Take a fresh look at your lifestyle.

உழைப்பாளிகளை அங்கீகரித்த எம்.ஜி.ஆர்.!

கிளைக் கழக செயலாளரை, சாதாரண தொண்டரை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

அரசியலில் மட்டுமல்லாது, தனது திரையுலகப் பயணத்திலும், திறமைசாலிகளை இனம் கண்டு, தன்னுடனேயே அழைத்துச் சென்று, அவர்களை சிகரம் தொட வைத்திருக்கிறார் எம்.ஜிஆர்.

பல கவிஞர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இதற்கு உதாரணம். ஒரு சம்பவத்தை நினைவு கூறலாம்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘காஞ்சித் தலைவன்’ படத்துக்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதி இருந்தார்.

அந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார், ‘முள்ளும் மலரும்’ மகேந்திரன். இதில்,
நரசிம்ம பல்லவனாக எம்.ஜிஆர். நடித்தார்.

அந்தப் படத்துக்காக ‘கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே’ என்ற பாடலையும் கருணாநிதி எழுதி இருந்தார்.

மெஜஸ்டிக் ஸ்டூடியோவில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.

கருணாநிதி எழுதிய பாடலுடன் முதல் காட்சி படமாக்கப்பட்டது. ‘நரசிம்ம பல்லவன்’ எம்ஜிஆர், அந்தப் பாடலை பாடியபடி சிலை வடிக்கும் காட்சி அன்று படமானது.

சீன யாத்ரீகர் யுவான் சுவாங், நரசிம்ம பல்லவன் அரண்மனைக்கு வருகை தந்து மன்னரை சந்திப்பதாக ஒரு காட்சியை அமைத்திருந்தார் கருணாநிதி.

நரசிம்ம பல்லவனை பார்த்ததும், யுவான் சுவாங் வணக்கம் தெரிவிப்பதாக குறிப்பு ஒன்றை எழுதி இருந்தார், கலைஞர்.

தமிழ் வணக்கம் தெரியும்.

அநேகமாக இந்திய நாட்டு வணக்கங்களும் அனைவரும் ஓரளவு அறிந்ததே. சீன வணக்கம் எப்படி இருக்கும்?

மகேந்திரன் யோசித்தார். அவருக்கு எதுவும் உடனடியாக புலப்படவில்லை.

கலைஞரிடம் கேட்க மகேந்திரனுக்கு தயக்கமும் பயமும் ஒரு சேர எழுந்தது. கன்னிமாரா நூல் நிலையத்துக்கு சென்று சீனர்களின் சித்திரக்கதைகள் அடங்கிய ஒரு புத்தகத்தைத் தேடிப் பிடித்துப் படித்தார்.

சீனாவில் எப்படி வணக்கம் சொல்வார்கள் என்பது அந்தப் புத்தகத்தில் இருந்தது.

சீனர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கும்போது, தங்களின் முஷ்டிகளை ஒன்றுக்குள் ஒன்று பொத்தியபடி, நெஞ்சுக்கு நேராக வைத்து தலை குனிந்து மரியாதை செய்வது அவர்களின் வணக்க முறை.

இந்த வணக்கம் சித்திரமாகவே அந்தப் புத்தகத்தில் இருந்தது. மகேந்திரனுக்கு தாளமுடியாத சந்தோஷம்.

மறுநாள் படப்பிடிப்பு.

நரசிம்ம பல்லவனை யுவான் சுவாங் சந்திக்கும் காட்சியை படமாக்க இருந்தார், டைரக்டர் காசிலிங்கம்.

ஒப்பனை அறையில் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

அன்று எடுக்கப்படும் வசனக் காட்சிகளை படித்துக்காட்ட ஒப்பனை அறைக்குச் சென்றார், மகேந்திரன்.

உரையாடலை எம்.ஜி.ஆரிடம் படித்துக் காட்டினார்.

பின்னர் தயக்கமாக, சீன வணக்கம் எப்படி இருக்கும் என்று, முந்தைய நாள், தான் கன்னிமாரா நூலகத்தில் சென்று தெரிந்துகொண்ட விவரத்தை எம்.ஜி.ஆரிடம் சொன்னார், மகேந்திரன். எம்.ஜி.ஆருக்கு பெருத்த ஆச்சர்யம்.

