Take a fresh look at your lifestyle.

அல்போன்ஸ் புத்திரன் கைவண்ணத்தில் ரெட்ரோ ட்ரெய்லர்!

ஒரு திரைப்படத்தின் ‘ட்ரெய்லர்’ என்பது அதனைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பன்மடங்காக உயர்த்துவதற்கான ‘மார்க்கெட்டிங் உத்தி’களில் மிக முதன்மையானது.

அந்த ட்ரெய்லர் படத்தின் உள்ளடக்கத்தை விளக்குவதாக, அதேநேரத்தில் அதில் பொதிந்திருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தாததாக, திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு உருவாகிற ‘ட்ரெய்லர்’ அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதாக அமையும்.

மேற்சொன்னவற்றை அடியொற்றி அமைந்திருக்கிறது கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ பட ட்ரெய்லர்.

‘இப்படியொரு சூர்யாவைப் பார்த்து எத்தனை நாளாச்சு’ என்கிறவிதமாய் அதன் உள்ளடக்கம் இருக்கிறது. அதுதானே அவர்களது ரசிகர்களுக்கும் தேவை.

ட்ரெய்லரில் உள்ளவை..!

‘வெல்கம்.. வெல்கம்.. வெல்கம்..’ என்று சொல்லிவிட்டு தெனாவெட்டாக சூர்யாவை அழைக்கிற சுஜித் சங்கரை காட்டுவதில் இருந்து தொடங்குகிறது ட்ரெய்லர்.

‘ஒரு ஷோ ஓட்டு’ என்று அவர் சொல்ல, ‘ஒரு ஷோ ஓட்டிரலாமாடே’ என்று ‘நாஞ்சில்’ வட்டார மொழியில் சுற்றியிருக்கும் ஜெயராம், கருணாகரன் அண்ட் கோ-வை பார்த்துக் கேட்கிறார் சூர்யா.

அதன்பின் அவர் இடம்பெறுகிற ஷாட்கள் எல்லாமே ‘அதகளம்’ என்று சொல்லும்படியாக இருக்கின்றன.

‘தனது தந்தையின் வழி வந்த ரவுடித்தனத்தைக் காதலுக்காகத் துறக்கத் தயாராக இருக்கிற ஒரு இளைஞனின் கதையே இது’ என்று நமக்குச் சொல்கிறது ட்ரெய்லர்.

சூர்யா ஏன் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஹேர்ஸ்டைலோடு வந்து போகிறார் என்பதை இப்படத்தின் உள்ளடக்கம் நமக்குச் சொல்லும்.

இதில் பிரகாஷ்ராஜ், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், சிங்கம்புலி, தமிழ், என்று பலர் இதிலுண்டு.

சுவாசிகா, ஸ்ரேயா சரண் வருமிடங்கள் திரைக்கதையை ஒரு படி மேலேற்றும் என்று நம்பலாம்.

பூஜா ஹெக்டேவின் நடிப்பு, அவரை ‘வெகு இயல்பானவராக’ முதன்முறையாகத் திரையில் காட்டியிருப்பதாக எண்ண வைக்கிறது.

‘படம் முழுக்கச் சண்டைதான்’ எனும்படியான தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது ட்ரெய்லர்.

மென்மையான, இதமான உணர்வுகளை ரசிக்க விரும்புபவர்களுக்கு அது உவப்பற்று இருக்கலாம்.

ஆனால், அவர்களும் கூடத் திரும்பத் திரும்பத் ரசிக்கலாம் எனும் அளவுக்கு ட்ரெய்லர் இருப்பதற்குக் காரணம், இதில் ஒளிந்திருக்கும் நகைச்சுவை உணர்வு.

‘நேரம்’ இயக்குநரின் ‘நேர’ உணர்வு!

குறைந்த நொடிகளில் ஒரு தயாரிப்பின் சிறப்பைச் சொல்கிற விளம்பரப் படங்கள் போலவே, திரைப்பட ட்ரெய்லரும் ‘கூர்மையாக’ இருந்தாக வேண்டும்.

அந்த ‘நேர’ உணர்வை மதித்துச் செயல்படுகிற படத்தொகுப்பாளர்களால் மட்டுமே சிறப்பான ட்ரெய்லரை தர முடியும்.

அதேநேரத்தில், அதிகப்படியான எதிர்பார்ப்பை உருவாக்காதவாறு, ‘படம் உண்மையிலேயே நல்லா இருக்கும்’ என்கிற உத்தரவாதத்தைத் தருகிறவாறு அது இருக்க வேண்டும்.

மிகச்சில படத்தொகுப்பாளர்கள் மட்டுமே அதனைச் சாதிக்கின்றனர். ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகில் ‘டான் மேக்ஸ்’ எனும் படத்தொகுப்பாளர் ‘ட்ரெய்லர் கட்ஸ்’ வெகு பிரபலம்.

