Take a fresh look at your lifestyle.

நஷ்ட ஈடு கேட்கும் இளையராஜா: தயாரிப்பாளர் விளக்கம்!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களுக்குப் படம் பிடித்துப்போனது. முதல் வாரத்தில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்த  நிலையில், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 3 பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக வழக்கறிஞர் மூலம், அந்தப் படத்தைத்  தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்து அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி மற்றும் இளமை இதோ இதோ ஆகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.

மேலும், 3 பாடல்களையும் படத்தில் திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் – 7 நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் மைத்ரி முவி மேக்கர்ஸ் ரவி சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இளையராஜாவின் மூன்று பாடல்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம்.

தொடர்புடைய இசை நிறுவனங்களிடம் முறையே அனுமதி பெற்றுள்ளோம். அவர்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறோம். தடையில்லாச் சான்றும் பெற்றுள்ளோம்.

இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் இதுவரை வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

நோட்டீஸ் கிடைத்ததும் எங்கள் சட்டக் குழு அதை சந்திக்கும்” என்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.

 – பாப்பாங்குளம் பாரதி