பேண்டஸி படம் என்றால் நம்மூரில் சிலர் ‘சூப்பர்ஹீரோ’ படங்களைச் சொல்வார்கள். நம்பவே முடியாத சாகசங்கள், கற்பனைகளைச் சொல்கிற படங்களை அந்த வகைமையில் சிலர் வரிசைப்படுத்துவார்கள். கடந்த காலம், எதிர்காலத்தைச் சொல்கிற படங்களில் யதார்த்தத்திற்கு நேர்மாறான விஷயங்களைப் புகுத்துகையிலும் அது நடக்கும்.
மிகச்சில படங்களில் மட்டும் ‘இது பேண்டஸி தான்’ என்று திரையில் வரும் காட்சிகளைப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவே வெகுநேரம் ஆகும். அதற்குள் தியேட்டரை விட்டு வெளியே வருகிற சூழலும் கனிந்துவிடும்.
கிட்டத்தட்ட அப்படியொரு பேண்டஸி படம் தான் ‘ஜுக்னுமா’. மனோஜ் பாஜ்பாய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ராம் ரெட்டி இயக்கியிருக்கிறார்.
எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘ஜுக்னுமா’?
‘ஜுக்னுமா’ கதை!
இமயமலை அடிவாரத்திலுள்ள ஒரு நிலப்பகுதி. அங்கிருக்கும் மூன்று மலைகளைச் சேர்த்தாற் போன்று தேவ் (மனோஜ் பாஜ்பாய்) என்பவரின் எஸ்டேட் இருக்கிறது. ஆப்பிள் மரங்கள் அதிகமிருக்கிற அந்த எஸ்டேட்டில் பைன் உள்ளிட்ட வேறு சில மரங்களும் உண்டு.
1989-ம் ஆண்டு. டிவி, மொபைல் என எந்த சாதனங்களும் இல்லாத காலகட்டம்.
மனைவி நந்தினி, மகள் வன்யா, மகன் ஜுஜு உடன் மிக எளிமையான வாழ்வை வாழ்கிறார் தேவ். அவர்களோடு இணைந்து, வானில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவதும் மனதுக்குப் பிடித்த பாடலைப் பாடுவதும் என அவரது வாழ்வு இருக்கிறது.
அனைத்துக்கும் மேலாக, தானே வடிவமைத்த சிறகுகளைக் கொண்டு ஒரு பறவையைப் போல பறப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார் தேவ். அவரது குடும்பத்தினருக்கும் அது தெரியும். மகளுக்கும் மகனுக்கும் அது ஈர்ப்பைத் தந்தாலும், அவர் அது பற்றி அவர்களிடம் அதிகம் விவாதிப்பதில்லை.
ஒருநாள், விடுதியில் தங்கிப் படித்து வரும் வன்யா கோடை விடுமுறைக்காக வீட்டிற்கு வருகிறார். பருவ வயதுக்கு உரிய கிளர்ச்சிகளோடு இருக்கிறார்.
குதிரையை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் வன்யா, அந்த மலைப்பகுதியில் அமைதியாகத் தனி வாழ்க்கை மேற்கொள்கிற ஒரு கும்பலைப் பார்க்கிறார்.
அதிலிருக்கும் இளைஞனைக் கண்டதும் ஈர்ப்பு கொள்கிறார். அந்த இளைஞன் கண் மூடியதும் வன்யாவின் கண்களும் மூடுகின்றன. அப்போது, அவரது குரலைக் கேட்கிறார்.
நெருங்கிப் பழகிய உணர்வு கிடைக்கிறது. தோழி ஒருத்தியை தொலைபேசியில் அழைத்து, அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
அந்த நபரைக் காண்பதற்காக, அடுத்தடுத்த நாட்களும் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார் வன்யா.
இதற்கிடையே, தேவின் எஸ்டேட்டில் பூச்சி மருந்து அடிக்கும் செயல்பாடு தொடங்குகிறது. ஊர் மக்களில் சிலர் தயக்கத்துடன் அந்த வேலையைச் செய்ய ஒப்புக்கொள்கின்றனர்.
இந்த நிலையில், தனது எஸ்டேட்டில் ஒரு ஆப்பிள் மரம் கருகிக் கிடப்பதைக் காண்கிறார் தேவ். அடுத்தடுத்த நாட்களில் சில மரங்கள் எரிகின்றன.
ஊர் மக்கள் தான் அதற்குக் காரணமா என்ற எண்ணம் தேவ் மனதை அரிக்கிறது. ‘தனது வேலையாட்களைச் சந்தேகப்படுவது சரியா’ என்ற கேள்வி அவரைத் துளைக்கிறது.
ஆனால், அடுத்தடுத்து பெரிய அளவில் மரங்கள் எரிந்து சாம்பலாகத் தொடங்கியது பைத்தியம் பிடித்தாற் போல ஆகிறார் தேவ்.
எஸ்டேட் முழுவதுமாக எரிந்துவிடும் என்கிற நிலை உருவாகிறபோது, அவர் ஒரு முடிவுக்கு வருகிறார். அதனைச் செயல்படுத்துவதற்குள், அந்த தீ விபத்துக்குக் காரணம் யார் என்பதை அறிகிறார்.
அதன்பிறகு தேவ் என்ன ஆனார்? அவரது குடும்பம் என்ன ஆனது என்று சொல்கிறது ‘ஜுக்னுமா’வின் கிளைமேக்ஸ்.
நுணுக்கமான ‘கதை சொல்லல்’!
நிச்சயமாக, இது ‘கமர்ஷியல்’ பட ரசிகர்களுக்கானது அல்ல. ஏனென்றால் இந்தப் படத்தில் கதாபாத்திரங்கள், கதைக்களம், திருப்பங்கள் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்துவது ரொம்பவே ‘ஸ்லோ’வாக இருக்கும்.
