பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் மார்ச் 27-ம் தேதி வெளியான படம் ‘எம்புரான்’.
முதல் பாகமான ‘லூசிபர்’ போலவே மிகப்பெரிய வெற்றியை இந்தப் படம் பெறும் என எதிர்பார்த்த நிலையில் வசூலில் ஓரளவு சாதித்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்டத் தவறியது.
இந்த நிலையில் மோகன்லாலின் அடுத்த படமான ‘துடரும்’, ஏப்ரல் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.
‘ஆபரேஷன் ஜாவா’ என்கிற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற தருண் மூர்த்தி தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மோகன்லாலுடன் ஷோபனா இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானபோது அதைப் பார்த்துவிட்டு பலரும் இது திரிஷ்யம் பாணியில் இருப்பது போல தெரிகிறது என்று கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் தருண் மூர்த்தி, “நிச்சயமாக இது திரிஷ்யம் படம் போல திரில்லர் படம் அல்ல.. அதே சமயம் இது ஒரு பீல் குட் படமும் அல்ல.. இன்னும் சொல்லப்போனால் ஒரு மிஸ்டரி அல்லது இன்வெஸ்டிகேஷன் படம் கூட அல்ல.
இது ஒரு பேமிலி டிராமா…. அதே சமயம் இரண்டாம் பாதியில் நீங்கள் எதிர்பார்த்த அந்த விறுவிறுப்பு இருக்கும்.
இது ஒரு மனிதனின் கதையை அவனது வாழ்க்கையில் சில நாட்கள் நடந்த நிகழ்வுகள் எப்படி அவனை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்றன என்பதை நகைச்சுவை, சோகம், அதிர்ச்சி, த்ரில் என எல்லாமும் கலந்து கொடுத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.