‘உலகநாயகன்’ கமல்ஹாசன், சினிமாவின் அனைத்துத் துறைகளையும் கரைத்துக் குடித்தவர். அவற்றில் ஒன்று – திரைக்கதையாக்கம். கமலின் பல படங்களுக்கு அவரே திரைக்கதைத் தீட்டியுள்ளார்.
சினிமாப் படிப்பு படிக்க அமெரிக்கா சென்ற கமல், அங்கு சினிமாக்கதை ஒன்றை எழுதிவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார். இதனை அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முழு விவரம் பார்க்கலாம்:
தக்லைஃப் ரிலீஸ் தேதி:
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்துள்ள படம் – ‘தக் லைஃப்’. ‘பான் இந்தியா’ படமாக உருவாகி உள்ள ‘தக் லைஃப்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் கமல் தவிர, சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய மூன்று பெரிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
படத்தின் ஷூட்டிங், பல வெளிநாடுகளில் நடைபெற்றது. இப்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கமல் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பாடம் பயின்றார்.
படிப்பு நிறைவடைந்த நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு ‘உலக நாயகன்’ கமல், நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
‘தக் லைஃப்’ படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும்” என்றவரிடம். ‘விக்ரம் 3’ படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். ‘அமெரிக்காவில் நான் வேறு ஒரு ‘ஸ்கிரிப்ட்’ எழுதியிருக்கிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
‘குமுதம்’ இதழில் சுஜாதா எழுதிய ‘விக்ரம்’ கதையை அதே பெயரில், 1980-களில் சொந்தமாகத் தயாரித்தார் கமல். ராஜசேகர் இயக்கிய அந்தப் படம் பெரிய ஹிட்.
பின்னர் ‘விக்ரம்’ என்ற பெயரில் மீண்டும் ஒரு படத்தை சில ஆண்டுகளுக்கு முன் தயாரித்து நடித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படம் மூலம், கமலுக்கு 100 கோடி வருமானம் கிடைத்தது. வெகு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதனால் ‘விக்ரம்’ மூன்றாம் பாகத்தை உடனடியாக அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மணிரத்னம் படத்தில் நடிக்க சென்று விட்டார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘விக்ரம் – 3’ ஆரம்பம் ஆகும் என, அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால், அந்தப் படத்தை கமல் இப்போது தொடங்க வாய்ப்பு இல்லை.
லோகேஷ் கனகராஜ், இப்போது ரஜினியின் ‘கூலி’ படத்தில் மும்முரமாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் ‘கைதி’ இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.
அதுவரை காத்திருக்க உலகநாயகன் தயாராக இல்லை.
ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவ், முதன் முறையாக டைரக்ட் செய்யும் படத்துக்கு கமல் கால்ஷீட் கொடுத்துள்ளார். விரைவில் அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
இந்தப் படத்தை முடித்து விட்டு, அமெரிக்காவில், தான் திரைக்கதை எழுதிய படத்தை ஆரம்பிக்க கமல் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் படத்தை அவரே இயக்குவாரா? அல்லது வேறு யாரும் இயக்குவார்களா? என தெரியவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.