மிக முக்கியமாக, ‘கிளைமேக்ஸ்’ திருப்பத்தைப் பல ரசிகர்களால் எளிதாக யூகிக்க முடியும். ஆனால், அதன்பிறகு வருகிற முடிவை அலசி ஆராயக் குறைந்தபட்சம் சில மணி நேரங்கள் ஆகிவிடும். அந்தளவுக்கு ‘நுணுக்கமான’ கதை சொல்லலை கொண்டிருக்கிறது ‘ஜுக்னுமா’.
இந்த டைட்டிலில் ஒன்றிணைந்துள்ள வார்த்தைகளுக்கு ‘மின்மினிப் பூச்சிகள்’ என்று அர்த்தமாம். அவை ஆங்காங்கே இப்படத்தில் வந்து போகின்றன.
போலவே, நாயகன் பாத்திரம் தானே வடிவமைத்த இறக்கைகளை உடலில் பொருத்திக்கொண்டு பறப்பதாகத் திரைக்கதையின் தொடக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இப்படத்தின் முடிவை அதனோடு பொருத்திப் பார்க்கலாம். அதுவே இக்கதையில் உள்ள ‘பேண்டஸி’ அம்சத்தை உணர்த்தும்.
உண்மையைச் சொன்னால், விஎஃப்எக்ஸ்ஸை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி அனைத்து ரசிகர்களுக்கும் எளிதாகப் புரியும்படி அக்காட்சிகளை விவரித்திருக்க முடியும். இயக்குனர் ராம் ரெட்டி, ‘அது என் ஸ்டைல் அல்ல’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அது அவரது காட்சியாக்கத்தில் வெளிப்படுகிறது.
வித்தியாசமான படங்களைத் தயாரிக்கிற குனீத் மோங்கா, அனுராக் காஷ்யப் ஆகியோர் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்திருக்கின்றனர். அவர்களது பங்களிப்பினால் ‘ஜுக்னுமா’ பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்றிருக்கிறது.
பி.எஸ்.வினோத் ராஜின் ‘கொட்டுக்காளி’ பார்த்துவிட்டு பெரும்பான்மையான தமிழ் சினிமா ரசிகர்கள் என்னவாக ‘பீல்’ செய்தார்களோ, அதே போன்றதொரு வரவேற்புதான் ‘ஜுக்னுமா’வுக்கும் கிடைத்திருக்கிறது.
அதே நேரத்தில், இதனை ‘ஒரு பரீட்சார்த்த முயற்சி’யாக நோக்குபவர்களுக்கு இப்படம் பிடிக்கக்கூடும்.
இதனை 16 எம்எம் பிலிமில் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுனில் போர்கர்.
ஆப்பிள் மரங்கள் பற்றி எரிவதை விஎஃப்எக்ஸில் காட்டினாலும், அந்த ஷாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி, ஒரு பழைய போட்டோ ஆல்பத்தை புரட்டிப் பார்த்தால் கண்கள் என்ன உணருமோ அதனைத் திரையில் தந்திருக்கிறது ஒளிப்பதிவு.
ஒவ்வொரு காட்சியையும் நம்மை யோசிக்கும் வைக்கும் விதமாக ‘கட்’ செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர்கள் சித்தார்த் கபூர் மற்றும் ராம் ரெட்டி.
காட்சிகளின் பின்னணியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது ஜுஹி அகர்வாலின் தயாரிப்பு வடிவமைப்பு.
இன்னும் ஒலி வடிவமைப்பு, ஒப்பனை, டிஐ, விஎஃப்எக்ஸ் எனப் பல விஷயங்கள் நம்மை தொண்ணூறுகளுக்கு அழைத்துச் செல்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன.
திரைக்கதை முழுக்கவே ஒரு மூன்றாவது நபரின் ‘பிளாஷ்பேக்’கை சொல்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனோஜ் பாஜ்பாய், அவரது மனைவியாக நடித்த பிரியங்கா போஸ், மகளாக வரும் ஹிரால் சிது, மகனாக வரும் அவான் பூகோட், மேலாளராக வரும் தீபக் தோப்ரியால், ஒரு தொழிலாளியின் மனைவியாக வரும் திலோத்தமா ஷோம் உட்படச் சில டஜன் கலைஞர்கள் ‘ஜுக்னுமா’வில் வந்து போகின்றனர்.
அவர்கள் நடித்தார்களா என்ற எண்ணம் ஏற்படும் வகையிலேயே அவர்களது திரையிருப்பு உள்ளது. அதுவே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் உள்ளது.
‘தேவதைகளாக இப்பூமியில் இருப்பவர்களும் மனிதர்களைப் போலத்தான். ஆனால், அவர்களது உலகம் வேறு, மனிதர்களின் உலகம் வேறு’ என்று இப்படத்தில் ஒரு வசனம் வரும். அதனைச் சுட்டிக்காட்டும் விதமாக, இப்படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வடிவமைக்கப்பட்டிருப்பது அருமை.
இப்படத்தில் பெரிதாக ‘லாஜிக் மீறல்’களைச் சொல்ல இயலாது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மிக மெதுவாக அனைத்து விஷயங்களுக்கும் திரைக்கதையில் தீர்வு சொல்லப்பட்டிருப்பதை அறியலாம். இன்னும் நுணுக்கமாக யோசித்தால், ‘இது ஒரு பேண்டஸி படம்’ என்பதும் பிடிபடும்.
அந்த கதை சொல்லலுக்குச் சொந்தக்காரரான ராம் ரெட்டியைப் பாராட்டுவதா அல்லது திட்டித் தீர்ப்பதா என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்