Take a fresh look at your lifestyle.

குட் டே – ’குடி’மக்கள் பார்க்க வேண்டிய படம்!

‘எங்க ஊரு பாட்டுக்காரன்னு ஒரு படம் ஹிட் ஆன உடனே வில்லுபாட்டுக்காரன், நாடோடி பாட்டுக்காரன், தெம்மாங்கு பாட்டுக்காரன்னு நிறைய டைட்டில் வச்சதுக்கு காரணம் ஒரு சென்டிமெண்ட் தான்’.

தமிழ் சினிமா குறித்து பழங்கதைகள் பேசுகிறவர்களிடம் இது போன்ற பல ‘டாபிக்’குகளை கேட்க முடியும்.

ஒரு வெற்றிப்படத்தின் சாயலில் டைட்டில் வைப்பது, பாத்திரங்கள் அல்லது கதையோட்டத்தை வார்ப்பது என்பது புதிதல்ல. அந்த வகையில் ’குட் நைட்’ வெற்றியை மனதில் கொண்டே ‘குட் டே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகத் தோன்றியது.

ஆனால், ‘குட் டே’ டீசரை பார்த்தபோது ‘இது எப்படிப்பட்ட படமாக இருக்கும்’ என்ற கேள்வி எழுந்தது.

அந்தக் கேள்வியே, என்.அரவிந்தன் இயக்கத்தில் பிருத்விராஜ் ராமலிங்கம், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், காளி வெங்கட், போஸ் வெங்கட், பக்ஸ், வேல ராமமூர்த்தி, ஜீவா சுப்பிரமணியம், ஆர்.கே.விஜய் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘குட் டே’வை காணத் தூண்டியது. இப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘குட் டே’?

‘குட் டே’ கதை!

மது போதையில் மூழ்கிச் சாலையோரம் சரிந்து கிடக்கிற, பொது வெளியில் வம்பு இழுக்கிற, இயல்பில் இல்லாத குணாதிசயங்களை கைக்கொள்ளத் துடிக்கிற மனிதர்கள் பலர் இன்று சமூகத்தில் உலவுகின்றன. அவர்களில் ஒருவரது ‘ஒருநாள் கூத்து’ தான் ‘குட் டே’ ஆக மலர்ந்திருக்கிறது.

திருப்பூரில் ஒரு ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் சாந்தகுமார் (பிருத்விராஜ் ராமலிங்கம்). அவரது மனைவி, இரண்டு மகள்கள் சேலம் அருகே வசிக்கின்றனர்.

‘உங்க அம்மாவுக்கும் பணம் அனுப்பிக்கிடே இருங்க’ என்று மொபைல்போன் வழியே சண்டையிடுகிற மனைவியை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல், உறவுகளிடம் பாசத்தை வெளிப்படுத்த முடியாமல், தனது அறையில் வசிக்கும் நண்பர்களிடம் சரியான முறையில் ‘கொடுக்கல் வாங்கல்’ வைத்துக்கொள்ள இயலாமல் வெறுமையை உணர்கிறார் சாந்தகுமார்.

உடன் வேலை பார்க்கும் எல்லோருக்கும் சம்பளம் வந்துவிட, அவரது வங்கிக்கணக்கில் மட்டும் பணம் செலுத்தப்படவில்லை.

என்ன, ஏது என்று கேட்கச் சென்றால், உரிமையாளரின் அறையில் சாந்தகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார் மேலாளர்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண்ணிடம் தகாத முறையில் மேலாளர் பழகியதைச் சாந்தகுமார் தட்டிக் கேட்டதால் வந்த விளைவு அது.

அதன்பிறகும், அதே மேலாளரிடம் கைகட்டி நின்று ‘சம்பளம் போடல’ என்று தலைகுனிந்து நிற்கிறார் சாந்தகுமார். அந்த அவமானம் அவரைப் பிடுங்கித் தின்கிறது.

சில மணி நேரங்களில் அவரது வங்கிக்கணக்கில் சம்பளப் பணம் வந்து சேர்கிறது. மனைவிக்கு குறிப்பிட்ட தொகையை அனுப்புகிறார். அடுத்த சில நிமிடங்களில் செல்போன் அழைப்பு வருகிறது. மனைவி வழக்கம் போலச் சண்டையிடுகிறார்.

அந்த நேரத்தில், மது அருந்திக் கொண்டிருக்கிறார் சாந்தகுமார். தொலைக்காட்சியில் ஒரு பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதனைக் கேட்டதும், கல்லூரியில் உடன் படித்த கிருஷ்ணவேணியின் (மைனா) நினைவு வருகிறது. உடனே ஒரு நண்பனிடம் அவரது எண்ணைக் கேட்டுப் பெறுகிறார்.

