ஆண்களைப் போலவே, பெண்களும் தங்களது வாழ்வில் ஏகப்பட்ட காதல்களைக் கடந்துதானே வந்திருக்க வேண்டும்? எதிரெதிர் குணாதிசயங்கள் கொண்டவர்கள் வாழ்வில் இணைய முடியுமா? இது போலப் பல கேள்விகள் கல்யாண பருவத்தில் தோன்றும்!
போலவே, தமக்குப் பிடித்தமான ஒரு படைப்பைப் போலவே இன்னொன்றை உருவாக்குவதென்றால், அது எப்படி அமைய வேண்டும்? ஒவ்வொரு படைப்பாளியின் மனதிலும் தவறாமல் எழும் கேள்வி இது. இக்கேள்வியைத் தாண்டி வந்தால் மட்டுமே அச்சு அசலான புதுப்பொறியை மூட்ட முடியும்.
மேலே சொன்ன கேள்விகளுக்கான பதிலை ‘மௌன ராகம்’ படத்தில் பெற முடியும். இதில் ரேவதி, மோகன், கார்த்திக் ஏற்று நடித்த பாத்திரங்கள் வழியாக இயக்குனர் மணிரத்னம் தந்த பதில் அக்காலத்தில் பல தம்பதிகளின் மனப்போராட்டங்களுக்கு முடிவு கட்டியிருக்கும் என்பது திண்ணம்.
போலவே, மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ பார்த்து வியந்து தன் மனதில் எழுந்த சித்திரத்திற்கு புத்துருவம் தந்த வகையில் புதிய இயக்குனர்களுக்கான முன்னுதாரணமாகவும் ஆகிப் போனது ‘மௌன ராகம்’.
புதைந்த காதல்!
பள்ளி, கல்லூரிக் காலம், பணி செய்யுமிடம், பொதுவிடங்களில் பார்த்துப் பழகிய தருணங்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீதான பார்வைகள் என்று பல ‘காதல்’கள் ஒவ்வொருவருக்கும் வாய்க்கும். தளிர்விடும் பருவத்திலேயே சில கருகிப் போக, நம் மனதில் பச்சையைப் படரவிடுவது சிலவாக அமையும். அவற்றையும் நம் நெஞ்சில் ‘ஆட்டோகிராப்’ சேரன் போல பொக்கிஷமாக பாதுகாப்போம்.
ஒரு ஆண் தன் வாழ்வில் சில பெண்களைக் கடந்து வந்தால், அது போலவே அப்பெண்களும் கூட சில ஆண்களைத் தாண்டி வருவதுதானே இயல்பு. ‘மௌன ராகம்’ படத்தில் வரும் திவ்யா (ரேவதி) பாத்திரம் அத்தகையதுதான்.
பெற்றோர் நடத்தி வைத்த திருமணத்தால் சந்திரகுமார் (மோகன்) உடன் இணையும் சந்தர்ப்பம் திவ்யாவுக்கு வாய்க்கிறது. திருமணத்திற்கு முந்தைய காதலை மறந்துவிட்டு வாழ திவ்யா தயாராக இல்லாத காரணத்தால், முதலிரவின் போதே தனக்கு விவாகரத்து வேண்டும் என்கிறார்.
ஆணாதிக்கம் நிறைந்தவராக அல்லது திருமணம் முடிந்தபின்னர்தான் இந்த உண்மையைச் சொல்ல வேண்டுமா என்று ஆத்திரப்படுபவராக சந்திரகுமார் இருந்தால் வேறு மாதிரியாகப் போயிருக்கும். ஆனால், அவரோ பிடிக்காத பெண் மீது தன் விரல் நகம் தீண்டுவது கூட தகாத செயல் என்று நம்புபவர்.
ஆதலால், மனைவியாக வந்த திவ்யாவை மனம் முழுக்க நிறைத்திருந்தாலும் அவரது விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறார். ஒரே வீட்டில் இருவரும் இரு தீவுகளாக வாழ்கின்றனர்.
இடைப்பட்ட காலத்தில் சந்தர்ப்பங்களும் சூழல்களும் இருவருக்குள்ளும் காதல் அரும்ப உதவுகின்றன. ஆனாலும், இருவருக்குள்ளும் இருக்கும் அகங்காரம் அக்காதலை வெளிப்படுத்தவிடாமல் தடுக்கிறது.
அதையும் மீறி வெளியுலகுக்கு கணவன் மனைவியாக வாழும் இருவரும் மனமொத்து இணைந்தார்களா என்பதைச் சொல்லும் ‘மௌன ராகம்’.
தென்றல் வீசுவது போல மென்மையாக நகரும் திரைக்கதையைக் கொண்ட ‘மௌனராகம்’, முழுக்க ஒரு பெண்ணின் மனதில் புதைந்து கிடக்கும் காதலைத் தோண்டியெடுக்கிறது என்றால் மிகையல்ல.