இப்போது, அவரது சாதனையை முறியடிக்கிற வகையில் அடுத்த தலைமுறை படைப்பாளிகள் பலர் வந்துவிட்டனர்.

‘அவர்களுக்கு நான் கொஞ்சமும் குறைந்தவன் இல்லை’ என்பது போல, ‘ரெட்ரோ’ ட்ரெய்லர் தந்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன்.

இவர் தமிழில் ‘நேரம்’ படம் தந்தவர். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ‘பிரேமம்’ பட இயக்குநர் இவர்.

‘அந்த இயக்குநரா இந்த ட்ரெய்லரை கட் செய்தார்’ என்ற கேள்விக்குப் பதில் சொல்ல, ‘நாளைய இயக்குநர்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றிச் சொல்லியாக வேண்டும்.

கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், நலன் குமாரசாமி, நிதிலன் சாமிநாதன் உள்ளிட்ட பல இயக்குநர்களை அடையாளம் காட்ட விதைப் போட்ட அந்த நிகழ்ச்சியோடு அல்போன்ஸ் புத்திரனுக்கும் சம்பந்தமுண்டு.

அந்த நிகழ்ச்சியில் தொடங்கிய நட்பின் விளைவாக, கார்த்திக் சுப்புராஜுக்கு ‘ரெட்ரோ’ ட்ரெய்லரை தந்திருக்கிறார்.

‘போர் கொடுக்கிற போதை இருக்கே’ என்று ஒரு பாத்திரம் விவரிக்கிற ஷாட்களுக்கு நடுவே, ‘பொய்.. பொய்..’ என்று ஒருவரது கன்னத்தில் பிரகாஷ்ராஜ் அடிப்பதாக ஷாட் வரும். அவ்விரண்டுக்கும் நடுவே சில ஷாட்களை நிறைத்திருக்கும் விதமே, இதன் சிறப்பு.

பிறகு ஜெயராமின் ‘கோமாளி’ பாணி சிரிப்புக்கு ஜோஜு ‘கவுண்டர்’ தரும் விதமாகச் சிரிப்பது, ’எப்போ வருவான்’ என்று கிடாரை மீட்டியவாறே கார்த்திக் கேட்கிற வசனம் இரண்டு முறை இடம்பெற்றிருப்பது,

‘தட்டுனேன் பொழந்துரும்.. தட்டுனேன் பொழந்துருச்சு’ என்ற வசனங்களைத் திரும்பத் திரும்ப சூர்யா சொல்கிற இடைவெளியில் ஆக்‌ஷன் ஷாட்கள் வந்து போவது, உச்ச ஸ்தாயியில் நாசர் ஆங்கிலத்தில் கத்துவது,

இறுதியாக ‘அன்பு மவனே டாடி இஸ் கம்மிங்டா’ என்று ஜோஜு உறுமுவது, ஒரு ஆக்‌ஷன் எபிசோடுக்கு சூர்யா தயாராவதாக முடிவது என்று அல்போன்ஸ் இந்த ட்ரெய்லரை தொகுத்திருக்கிற விதமே இப்படத்தின் யுஎஸ்பியை முடிவு செய்வதாகவும் இருக்கிறது.

இது போக ‘சிறப்பான தரமான சம்பவம் எல்லாம் இனி பார்ப்பீங்கடா’, ‘மனுஷன் எல்லார் பல்ஸையும் பிடிச்சுட்டான்’ என்று சூர்யா துதி பாடும் வசனங்களுக்கு நடுவே,

எதிர்பார்ப்பை எகிற வைக்கிற வகையில் நிறைந்திருக்கிற சந்தோஷ் நாராயணனின் இசை என்று ‘மிகச்சிறப்பான’ சம்பவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது ட்ரெய்லர்.

ஒரு வெற்றிகரமான இயக்குநராக அறியப்படும் ஒருவர், இன்னொரு படைப்பாளியின் திரைப்படத்தில் ‘இப்படியும் தன்னால் பங்களிக்க முடியும்’ என்று உதாரணமாகி இருப்பது சாதாரண விஷயமல்ல.

இதுவே இன்று இப்படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகமாகியிருக்கிறது.

‘ரெட்ரோ’ என்ற பெயருக்கு ஏற்ப, இன்னும் சில காலம் கழித்து நினைவுகூரப்படும் வகையில் இப்படத்தின் உள்ளடக்கம் அமைந்தால் நன்றாக இருக்கும்.

‘அப்படித்தான் இருக்கும்’ என்ற எண்ணத்தை அழுத்தி வலியுறுத்துகிற வகையில் அமைந்திருக்கிறது அல்போன்ஸ் புத்திரன் கைவண்ணத்தில் வடிக்கப்பட்ட ‘ரெட்ரோ’ ட்ரெய்லர்..!

– மாபா