Take a fresh look at your lifestyle.

வெள்ளி விழா நாயகனை உருவாக்கிய ஆர். சுந்தரராஜன்!

80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவரது படங்கள் பொதுவாகவே பாடலுக்கு உயிரூட்டும் வகையில் அமைந்திருக்கும்.

அதிலும் இவரது படத்திற்கு மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் இசை என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட மோகனை வைத்து இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் 5 படங்களை இயக்கினார். அதன்பிறகே மோகனுக்கு வெள்ளி விழா நாயகன் என்ற அடைமொழியும் வந்து சேர்ந்தது எனலாம். அந்தளவுக்கு இவர்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தந்தது. அந்தப் படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

மெல்லத் திறந்தது கதவு:

ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு ‘மெல்லத் திறந்தது கதவு’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் மோகன், ராதா, அமலா ஆகியோர் நடித்தார்கள்.

இப்படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இதில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் ஆனது. வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது.

குங்குமச்சிமிழ்:

1985 ஆம் ஆண்டு ‘குங்குமச்சிமிழ்’ திரைப்படம் வெளியானது. ஆர். சுந்தர்ராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மோகன், இளவரசி, ரேவதி மற்றும் சந்திரசேகர் நடித்திருந்தார்கள்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். பொதுவாகவே மோகன் படம் என்றால் கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் வர வைக்கிற அளவிற்கு இருக்கும்.

ஆனால் இந்தப் படங்கள் சற்றும் வித்தியாசமாக கிளைமாக்ஸில் மகிழ்ச்சியாக முடியும். அதுவே இந்தப் படத்தின் சிறப்பாக இருக்கும்.  

நான் பாடும் பாடல்:

1984 ஆம் ஆண்டு ‘நான் பாடும் பாடல்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிவகுமார், மோகன், அம்பிகா, பாண்டியன் ஆகியோர் நடித்தார்கள்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் மாங்கல்ய பந்தம் என ரீமேக் செய்யப்பட்டது.

சரணாலயம்:

ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு ‘சரணாலயம்’ திரைப்படம் வெளிவந்தது. இதில் மோகன், நளினி, தேங்காய் சீனிவாசன், மனோரமா மற்றும் எஸ்.எஸ். சந்திரன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இசை எம்எஸ் விஸ்வநாதன். இதில் வரும் அனைத்து பாடல்களையும் வாலி மற்றும் கங்கை அமரன் எழுதி உள்ளார்கள். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக வெற்றி பெற்றது.

பயணங்கள் முடிவதில்லை:

1982 ஆம் ஆண்டு ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம் வெளிவந்தது.

இப்படத்தில் மோகன், பூர்ணிமா, எஸ்.வி. சேகர் மற்றும் கவுண்டமணி போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், மோகன் பாடகராக நடித்திருப்பார். இந்தப் படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெள்ளிவிழாத் திரைப்படமாக மாறியது.

நன்றி: லியோ டேவிட் முகநூல் பதிவு.