அடுத்த சில மணி நேரங்களில் வீட்டு உரிமையாளருடன் சண்டை, கிருஷ்ணவேணியின் கணவரோடு தகராறு என்று மது போதையில் ஏதேதோ செய்கிறார் சாந்தகுமார்.

அதன் உச்சமாக, காவல்நிலையத்தில் போலீசாரிடம் அடி உதை வாங்குகிறார்.

ஏற்கனவே ஒரு சிறுமி காணாமல் போன வழக்கில் துப்புக் கிடைக்காமல் திணறி வரும் இன்ஸ்பெக்டர் (ஆர்.கே.விஜய் முருகன்), போதையில் சலம்பிக் கொண்டிருக்கும் சாந்தகுமாரைப் பார்த்ததும் அடி வெளுத்தெடுக்கிறார்.

அத்தோடு அந்த நாள் முடிவடைவதில்லை. அந்த இன்ஸ்பெக்டரின் சட்டை மற்றும் ஒரு வாக்கிடாக்கியை எடுத்துக்கொண்டு ஓடி விடுகிறார் சாந்தகுமார்.

போதையின் உச்சத்தில் சாந்தகுமார் செய்கிற காரியங்கள், இனி அவரது வாழ்வில் ‘குட் டே’ கிடையாது என்ற நிலையை உருவாக்குகின்றன.

அதன்பின்னும் அவரால் தனது வாழ்க்கைக் கூட்டுக்குள் திரும்ப முடிந்ததா என்று சொல்கிறது ‘குட் டே’வின் மீதி.

உண்மையைச் சொன்னால், ‘சரக்கடிக்காமல் என்னால ஒருநாள் கூட இருக்க முடியாது’ என்று பிதற்றுகிற ‘குடி’மக்கள் காண வேண்டிய படமிது.

அதேநேரத்தில், வாழ்வில் ஒருமுறை கூட மதுவைத் துளியளவும் தொட்டதில்லை என்கிற மனிதர்களும் இப்படத்தைக் காணலாம். காரணம், இதில் இருக்கிற பல்வேறுபட்ட மனிதர்களின் துயர்மிகு வாழ்க்கை அனுபவங்கள்.

அதனை ரத்தமும் சதையுமாகச் சொன்ன விதத்தில் பிரமிக்க வைக்கிறது ‘குட் டே’ மேக்கிங்.

‘எப்புட்றா’ மேக்கிங்!

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்க்கைச் சம்பவங்கள் சிலவற்றைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கதையை நாயகனும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் ராமலிங்கமே எழுதியிருக்கிறார்.

இந்த படத்தில் பிருத்விராஜ் உடன் கார்த்திக் நேத்தா ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார். அவரைத் தெரியாதவர்கள் கூட அந்தக் காட்சியைக் கண்டால் சிரித்து உருளலாம்.

அது போன்ற பல காட்சிகள் அடங்கிய இதன் திரைக்கதைதான் இப்படத்தின் யுஎஸ்பி.

இதில் இணை இயக்குனராகப் பணியாற்றியிருக்கும் பூர்ணா ஜேஎஸ் மைக்கேல் இதன் திரைக்கதை வசனத்தை அமைத்திருக்கிறார்.

தொடக்கத்தில் துளியளவு சொல்கிற விஷயங்களைப் பின்பாதியில் மிகப்பெரிதாக இடம்பெற வைத்திருக்கிற ‘டீட்டெய்லிங்’ அவரது திரைக்கதையைக் கொண்டாடத் தூண்டுகிறது.

உதாரணமாக, தொடக்கக் காட்சியொன்றில் ஷேர் ஆட்டோவில் நாயகன் பயணிக்கும்போது முன்னே ஒரு ஆட்டோ செல்லும். அதில் ஒரு வாசகம் இருக்கும். பின்பாதியில் அந்த ஆட்டோ ஓட்டுநராக காளி வெங்கட் வருவார்.

சிறுமி காணாமல் போனது குறித்துப் புகார் தெரிவிக்க வருகிற தந்தையைக் கடந்து செல்வார் நாயகன். பின்பாதியில் அந்த விஷயம் என்னவானது என்று சொல்லப்பட்டிருக்கும்.

இந்த ‘டீட்டெய்லிங்’கோடு ஒரு விதமான கொண்டாட்டத்தையும் கொண்டிருப்பது திரைக்கதையின் இன்னொரு ப்ளஸ்.

‘குடிச்சுட்டு போதையில இருக்கறவனை ஸ்கீரின்ல பார்த்தா என்ன ஜாலி கிடைக்கும்’ என்கிற மனநிலையை ‘குட் டே’ சுக்குநூறாக உடைக்கிறது.

