திரைத் தெறிப்புகள்-37:
அடித்தட்டு வர்க்கம் சார்ந்த சாமானிய ஏழை மக்களின் குரலும் தமிழ்த் திரை இசையில் ஆங்காங்கே அபூர்வமாக ஒலித்திருக்கிறது.
அப்படிப் பொருளாதார நிலையில் சிக்கித் திண்டாடும் ஏழைகளுக்கான குரலைத் தன்னுடைய பாடல்களில் பிரதிபலித்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
‘முதல் தேதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் – 1-ஆம் தேதிக்கும் 21-ஆம் தேதிக்குமான வித்தியாசத்தை உணர்த்திய விதத்தில், மாதச் சம்பளக்காரர்களில் கஷ்டங்கள் வெளிப்பட்டிருக்கும்.
இதைப் போலத் தான்- 1960-ஆம் ஆண்டு வெளிவந்த ‘இரும்புத் திரை’ படத்தில் “கையில வாங்கினேன் பையில போடல” என்று துவங்கும் இந்தப் பாடலும்.
இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் எஸ்.வி. வெங்கட்ராமன்.
இந்தப் பாடலைப் பாடியவர் திருச்சி லோகநாதன்.
“கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே – என்
காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்குக் காலம் சரியில்லே…”
என்கிற இந்தப் பாடலில், படத்தில் பாடுகிற மாதிரி நடித்திருப்பவர் கே.ஏ. தங்கவேலு.
“மாசம் முப்பது நாளும் ஒழைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் வந்து
எனக்கு உனக்குன்னு பிக்கிறான்
சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே அது
குட்டியும் போடுது வட்டியிலே…”
என்கிற பாடலைக் கேட்கும்போது நடுத்தர வர்க்க மனதின் எதிரொலியைப் போல இருக்கும்.
அடுத்து வரும் வரிகளும் இதே ரகம் தான்…
“விதவிதமாய்த் துணிகள் இருக்கு.
விலையைக் கேட்டா நடுக்கம் வருது.
வகைவகையா நகைகள் இருக்கு.
மடியைப் பார்த்தா மயக்கம் வருது.
எதை எதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லே இதை
எண்ணாம இருக்கவும் முடியலே.
கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்.
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்.
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்.
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்.
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்.
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்…?”
என்று நமது நாட்டின் அதிகப்படியான எண்ணிக்கையில் இருக்கும் ஏழைகளின் வாழ்வை வெளிப்படுத்தும் பட்டுக்கோட்டையாரின் இந்தப் பாடலை – கட்சி வேறுபாடின்றி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்து பட்ஜெட் போடும் நிதியமைச்சர்களுக்குப் பணிவாகச் சமர்ப்பிக்கலாம்.
– மணா.