நயன்தாராவின் 75-வது திரைப்படம் ‘அன்னபூரணி’ ஜெய், சத்யராஜ், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் நிலேஷ் குமார் டைரக்ட் செய்திருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான இந்தப் படம் பின்னர், ஓடிடி தளத்திலும் வெளியானது.
மும்பையைச் சேர்ந்த சிவசேனா கட்சி நிர்வாகி ஒருவர் ‘அன்னபூரணி’ திரைப்படம் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறி, மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வட இந்தியாவில் மேலும் சில காவல் நிலையங்களிலும் இது போன்ற புகார்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் இருந்து நீக்கி விட்டனர். அன்னபூரணி சர்ச்சை பெரிதாகி, விவகாரம் கை மீறிச்சென்றதால் நயன்தாரா, மன்னிப்பு கேட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாரா எங்கள் திரைப்படமான ‘அன்னபூரணி’ தொடர்பாக அண்மையில் சில நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றை நிவர்த்தி செய்ய கனத்த இதயத்துடனும் உண்மையான விருப்பத்துடனும் இந்த குறிப்பை எழுதுகிறேன்.
உத்வேகம் அளிக்கும் வகையில், பாசிட்டிவ் மெசேஜ் கொண்டதாகத்தான் படம் உருவாக்கப்பட்டது, யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல.
நானும் கடவுள் நம்பிக்கை கொண்டவள் தான், நாடு முழுவதும் இருக்கும் கோவில்களுக்கு அடிக்கடி செல்கிறேன். இதை வேண்டுமென்றே செய்யவில்லை.
‘அன்னபூரணி’யை வெறும் சினிமா முயற்சியாக மட்டுமே உருவாக்கவில்லை. ஒரு நேர்மறையான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில், நாங்கள் கவனக்குறைவாக, செயல்பட்டு காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
சென்சார் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியான ஒரு திரைப்படம், ஓடிடி தளத்தில் இருந்து அகற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
எனக்கும், எங்கள் குழுவுக்கும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது.
இந்தப் பிரச்சினையின் தீவிரத்தன்மையை புரிந்துகொள்கிறோம். இந்தப்படம் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால், அவர்களிடம், எனது இதயப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்’ என நயன்தாரா தனது பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி.