‘லூசிபர்’ படத்தின் 2 ஆம் பாகமான ‘எம்புரான்’ உலகம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது.
பிரித்திவிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மோகன்லால், டவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவந்துள்ள ‘எம்புரான்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரக் காட்சிகள் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
‘எம்புரான்’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு பால்ராஜ் படேல் என்ற பஜ்ரங்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்ற பாபா பஞ்ரங்கி, குஜராத் கலவரத்தின் முக்கியக் குற்றவாளி ஆவார்.
வில்லன் வேடத்தின் பெயரை மாற்ற வேண்டும், சர்ச்சைக்கு உரிய 17 காட்சிகளை நீக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தின.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ இதழில் ‘எம்புரான்’ படத்துக்கு கண்டனம் தெரிவித்து கட்டுரை வெளியானது.
‘கோத்ரா’ ரயில் எரிப்பு சம்பவத்தை இயக்குநர் பிரித்திவிராஜ் தவறான கண்ணோட்டத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் என அந்த இதழ் குற்றம் சாட்டி இருந்தது.
இதனை அடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன், சர்ச்சைக்கு உரிய காட்சிகளை நீக்குமாறு டைரக்டர் பிரித்திவிராஜிடம் கூறினார்.
இதனை ஏற்ற இயக்குநர், படத்தில் இடம் பெற்றுள்ள 3 நிமிட சர்ச்சைக் காட்சிகளை நீக்கி விட்டார்.
அவை பெரும்பாலும் வன்முறைக் காட்சிகள். வில்லன் கேரக்டர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட காட்சிகளுடன், மறு தணிக்கைக்கு நேற்று படம் அனுப்பி வைக்கப்பட்டது.
சென்சார் போர்டு அதனை ஏற்று, மறு தணிக்கை செய்து ஓகே சொல்லி விட்டது. மறு தணிக்கை செய்யப்பட்ட ‘எம்புரான்’ இன்று முதல் தியேட்டர்களில் வெளியானது.
இதனிடையே, ‘எம்புரான்’ படத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் பார்த்து ரசித்தார்.
படத்தைப் புகழ்ந்து, தனது சமூக வலைத்தளத்தில் பினராயி விஜயன் எழுதியுள்ளார்.
‘நாடு இதுவரை கண்டிராத இனப்படுகொலை குறித்து ‘எம்புரான்’ பேசியுள்ளது – இது சங் பரிவார் அமைப்புகளைக் கோபம் அடையச்செய்துள்ளது; மலையாளத் திரை உலகத்தை இந்தப் படம் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும்’ – என்று குறிப்பிட்டுள்ளார் பினராயி விஜயன்.
– பாப்பாங்குளம் பாரதி.