Take a fresh look at your lifestyle.

மலையாள நடிகர் சங்கத்தில் மாற்றம் நிகழும்!

புதிய பெண் தலைவர் ஸ்வேதா மேனன் உறுதி

மலையாளத் திரை உலகில் சில மாதங்களுக்கு முன்னர், அங்குள்ள நடிகைகள் கிளப்பிய பாலியல் புகார், இந்திய சினிமா உலகையே அதிர வைத்தது.

இதன் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.

ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக மலையாள சினிமா நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவர் பதவியிலிருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார்.

மற்ற நிர்வாகிகளும் பதவி விலகியதால் ‘அம்மா’ சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனனும் நடிகர் தேவனும் போட்டியிட்டனர்.

இதில் ஸ்வேதா மேனன் வெற்றிபெற்றார். பொதுச் செயலாளராக, குக்கு பரமேஸ்வரன், பொருளாளராக உன்னி சிவபால், துணைத் தலைவர்களாக லட்சுமி பிரியா, ஜெயன்சேர்த்தலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இணைச் செயலாளராக அன்சிபா ஹாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலையாள நடிகர் சங்க வரலாற்றில் பெண் ஒருவர் தலைவராவது இதுதான் முதன்முறை.

முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பெண்களாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் இதுவே முதன் முறை.

மலையாள நடிகர் சங்க முதல் பெண் தலைவர் ஸ்வேதா மேனனை பல்வேறு தரப்பினர் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் அம்மா தலைவர் ஸ்வேதா அளித்துள்ள பேட்டி:

• “மலையாள நடிகர் சங்கம் சம்பந்தமாக மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் தலைமையிலான அணிகளில் நானும் ஒரு பகுதியாக இருந்துள்ளேன். அப்போது அவர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

நிஜமாகவே இப்போது நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் என்று சொல்லலாம்.

• நான் கற்றுக்கொண்ட விஷயங்களில் சில மாற்றங்களைச் செய்து, பிறகு அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

‘அம்மா’ என்ற அமைப்பு சரிந்துவிடாமல், அதிக கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஹேமா கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து மோகன்லால் விலகியது அதிர்ச்சியாக இருந்தது.

எதையும் அவர் எளிதில் விட்டுக்கொடுக்கும் நபர் அல்ல. நான் வரலாற்றை மாற்றி எழுத வரவில்லை.

சங்கத்துக்கான செயல்பாடுகளை அடுத்தடுத்து முன்னோக்கி எடுத்துச் செல்வேன்” என்று அழுத்தமாக தெரிவித்தார், ஸ்வேதா மேனன்.

– பாப்பாங்குளம் பாரதி.