அதற்குச் சரியான முறையில் அமைந்துள்ள காட்சியாக்கமே காரணம். அந்த வகையில் நம்மைக் கவர்கிறார் இப்படத்தின் இயக்குனர் அரவிந்தன்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் படத்தொகுப்பாளராகவும் மதன் குணதேவ் பணியாற்றியிருக்கிறார். இந்த காம்பினேஷன் புதிது.

ஆனால், ஓரிடத்தில் நிற்காமல் திரிந்து கொண்டே இருக்கிற கேமிராவைப் படத்தொகுப்பு மேஜையில் எப்படி கட்டுக்குள் கொண்டு வர முடிந்திருக்கும் என்ற கேள்விக்கும் அதுவே பதிலாக உள்ளது. மனிதர் இரண்டிலும் அசத்தியிருக்கிறார்.

சங்கரின் கலை வடிவமைப்பு, இரவு நேர திருப்பூர் நகரத்தையும் அங்கு உலாவுகிற போதை விரும்பிகளின் உலகத்தையும் திரையில் அழகாகக் கட்டமைத்திருக்கிறது.

இசையைப் பொறுத்தவரை ஒரு ராஜாங்கமே நடத்தியிருக்கிறார் கோவிந்த் வசந்தா. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, நாயக பாத்திரத்தோடு ஒவ்வொருவரும் ஒன்றியாக வேண்டுமென்ற அவரது மெனக்கெடல் படத்தினைச் செறிவுபடுத்தியிருக்கிறது.

இன்னும் ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல அம்சங்கள் கதையோட்டத்திற்குத் தக்கவாறு பங்களிப்பைத் தந்திருக்கின்றன.

வெகுநாட்களுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருப்பதாக உணர வைக்கிறது ‘குட் டே’.

படம் முழுக்க நாயகன் பிருத்விராஜ் ராமலிங்கமே நிறைந்திருக்கிறார். ‘புதுமுகமா இருக்காரே. இவரால இந்த கேரக்டரை தாங்க முடியுமா’ என்று யோசிக்கும்போதே, அந்த எண்ணைத்தை மெதுவாக அழிக்கத் தொடங்குகிறார். கிளைமேக்ஸ் நெருங்குகையில் பிரமிப்பில் ஆழ்த்துகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு இனிய வரவு.

மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நமக்குச் சிரிப்பை வரவழைக்கின்றன. ஆனால், அந்தக் காட்சிகளின் உள்ளடக்கம் அந்த கலைஞர்களைக் கொண்டாட வேண்டுமென்ற எண்ணத்தை வரவழைக்கும்.

அவர்கள் மட்டுமல்லாமல், இந்தப் படத்தில் நடித்துள்ள பக்ஸ், போஸ் வெங்கட், ஆர்.கே.விஜய் முருகன், காளி வெங்கட், வேல.ராமமூர்த்தி என்று பலரும் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர்.

இது போன்று பிரபல கலைஞர்கள் ஒரு சில நிமிடங்கள் வந்து போகிற பாத்திரங்களை ஏற்கத் தொடங்கினால், சிறப்பான கதைகள் மீது வெளிச்சம் விழும்.

சுருக்கமாகச் சொன்னால், ‘தமிழ்லயும் இனி வாராவாரம் நல்ல படம் வரும்டா’ என்று சட்டை காலரை தூக்கிவிடும் அளவுக்கு உள்ளது ‘குட் டே’.

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், மணிகண்டன் மற்றும் மீத்தா ரகுநாத் உடபடப் பலர் நடித்த ‘குட் நைட்’ படத்தில் பல காட்சிகள் பகலில் நிகழ்வதாகக் காட்டப்பட்டிருக்கும். ஆனால், கதை இரவை மையப்படுத்தியிருக்கும்.

‘குட் டே’ திரைக்கதை பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகளையே கொண்டிருக்கிறது. ஆனால், நாயகன் பகற்பொழுது தருகிற வலி, வேதனைகளில் இருந்து விடுபடத் துடிப்பதைப் பேசுகிறது.

‘குட் நைட்’ மற்றும் ‘குட் டே’ இடையிலான சம்பந்தம் அல்லது முரண் என்பது அவ்வளவே..!

மது போதையில் வீழ்பவர்கள் அடைகிற அவமானங்களை விட, அவர்களைச் சார்ந்தவர்கள் அடைகிற வலிகளும் வேதனைகளும் மிக அதிகம்.

அதனை அவர்கள் உணரத் தயராகிவிட்டால் அந்த சமூகக் கேடு இல்லாமல் போகும் என்பதைப் பிரச்சாரத் தொனியில் இல்லாமல் ஒரு வாழ்வனுபவமாகச் சொன்ன வகையில் இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘குட் டே’.

அதற்காகவே, இப்படக்குழுவினரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்