திவ்யா.. திவ்யா..!
‘கல்யாண பரிசு’வில் தன் காதலரை சகோதரி விரும்புகிறார் என்பதற்காக காதலைத் துறக்கும் சரோஜாதேவியின் பாத்திரம். ‘அவள் ஒரு தொடர்கதை’யிலும் கூட விதவையான தன் சகோதரியின் மீது காதலருக்குத் தோன்றுவது பரிவையும் மீறிய ஒன்று என்று சுஜாதாவின் பாத்திரம் உணருமிடம் இடம்பெற்றிருக்கும்.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படமே மோகன், பிரதாப் போத்தன் பாத்திரங்களை ஒரு தராசில் வைத்து சுஹாசினியின் பாத்திரம் அளவிடுவதாகவே கதை அமைந்திருக்கும். தமிழ் சினிமாவுக்கு இந்த ‘காதல்’ புதிதல்ல.
ஆனாலும், நாயகர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்ற நியதியை உடைத்த ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ மணிரத்னத்திற்கு ஏனோ பிடித்துப் போனது. அதனைக் கன்னடத்திலோ அல்லது வேறு மொழியிலோ ‘ரீமேக்’ செய்ய வேண்டுமென்ற விருப்பம், ஒருகட்டத்தில் அது போலவே இன்னொன்றைத் தமிழில் உருவாக்கும் எண்ணத்தை வலுப்படுத்தியிருக்கிறது.
‘திவ்யா’ என்ற பெயரிட்டு அதற்கான எழுத்துப் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் ‘பல்லவி அனு பல்லவி’யை அடுத்து ‘உணரு’, ‘பகல் நிலவு’, ‘இதயக்கோவில்’ என்று நான்கு படங்களுக்குப் பிறகே அக்கதைக்கு உருவம் கொடுக்கும் வாய்ப்பு வாய்த்திருக்கிறது.
’நெஞ்சத்தைக் கிள்ளாதே’வில் காதலராக வந்த மோகனைக் கணவராக்கி, ரேவதியை அவரது மனைவியாக்கி ‘மௌன ராகம்’ படத்தை சிறந்த அர்ப்பணமாக மாற்றினார் மணி ரத்னம்.
ஏன் அப்பெண் தன் காதலனை மறக்க முடியாமல் தவிக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கார்த்திக் நடித்த மனோகர் பாத்திரம் சேர்க்கப்பட்டது. வெவ்வேறு நடிகர்களை யோசித்து இறுதியாகவே அவ்வாய்ப்பு கார்த்திக்கை சென்றடைந்திருக்கிறது.
அக்காலகட்டத்தில் தொடர்ச்சியாகப் பெரிய வெற்றிகளைக் காணாத நாயகனாக இருந்தவருக்கு இப்படம் ஜாக்பாட் ஆக அமைந்தது. இன்றுவரை, சிறப்புத் தோற்றத்தில் ஒரு நட்சத்திரம் நடிக்க வேண்டுமென்றால் ‘மௌன ராகம்’ கார்த்திக் போல அக்காட்சிகள் வலுவாக இருக்க வேண்டுமென்ற கட்டாயத்தையும் உருவாக்கியது.
தொண்ணூறுகளிலேயே ‘கசக்’ என்ற பெயரில் இந்தியிலும், ‘சந்திரோதயா’ என்று கன்னடத்திலும் இப்படம் ரீமேக் ஆனது. பத்தாண்டுகளுக்கு முன்னர், ’மௌன ராகம்’ பார்த்த பாதிப்பில் ‘ராஜா ராணி’ தந்தார் இயக்குனர் அட்லீ.
செல்வராகவனின் அதிகாரப்பூர்வமான முதல் படமாக அறியப்படும் ‘காதல் கொண்டேனி’ல் சோனியா அகர்வால் பாத்திரத்தின் பெயர் திவ்யா. அதன் கிளைமேக்ஸில் ‘திவ்யா.. திவ்யா..’ என்று தனுஷ் ஆட்டமாடும்போது எனக்கு ‘மௌன ராகம்’ நினைவுக்கு வந்தது.
அதிரடி சாகசங்கள் புரியும் குறும்புக்காரனாக ஒரு காதலன் பாத்திரம் அமைக்கப்படவும், ஒரு பெண்ணின் தன்னுணர்வுக்கு மரியாதை தரும் ஆணாக ஒரு கணவன் பாத்திரம் உருவாக்கப்படவும் இப்படம் வழி வகுத்தது. இது போல எத்தனையோ படங்களுக்கு, காட்சிகளுக்கு, பாத்திர வார்ப்புக்கு ‘மௌன ராகம்’ காரணமாக இருந்திருக்கலாம்.
