியே வெகுதூரம் வரும் இருவரும் மெல்ல இன்னொரு திசையில் பயணிக்கத் தொடங்குகின்றனர். கோகுலின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.
தொடர்ந்து கோகுலின் பெற்றோர் (பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி), இளம் வயது தோழி வனிதா (அஞ்சலி), அவரது கணவர் குணசேகரன் (அஜு வர்கீஸ்), அவர்களது மகன் குமார், சத்திரமொன்றில் எதிர்ப்படுகிற எம்பரர், அன்புவின் தோழி ஜென்னா மற்றும் அவரது பெற்றோர் (விஜய் ஜேசுதாஸ், தியா) என்று தொடர்ச்சியாகப் பலரைச் சந்திக்கின்றனர்.
இன்னொரு புறம் கோயம்புத்தூரில் குளோரியும் சில மனிதர்களைக் கண்காட்சியில் சந்திக்கிறார்.
‘முடிஞ்சளவுக்கு பெஸ்ட் தானே கொடுக்கறோம்’ என்றெண்ணுகிற அன்புவின் பெற்றோரும், ‘நான் உங்ககிட்ட எதிர்பார்க்குறது இதை இல்ல’ என்று நினைக்கிற அன்புவும் எந்த புள்ளியில் ஒன்றிணைந்தனர் என்பதைச் சொல்வதோடு நிறைவுறுகிறது இந்த பயணம்.
உண்மையைச் சொன்னால், மிகச்சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகனின் கனவுகளையும் யதார்த்த நிலையையும் காட்டுகிறது ‘பறந்து போ’.
இக்கதையில் வலிகளும் வேதனைகளும் அவமானங்களும் ஏராளம். ஆனால், திரையில் அதனைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறது இப்படம். அதே நேரத்தில், படம் பார்க்கிற மிகச்சாதாரணர்களான நம்மை ‘அசாதாரமானவர்களாக’ உணர வைக்கிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
பீல்குட் அனுபவம்!
‘என்னடா படம் இது’ என்று நொந்துகொண்ட தருணங்களில் இருந்து விடுவித்து, கடந்த சில வாரங்களாக மாயாஜாலம் காட்டி வருகிறது தமிழ் திரையுலகம்.
அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கதாக, இந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது ‘பறந்து போ’.
படம் பார்க்கிறவர்களின் மனதைத் தொடுகிற விதமாக, எமோஷனலான பாத்திரங்களை, காட்சிகளை, ஷாட்களை செதுக்குவதில் வல்லவர் என்று பெயர் எடுத்திருப்பவர் இயக்குநர் ராம்.

‘இனிமேல் அவர் இப்படித்தான் படம் எடுக்க வேண்டும்’ என்று ரசிகர்கள் மன்றாடுகிற வகையில் ‘பீல்குட்’ அனுபவம் தருகிறது ‘பறந்து போ’.
இதற்கு மேல் சொல்கிற விஷயங்கள் ‘ஸ்பாய்லர்’ என்பதால், ‘அது வேண்டாமே’ என்பவர்கள் இந்த இடத்தில் நின்றுகொள்ளலாம்.
மகன் தங்களது பிடியில் இருந்து ஓடிப் போகிறான் என்று அலறுகிற மனைவியைப் பார்த்து, ‘அப்பா.. அவனுக்கு இதுவரை மலை மேல ஏறத்தான் தெரியும்.
இப்போ கீழே இறங்கவும் கத்துக்கிட்டான்’ என்று கணவன் மகிழ்ச்சியோடு சொல்கிற இடம் இப்படத்தின் ஹைலைட்களில் ஒன்று.
குழந்தைகளிடத்தில் கண்டிப்பைக் கொட்டுகிற பெற்றோர்கள், ‘நாம் சரியாகத்தான் இருக்கிறோமா’ என்று தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வைக்கிற காட்சி அது.
அது போன்று நிறைய காட்சிகள் இதிலுண்டு. அதனை விளக்குவதை விட நேரில் அனுபவிப்பதே சாலச் சிறந்தது.
உண்மையிலேயே, ‘பறந்து போ’ நம்மை வேறொரு உலகில் சஞ்சரிக்க வைக்கிறது. இந்த கதாபாத்திரங்கள் வானம் தொட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ண வைக்கிறது.
சிவாவை ‘மிர்ச்சி’ சிவா என விளிப்பது தவறு என்றுணர்த்தியிருக்கிறது ‘பறந்து போ’. இதுநாள் வரை ‘நான் ஒரு ஆர்ஜே மற்றும் விஜே. இப்போ உங்க முன்னாடி நடிச்சிட்டிருக்கேன்’ என்பது போலவே வந்து போனவரை அடியோடு மாற்றி, ‘கேமிரா எங்க இருக்குது’ என்று தெரியாமல் அவரை நடிக்கச் செய்திருக்கிறது இப்படம்.
சிவா தனது அடுத்தடுத்த தேர்வுகளிலும் இதே போன்று ஆச்சர்யத்தைத் தர வேண்டும்.
குற்றவுணர்ச்சி, பயம், பொய்மை, இரக்கம் என்று மிகப்பெரிய உணர்வுகளை மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறவாறு அமைந்துள்ளது நாயகி பாத்திரம். அதனைக் கனகச்சிதமாகச் செய்திருக்கிறார் கிரேஸ் ஆண்டனி. தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு.
சிறுவன் மிதுல் ரெயான் படம் பார்க்கிறவர்களின் மனதோடு ஒட்டிக் கொள்கிறார். அந்த அளவுக்கு ‘சூப்பராக’ திரையில் வெளிப்பட்டிருக்கிறார்.
இவர்களோடு உரையாடுகிற அத்தனை பாத்திரங்களிலும் நடிகர் நடிகையர் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

ஒரு ஷாட்டில் வந்து போகிற முதியவர், சேலைக் கடைக்கு வருகிற மூதாட்டி, அவரது பேத்தி, கால்பந்து விளையாடுகிற சிறார் சிறுமியர் என்று பலரும் உதவியிருக்கின்றனர்.
இது போக அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் ஜேசுதாஸ், தியா, ஜெஸ்ஸி குக்கு உள்ளிட்ட குழந்தைகளின் நடிப்பு நம்மை நெகிழ வைப்பதாக உள்ளது.
என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, மதி வி.எஸ்ஸின் படத்தொகுப்பு, குமார் கங்கப்பனின் தயாரிப்பு வடிவமைப்பு, ஸ்டண்ட் சில்வாவின் ஆக்ஷன் கொரியோகிராஃபி, எம்.ஆர்.ராஜாகிருஷ்ணனின் ஆடியோகிராஃபி,
சந்திரகாந்த் சோனேவானேவின் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனை, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல கலைஞர்களின் உழைப்பு இயக்குனர் ராமின் எண்ணவோட்டத்திற்கு உருவம் கொடுத்திருக்கிறது.
இந்தப் படத்தில் கிட்டத்தட்ட ராமுக்கு இணையான பங்களிப்பைத் தந்து, திரைக்கதையில் சீர்மை நிறைய வழி செய்திருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.
கதாபாத்திரங்களின் நிலையை, உணர்வை, காட்சிசூழலின் இயல்பை எளிதாகக் கடத்த அவரது ‘குறு’ பாடல்கள் வழி வகுத்திருக்கின்றன.
அவரோடு இணைந்து அந்த ஐடியாவுக்கு வடிவம் தந்த இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதிக்கு ஒரு ‘பொக்கே’ பார்சல்!

இவர்களது ‘அட்ராசிட்டி’யை மீறி, சில இடங்களில் மௌனத்திற்கு இடம் தந்து, தேவைப்படுகிற இடங்களில் மட்டும் தனது பின்னணி இசையைச் சேர்த்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. படத்திலிருந்து சிறு கணம் கூட விலகிவிடாமல் இருக்க அது துணை நின்றிருக்கிறது.
ராம் இதற்கு முன்னர் தந்த படங்கள் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிற படைப்புகளாகப் பெரும்பாலும் அமையவில்லை.
அதனைத் தவிடுபொடியாக்கி, எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது எனும்படியாக அமைந்திருக்கிறது ‘பறந்து போ’.
இதே போன்ற திரையனுபவம் தருகிற எந்தவொரு உலகப்படத்தோடும் இப்படத்தை ஒப்பிட்டு நோக்கலாம். அதற்கான தராசில் பெரிதாக ஏற்ற இறக்கம் இல்லாமல் செய்வதுவே ‘பறந்து போ’வின் வெற்றி!
– உதயசங்கரன் பாடகலிங்கம்