Take a fresh look at your lifestyle.

மனிதன் தெய்வமாகலாம்: இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை!

இயக்குநர் செல்வராகவன், குஷி ரவி, மைம் கோபி, கவுசல்யா, ஒய்.ஜி.மகேந்திரன், சதீஷ் நடிப்பில், டெனிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கி இருக்கும் படம். வயோம் என்டர்டைன்மெண்ட் சார்பில் விஜயா சதீஷ் தயாரிப்பு.

கிராமத்தில் நுங்கு, பதநீர் விற்றுப் பிழைக்கும் ஓர் எளிய மனிதன் (செல்வராகவன்). அவனுக்கு துணையாக மாமா ஒருவர் (சதீஷ்). மாமாவுக்கு மனைவி (கவுசல்யா) உண்டு. பிள்ளைகள் இல்லை.

அந்த எளிய மனிதனுக்கும் நகரில் வாழும் ஒரு படித்த பெண்ணுக்கும் (அறிமுகம் குஷி ரவி) திருமணம் ஆகிறது. இந்தத் தம்பதியும் மாமா அத்தையும் பாசத்தோடு பழகுகின்றனர்.

மேற்கொண்டு முன்னேற முடிவு செய்து எல்லோரும் சேர்ந்து காசு போட்டு, நெடுஞ்சாலை பயண வழி உணவகம் ஒன்றை ஆரம்பிக்கின்றனர்.

ஒரு முக்கிய கட்சித் தலைவரின் (ஒய்.ஜி.மகேந்திரன்) மச்சானும் இரண்டாம் கட்ட அரசியல்வாதியுமான ஒருவன் (மைம் கோபி), தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு வட்டிக்குக் கடனும் கொடுப்பான். பணத்தைத் திருப்பித் தராவிட்டால் என்ன செய்யவும் அஞ்ச மாட்டான்.

அவனிடம் பணம் வாங்கிய பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். அத்தையும் அவனிடம் ஐம்பதாயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார்.

குடும்பம் குடும்பமாக வந்து மக்கள் வந்து சாப்பிடும் அந்த உணவகத்துக்கு, அந்த இரண்டாம் கட்ட அரசியல்வாதி விலை மாதுக்களோடு வந்து மது அருந்தி கலாட்டா செய்ய, நாயகன் தட்டிக் கேட்க, கடையை அடித்து நொறுக்கி விட்டுப் போகிறான்.

ஊருக்கு சாலை வசதி கேட்டு ரொம்ப நாளாக தனியாளாகப் போராடுகிறார் ஒரு பெரியவர்.

நாயகன் மேல் அன்பு வைத்திருந்த ஒரு சிறுமி இரவில் ஊருக்கு வரும் வழியில் அகால மரணம் அடைகிறாள்.

சாலை இல்லாததுதான் காரணம் என்று எண்ணி பெரியவரும் நாயகனும் அரசியல் தலைவரை பார்க்கப் போகிறார்கள்.

சாலை போட அவர் முன்பே பணம் கொடுத்ததும், தலைவரின் உறவினரான அந்த இரண்டாம் கட்ட அரசியல்வாதி அதை சுருட்டிக் கொண்டதும் தெரிகிறது.

தலைவர் கண்டிக்க, இரண்டாம் கட்ட அரசியல்வாதி சாலை வசதி கேட்டு வந்தவர்கள் மீது கோபப்படுகிறான். மீண்டும் பயணவழி உணவகத்தையம் நாயகனையும் அடித்து நொறுக்குகிறான்.

அத்தைக்கு ஒரு பிரச்னை. அதற்கு உதவப் போன நாயகிக்கு ஒரு பிரச்னை. எல்லாவற்றுக்கும் அந்த இரண்டாம் கட்ட அரசியல்வாதி காரணமாக இருக்க, விபரீதமும் விளைவுகளுமே படம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி, முத்துராமன், உஷா நந்தினி நடிப்பில், மாதவன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மனிதனும் தெய்வமாகலாம்’. இந்தப் படத்தில் அந்த உம் விகுதியை தூக்கி இருக்கிறார்கள்.

அந்தப் படம், மனிதன் தனது குணநலன்களால் எவ்வாறு உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை மையமாகக் கொண்டது. இந்தப்படமும் அதேதான்.

அந்த அழகான கிராமிய லொக்கேஷன், அந்த மக்களின் எளிய வாழ்வு அருமை.

எல்லோரையும் உறவுகளாக எண்ணி வாழும் அண்டை வீட்டுக் கலாச்சாரம் இன்று கான்கிரீட் காடுகளாக மாறும் நகர்ப்புறத்துக்கும் தேவைப்படும் ஒன்று.

