Take a fresh look at your lifestyle.

மனிதர்களின் பகைமைக்குப் பின்னிருக்கும் பேராசை!

’மெலிபிஷியண்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் எவில்’ விமர்சனம்

ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகம் வெற்றியடைய வேண்டுமானால், அதன் திரைக்கதையில் நிறைய வித்தியாசங்கள் நிறைந்திருக்க வேண்டும்.
 
அந்த வகையில், 2014-ல் வெளியான ‘மெலிபிஷியண்ட்’ திரைப்படத்தில் இருந்து வேறுபடுமாறு உருவாக்கப்பட்டுள்ளது அதன் இரண்டாம் பாகமான ‘மெலிபிஷியண்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் எவில்’.
 
பேண்டஸி படங்களில் இருண்மை நிறைந்ததொரு படமாக அமைந்தது ‘மெலிபிஷியண்ட்’.
 
அதில் மனிதர்களை அறவே வெறுக்கும், இறக்கைகளுடன் சிறப்புச் சக்திகள் பெற்றுத் திகழும் மெலிபிஷியண்ட் பாத்திரத்தில் நடித்திருந்தார் ஏஞ்சலினா.
 
இப்படத்திலும் அதனைத் தொடர்ந்திருக்கிறார்.
 
தன்னைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிய அரசன் ஸ்டெபானைக் கொன்ற மெலிபிஷியண்ட், அவரது மகள் அரோராவைக் கடத்திச் சென்று மூர்ஸ் நாட்டின் ராணியாக்குவதோடு முதல் பாகம் நிறைவடைந்திருந்தது.
 
‘மெலிபிஷியண்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் எவில்’ படத்தின் திரைக்கதை உல்ஸ்டெட் நாட்டின் இளவரசன் பிலிப் மற்றும் அரோரா காதல் உறவானது திருமண பந்தத்துக்குத் தாவுவதில் தொடங்குகிறது.
 
உல்ஸ்டெட் ராஜா ஜான் மற்றும் ராணி இன்கிரித் இருவரும், தங்கள் நாட்டுக்கு மெலிபிஷியண்டை விருந்துக்கு அழைக்கின்றனர்.
 
விருந்து நடைபெறும்போது, இனி தங்களுக்கே அரோரா சொந்தம் என்று கோபமூட்டும் வகையில் திட்டமிட்டுப் பேசுகிறார் இன்கிரித்.
 
அவரது சூழ்ச்சியை அறியாமல், தனது கோபத்தை அனலாக வெளிப்படுத்துகிறார் மெலிபிஷியண்ட்.
திடீரென்று ஜான் மயக்கமடைய, மெலிபிஷியண்ட் சாபத்துக்கு அவர் உள்ளானதாகப் பழி போடுகிறார் கிரிபித்.
 
அதனை மறுக்கும் மெலிபிஷியண்ட், அங்கிருந்து கிளம்புகிறார். கிரிபித் உத்தரவின் பேரில் இரும்புக் குண்டு கொண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது.
 
அத்தாக்குதலினால் படுகாயமடைந்து கடலில் விழுகிறார் மெலிபிஷியண்ட். அவரைப் போலவே தோற்றம் கொண்ட கொனால் என்பவரால் காப்பாற்றப்படுகிறார்.
 
புதிய மண்ணில் அனைவரும் தன்னைப் போல இறக்கைகளுடன் இருப்பதைப் பார்த்து அதிசயிக்கிறார் மெலிபிஷியண்ட். தங்களை அழிக்க முயலும் மனிதர்களிடம் இருந்து காப்பாற்றும் வல்லமை அவருக்கே உண்டு என்று அங்கிருப்பவர்கள் கருதுகின்றனர்.
 
அதே நேரத்தில், போரை விட அமைதியைப் பரப்புவதன் மூலமே சீரான வாழ்க்கையைத் தொடர முடியும் என்கிறார் மெலிபிஷியண்டை காப்பாற்றிய கொனால்.
 
இந்தச் சூழலில் மூர்ஸ் நாட்டில் வசிக்கும் அனைத்து உயிரினங்களையும் கொல்ல சதி செய்கிறார் கிரிபித்.
 
அரோரா – பிலிப் திருமணத்தைக் காண மூர்ஸ் நாட்டவர் அனைத்தும் உல்ஸ்டெட் வருகின்றனர்.
 
காத்திருக்கும் ஆபத்தில் இருந்து அவர்களை மெலிபிஷியண்ட் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதுடன் படம் நிறைவடைகிறது.
 
முந்தைய பாகத்தில் சாகசங்கள் இருண்மை நிறைந்ததாக இருக்க, இப்படத்தில் அது திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளது. அது ரசிகர்களை ஈர்த்ததா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.
 
முதல் காட்சி தொடங்கி ராணி கிரிபித்தின் சதியை மெலிபிஷியண்ட் முறியடிப்பது வரை திரைக்கதை ஜிவ்வென்று பறக்கிறது.
 
லிண்டா வுல்வர்டனுடன் இணைந்து நோவா ஹார்ப்ஸ்டர் மற்றும் மிகா பிட்ஸர்மேன் ப்ளூ ஆகியோர் இப்படத்துக்குத் திரைக்கதை அமைத்துள்ளனர்.
 
மூர்ஸ் நாட்டில் இருக்கும் ஒருவகைப் பூவைக் கொண்டு அங்குள்ள உயிரினங்களைக் கொல்லத் திட்டமிடுவது, கிரிபித்திடம் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மூர்ஸ் நாட்டைச் சேர்ந்தவராக இருப்பது போன்ற விஷயங்கள் க்ளிஷே ரகம் என்றாலும், அவை திரைக்கதையின் மிகச்சரியான இடத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
 
‘அவதார்’ பாதிப்பு இக்கதையில் அதிகமாகத் தென்படுகிறது. இறந்து போனவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக மேற்கொள்ளப்படும் பிரார்த்தனை அப்படியே காப்பியடிக்கப்பட்டுள்ளது.
 
இதனை மீறி ஒரு நல்ல 3டி படம் பார்க்கிறோம் என்ற உணர்வை எழுப்பும் வகையில் காட்சியமைப்பை அமைத்திருக்கிறார் இயக்குனர் யோகிம் ரோனிங்.
 
ஹென்றி ப்ரகாம் ஒளிப்பதிவும், மூவிங் பிக்சர் கம்பெனி மற்றும் மில் பிலிம் மேற்கொண்ட விஷுவல் எபெக்ட்ஸும் மெலிபிஷியண்டின் உலகத்தை அழகுறக் காண்பிக்கின்றன.
 
ஜெஃப் ஜனல்லியின் இசையமைப்பு காட்சிகளுடன் ஒன்றச் செய்யும்விதமாக அமைந்துள்ளது.
 
காதல் ஜோடியாக வரும் ஹாரிஸ் டிக்கன்சன், எல்லி பேனிங், ராஜா ராணியாக வரும் ராபர்ட் லிண்ட்சே, மிச்சல் பீஃபர் மற்றும் இதர நட்சத்திரங்களில் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து ரோத் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
 
‘தி லயன் கிங்’, ‘ஸ்பைடர்மேன் ஃபார் ப்ரம் ஹோம்’, ‘ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்: ஹாப்ஸ் அண்ட் ஷா’ உட்படப் பல 3டி படங்களுடன் ஒப்பிடும்போது, நல்ல 3டி அனுபவத்தைத் தருகிறது ‘மெலிபிஷியண்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் எவில்’!
 
– உதய். பா