Take a fresh look at your lifestyle.

கடைசிவரை சம்பளத்தை உயர்த்தாத கே.பாலசந்தர்!

‘பான் இந்தியா’ படங்களை உருவாக்கி, இந்தியாவைத் தாண்டி அறியப்படுகிறார்கள், இன்றைய தமிழ் இயக்குநர்கள். ஆனால், தமிழில் மட்டுமே படங்களை இயக்கி, உலகத் தமிழர்கள் மத்தியில் இடம்பிடித்த முதல் இயக்குநர் கே.பாலசந்தர். தமிழில் அவர் ஒரு ‘டிரெண்ட் செட்டர்’.

முழுக்க முழுக்கப் புதுமுகங்களை வைத்தே படம் இயக்கி  வெற்றி பெற்ற முதல் தமிழ் இயக்குநரும் அவர்தான்.

கோடம்பாக்கம் வட்டாரத்தில் ‘கே.பி.’ எனச் செல்லமாக அழைக்கப்பட்ட  ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர், ஒரு காலத்திலும் உச்ச நட்சத்திரங்களை வைத்துப் படங்கள் செய்ததில்லை. ஆனால் அவரால் உச்ச நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டார்கள்.

மேடை நாடகங்களில் இயங்கிக் கொண்டிருந்த பாலசந்தர், 1965 ஆம் ஆண்டு வெளியான ‘நீர்க்குமிழி’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து, நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், எதிரொலி, நான்கு சுவர்கள், இரு கோடுகள் என பல வெற்றிப் படங்களை இயக்கினார்.

1973 ஆம் ஆண்டு ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் கமல்ஹாசனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினிகாந்தை அறிமுகம் செய்தார்.  தொடர்ச்சியாக ரஜினியை வைத்து  நான்கு படங்கள் இயக்கி அவரை ‘ஸ்டார்’ ஆக்கினார்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய கே.பி., தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்தபோதும், தனக்கான சம்பளத்தை தானாக ஒருபோதும் உயர்த்திக் கொண்டதில்லை.

இது குறித்து அவரது மகள் புஷ்பா கந்தசாமி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் சுருக்கம்:

“தான் என்ன நினைக்கிறாரோ அது படத்தில் வர வேண்டும் என நினைப்பவர் அப்பா. நடிக்கும் நடிகர்களுக்கு திருப்தியைக் கொடுக்க வேண்டும்.

நம்பிப் படம் பார்க்க வரும் மக்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

இந்த மூன்றையும் அவர் கடைசிவரை கடைபிடித்தார். இதில் சிலமுறை மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம்.

ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று அவர் செய்ததே இல்லை. தயாரிப்பாளர்கள் விரும்பிக் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்.

பணத்தைப் பற்றி கவலைப்படாமல், அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கிவிடுவார். அதில் தான் அவருக்கு விருப்பம்” என்று மனம் திறந்து கூறியுள்ளார் இயக்குநர் சிகரத்தின் வாரிசு.

– பாப்பாங்குளம் பாரதி.