தலைமுறைகளை இணைக்கும் ‘கண்ணி’!
பாத்திரங்களின் பின்னந்தலையில் விழும் ஒளி, இடங்களின் பின்னணி மங்கலாக இருப்பது என்று தனது ஒளிப்பதிவு உத்திகளால் கவனம் ஈர்த்தார் பி.சி.ஸ்ரீராம். வெறுமனே இண்டீரியர் பொருட்கள், கட்டட அமைப்பினால் மட்டுமே வேறொரு நகரத்தில் கதாபாத்திரங்கள் வாழ்கின்றன என்று உணர வைத்தது தோட்டா தரணியின் கலை வடிவமைப்பு.
அனைத்துக்கும் மேலே வார்த்தைகளால் சொல்ல இயலாத வலிகளை பாத்திரங்கள் வெளிப்படுத்தும்போது, அதனை மிகச்சரியாக பார்வையாளர்கள் உணர வழி செய்தது இளையராஜாவின் பின்னணி இசை.
இவற்றையெல்லாம் சரியாக ஒருங்கிணைத்து தான் மனதில் நினைத்த கதைக்கு திரையுருவம் தந்து முதல் மாபெரும் வெற்றியைச் சுவைத்தார் இயக்குனர் மணி ரத்னம்.
இப்படத்தில் கார்த்திக் நடித்த மனோகர் பாத்திரம் அரசுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்ளும் கிளர்ச்சியாளராக காட்டப்படும். ஆனால், அப்போராட்டங்களுக்கான நியாயங்கள் எதுவும் காட்டப்பட்டிருக்காது.
அப்பாத்திரம் தவறுதலாகச் சாகும்போது ‘போராட்டக்காரனைக் காதலித்தால் இதுதான் கதி’ என்று ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் ஒரு எண்ணம் வலுப்பட வழி வகுத்திருக்கும்.

அதையும் தாண்டி, சந்திரகுமார் மற்றும் மனோகரின் பாத்திரங்கள் இரு வேறு தலைமுறை பெண்களின் மனதுக்குப் பிடித்த ஆண்களின் வார்ப்புகளாக இருப்பதாகவே எண்ணுகிறேன்.
சரியான முறையில் வளர்க்கப்பட்ட, மிகப் பண்பான, பெண்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கிற, சமூகம் மதிக்கிற ஒரு பணியில் இருக்கிற ஆணாக சந்திரகுமார் இருப்பார். ஒரு வெள்ளைத்தாளில் வரையப்பட்ட நேர்கோடு போல அப்பாத்திரம் இருக்கும்.
அதற்கு நேரெதிராக, எவ்விடத்திலும் குறும்பு செய்பவராக, மிகச்சீரிய பிரச்சனைகளையும் ‘சிரிப்பாக’ கையாள்கிற, சமூகம் மறுதலிக்கிற திசையில் பயணிக்கிற, தமக்குப் பிடித்தமானவர்களிடம் கூட சுயவிவரங்களை வெளிப்படுத்தாமல் பூடகமானவராகத் திகழ்கிற ஒருவராக மனோகர் காட்டப்பட்டிருப்பார்.
தொண்ணூறுகளுக்கு முன்பே தொடங்கியிருந்தாலும், வில்லத்தனமான குணங்களோடு நாயகன் காட்டப்படுவதற்கான முன்னுதாரணங்களில் ஒன்றாகிப் போனது மனோகர் பாத்திரம்.
இன்றைய பெண்களிடம் கேட்டால் சந்திரகுமாரை விட மனோகரை விரும்புவதாகத் தெரிவிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பு. உண்மை என்னவென்று அறிய, ஒரு கருத்து கணிப்பைத்தான் நிகழ்த்த வேண்டும்.
நினைவுச் சின்னம்!
சென்னை, டெல்லி, ஆக்ரா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும், ‘மௌன ராகத்தி’ல் நாயகன் மோகனும் நாயகி ரேவதியும் சேர்ந்திருக்கும் காட்சி கிளைமேக்ஸில் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
ஆனால், பட விளம்பரங்களுக்காக இருவரும் சேர்ந்திருப்பது போன்று சில ஸ்டில்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று சமூக வலைதளங்களில் இப்போதும் உலா வருகிறது. இன்னொரு புகைப்படம் டிவிடி கவர் ஆக வெளியாகியிருக்கிறது.
மணி ரத்னத்தின் தனித்துவத்தை திரையுலகுக்கு உணர்த்திய ‘மௌன ராகம்’, 1986 ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. 36 ஆண்டுகள் ஆனபின்னும் ரசிகர்கள் போற்றும் காதல் படைப்புகளில் ஒன்றாக, ஒரு நினைவுச் சின்னமாக விளங்குகிறது..!
– உதய் பாடகலிங்கம்