பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் கலைமாமணி ஜூடோ ரத்தினம் 1980-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரு ஆங்கில படம் உட்பட 9 மொழிப் படங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் திரைப்படங்களின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குநராக இருந்து இவர் பணியாற்றிய சகலகலா வல்லவன், முரட்டுக்காளை, பாயும்புலி, நெற்றிக்கண், நல்லவன் என பல்வேறு வெற்றிப்படங்களில் இடம்பெற்ற இவரது சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டுள்ளன.
1930-இல் பிறந்த ரெத்தினம் முதலில் சண்டைப் பயிற்சிகளிலெல்லாம் நாட்டம் இல்லாதவராகத்தான் இருந்திருக்கிறார்.
ஒரு சமயம் குடியாத்தம் திருமகள் மில்லிலே வேலைக்கு ஆள் எடுக்கும்போது இவரும் சென்றிருக்கிறார். மேலாளர் வர்க்கீஸ் என்பவர் இவரைப் பார்த்து இந்தப் பையன் நோஞ்சானாக இருக்கிறானே…. இரவுப் பணிக்கு இவன் ஒத்து வருவானா” என்று கேட்டுவிட்டார்.
அவர் அப்படி கேட்டது இவருக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் போய்விட்டது. அப்போதுதான் இவருக்கு உடம்பைப் பற்றி எண்ணமே முதன் முதலாக ஏற்பட்டது.
உடனே ‘மகாபாரதம்’ மாசிலாமணி என்பவரிடம் போய் தேகப் பயிற்சி பெறத் துவங்கினார். செய்யச் செய்ய ஒரு வெறியேற்பட்டது. அதோடு விடாமல் தென்னிந்திய பாக்ஸிங் சாம்பியன் பரமசிவனிடம் போய் பயிற்சி எடுத்துக்கொண்டார்.
பிறகு ஜி.ராமு என்பவரிடம் ‘ஜூடோ’ பயிற்சி பெற்றார். சோவியத் நாட்டுப் பயிற்சி பெற்ற ரங்கனாதனிடம் உருட்டுத் திரட்டிக் காட்டுகிற பயிற்சியும் எடுத்துக் கொண்டார். இதெல்லாம் போதாதென்று தங்கவேலுவிடம் யோகாசனப் பயிற்சியும் பெற்றார்.
இவர் நேரடியாக ஸ்டண்ட் மாஸ்டராக சினிமாவில் புகுந்துவிடவில்லை. ஒரு நாள் வட ஆற்காடு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒரு விழாவிலே உடற்பயிற்சிகளைச் செய்து காட்டிக் கொண்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு முகவை ராஜமாணிக்கமும் வந்திருந்தார். அப்போது, “இந்த அளவுக்கு உங்கிட்டே திறமை இருக்கு. வித்தை இருக்கு. நீ ஏன் இங்கே இருக்கணும்? என்னோட சென்னைக்கு வா” என்று அழைத்து வந்து, அவர் கதை-வசனம் எழுதிக் கொண்டிருந்த ‘தாமரைக் குளம்’ படத்திலே நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு இவரை டூப் போட வைத்திருக்கிறார். இது தான் இவரது முதல் படம். பிறகு விட்டலாச்சாரியார் படங்களில் என்.டி.ராமராவுக்காகக் கூட டூப் போட்டு நடித்திருக்கிறார்.
மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வல்லவன் ஒருவன்’ தான் இவரை முதன் முதலாக ஸ்டண்ட் மாஸ்டராக மாற்றிய படம். மாஸ்டர் என்ற அந்தஸ்தை இந்தப் படத்தின் மூலமாக இவருக்கு வழங்கியவர் மாடர்ன் தியேட்டர்ஸின் அதிபர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள். இவரது தொழில் திறமையில் அந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் அவருக்கு இருந்தது.
இவர் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய ‘வல்லவன் ஒருவன்’ படத்தில் ஜெய்சங்கர்-மனோகர் ஆகியோருக்காக ஜூடோ முறையில் ஒரு சண்டைக் காட்சியை அமைந்திருந்தார். அந்தச் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பரபரப்பை உண்டாக்கி மிகுந்த வரவேற்பை இவருக்குப் பெற்று தந்தது.
இதற்காக தமிழ்க் கலை, இலக்கிய மன்றம் இவருக்கு ‘ஜூடோ’ என்ற பட்டத்தை வழங்கியது. ரசிகர்கள் இவரது திறமையை மெச்சிக் கொடுத்த இந்தப் பட்டத்தை என்றென்றும் இவரது பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்ள வேண்டுமென்று இவர் ஜூடோ ரெத்தினமாகிவிட்டார்.
தங்கக்கோபுரம், வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், கைதி கண்ணாயிரம், மாடி வீட்டு மாப்பிள்ளை, சகலகலா வல்லவன், பாயும் புலி, சிவப்புச் சூரியன், முரட்டுக் காளை, காயத்ரி, தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, திருப்பம், தூங்காதே தம்பி தூங்காதே சண்டைக்காட்சி அமைத்து பெயர் வாங்கிய படங்களில் சில.
– நன்றி: அன்று கண்ட முகம் இதழ்