‘இந்தத் தகவலை டைரக்டரிடம் சொல்லி விட்டீர்களா?’ – இது எம்.ஜி.ஆர்.

‘இல்லை..சொல்லவில்லை’ – இது மகேந்திரன்.

‘சரி.. இப்போது என்னிடம் சொன்னதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம். செட்டுக்கு வாருங்கள்’ என கூறிவிட்டு எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு தளத்துக்கு கிளம்பிச் சென்றார்.

அவரை பின் தொடர்ந்தார், மகேந்திரன். யுவான் சுவாங் வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி. நாராயணசாமி, அச்சு அசலாக சீன யாத்ரீகர் போல் மேக்கப் போட்டுத் தயாராக இருந்தார்.

படப்பிடிப்பு ஆரம்பமானது.

நரசிம்ம பல்லவனான எம்.ஜி.ஆர். சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். தர்பார் மண்டபத்தில் நுழையும் யுவான் சுவாங், நரசிம்ம பல்லவனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.

அப்போது எம்.ஜி.ஆர், இயக்குநரை பார்த்து, “காசி அண்ணே! யுவான் சுவாங் எனக்கு வணக்கம் சொல்வதாகக் காட்சியில் உள்ளது. வருகிறவர் சீன யாத்ரீகர். அவர்கள் நாட்டு கலாச்சாரப்படி எந்த மாதிரி வணக்கம் சொல்வார்கள்?” எனக் கேட்டார்.

இயக்குநர் காசிலிங்கம் திகைத்துப்போனார்.

‘சீன யாத்ரீகர் நம்மைப்போல் கை கூப்பி வணக்கம் சொல்லக் கூடாதே என்பதால் கேட்டேன்’ என எம்.ஜி.ஆர். சொன்னார்.

காசிலிங்கத்திடம் இருந்து பதில் வரவில்லை.

‘கொஞ்சம் இருங்க.’ என கூறிவிட்டு மகேந்திரனைப் பார்த்தார்.

‘மகேந்திரன் சீனர்கள் எப்படி வணக்கம் சொல்வார்கள்.. செய்து காட்டுங்கள்’ என எம்.ஜி.ஆர் பணித்தார்.

மகேந்திரன் சீன வணக்கத்தை நடித்துக் காட்டினார். படப்பிடிப்புத் தளத்தில் சில வினாடிகள் நிசப்தம்.

“பார்த்தீர்களா? இதுவே சீன வணக்கம். மகேந்திரன் கன்னிமாரா லைப்ரரிக்கு போய் விவரம் சேகரித்துக்கொண்டு வந்திருக்கிறார். அவர் சொன்ன பிறகுதான் எனக்கே இந்த வணக்க முறை தெரியும்.

சின்ன விஷயத்துக்கும் மகேந்திரன் சிரத்தை எடுத்துக்கொண்டதைப் பாராட்ட வேண்டும்” என எம்.ஜி.ஆர். புகழ்ந்துரைக்க, மகேந்திரன் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

இந்த நிகழ்வை இயக்குநர் மகேந்திரன் பின்னாட்களில் கீழ்க்கண்டவாறு நினைவு கூர்ந்தார்.

எல்லோர் முன்னாலும் எனது உழைப்புக்கும், அக்கறைக்கும் மக்கள் திலகம் எப்பேர்ப்பட்ட அங்கீகாரத்தையும் பாராட்டையும் வாங்கிக் கொடுத்து விட்டார்.

அரியணையில் அமர்ந்திருந்த மக்கள் திலகம் அந்த தருணத்தில் நிஜமான நரசிம்ம பல்லவன் போலவே எனக்குக் காட்சி தந்தார்.

தனது கொலு மண்டபத்தில் அந்த மாமன்னன் எனக்கு அளித்த விலைமதிப்பற்ற வெகுமதி, அவரது மனம் திறந்த பாராட்டு’ என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார், ‘உதிரி பூக்கள்’ கொடுத்த உன்னதக் கலைஞன்.

– பாப்பாங்குளம் பாரதி.