படித்த பெண் கிராமத்து நபரை திருமணம் செய்து கொள்வது, நாயகன் மாமா அத்தை என்று அழைக்கும் தம்பதியோடு அந்தப் பெண் சித்தப்பா சித்தி என்று பாசத்தால் ஐக்கியமாவது என்று ஆரம்ப ‘ஃபீல் குட் ‘ காட்சிகள் மனதுக்கு இதம்.

எளிய மனிதனுக்கு திருமணம், அவனை நேசிக்கும் சிறுவர், சிறுமிகள் பெண் பார்க்கப் போவது எல்லாம் அருமை.

இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஓர் உணவகம் துவங்கி முன்னேற நினைப்பது வாழ்வியல்.

ஒரு அரசியல்வாதி தனது ஆணவத் திமிருக்காக, அவர்களின் எதிர்காலத்தை, கனவை, உழைப்பை மண்ணாக்கும் விதம், உண்மையில் நடக்கும் அநியாயங்களின் பிரதிபலிப்பு.

ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசையும் சிறப்பு. ரவிவர்மாவின் ஒளிப்பதிவு கிராமத்து ஓவியம். தீபக்கின் படத்தொகுப்பும் நேர்த்தி.

வேலை செய்யும் பெண்கள் கதாபாத்திரத்துக்கு சரியான நடிகைகளைப் பிடித்துப் போட்டு இருக்கிறார் கேஸ்டிங் டைரக்டர் ஸ்வப்னா ராஜேஸ்வரி.

செல்வராகவன் கம்மியாக நடிக்கிறார், குஷி ரவி ஓவராக நடிக்கிறார். மாமா கேரக்டர் இயல்பு. ஆனால், ஒரு சில காட்சிகளில் அவர் ஓவராக பேசுவது ஏன் என்று தெரியவில்லை (அவர்தான் தயாரிப்பாளரோ என்னவோ?).

கிராமத்து அத்தை என்பதால் கவுசல்யா முகத்தில் கறுப்பு மேக்கப்பை அள்ளி அப்பி இருக்கிறார்கள். (ஏங்க டைரக்டரே… கிராமத்துப் பெண்கள் எல்லாம் சிவப்பாக இருக்கக் கூடாதா?. எவ்வளவு வெயிலிலும் கருக்காத பெண்கள் கிராமத்திலும் உண்டு.)

பெரிய குறை என்ன என்றால், அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு நிலையில் மொத்த கதையும் புரிகிறது.

டிரைலரை உருவாக்கியதில் இருக்கும் நேர்த்தி காட்சிகளை எழுதி அமைத்ததிலும் படத்தை தொகுத்ததிலும் இல்லை.

அதே போல வாழ்வியல் கதைக்கு யதார்த்தம் முக்கியம். படத்தில் அது இல்லை. நாயகியின் அண்ணன் தன் தங்கையை இப்படி ஒருவனுக்கு திருமணம் செய்து தரக் காரணம் என்ன? ஆரம்பக் காட்சிகளில் வந்த அந்த அண்ணன், அப்புறம் கிளைமாக்சில்தான் வருகிறார்.

அவர் சொந்த அண்ணனா? ஒண்ணு விட்ட அண்ணனா? தங்கை எப்படி வாழ்கிறாள் என்று கூட பார்க்க வராத அந்த அண்ணனை கூப்பிட்டு கன்னத்தில் ஒண்ணு விடணும் போல இருக்கு.

கடை துவங்க மாமாவும் பணம் போடுகிறார். ஐநூறு ஐநூறாக வருமானம் வருகிறது. வட்டிக்கு கடன் கொடுத்த அரசியல்வாதி கடனைக் கேட்கும்போது விஷயத்தை கணவனிடமோ நாயகனிடமோ அத்தை சொன்னால் அவர்கள் கடனை கொடுத்து விட்டுப் போகிறார்கள். ஏன் சொல்லவில்லை? தெரியல.

அவ்வளவு நல்ல அரசியல்வாதிக்கு தனது உறவினரான இரண்டாம் கட்ட அரசியல்வாதி செய்யும் அராஜகங்கள் தெரியவே தெரியாதா?

இப்படி பல கேள்விகள். எனினும் வில்லனின் சுயரூபம் தெரியும் காட்சிகள் சுளீர் சுளீர்.

மொத்தத்தில், மனிதன் தெய்வமாகலாம்… ஆகலாம்தான். ஆனால் அதற்கு இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி இருக்கணும்.

– சு. செந்தில்குமரன்