அவ்வப்போது, சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றாலும், தமிழ் சினிமா ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நால்வர் அணியிடம்தான் இப்போது உள்ளது.
துணிவு, வலிமை படங்கள் மூலம் வசூலில் விஜயைத் தாண்டிய அஜித்துக்கு ‘விடாமுயற்சி’ பெரும் சோதனையாக அமைந்தது.
அந்தப் படத்தில் போட்ட முதலீட்டில், பாதிகூட, தயாரிப்பாளருக்கு வரவில்லை. இந்த நிலையில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 10 ஆம் தேதி வெளியானது.
படம் ‘குட்’ என சிலர் விமர்சனம் செய்தனர். சிலர் ‘பேட்’ என்றும், இன்னொரு சாரார் ‘அக்லி’ என்றும் விமர்சித்தனர். ஆனால் வசூலில் சக்கைப் போடு போடுகிறது அஜித் படம்.
முதல் நாளில் ரஜினி, விஜய் படங்களைத் தாண்டி அஜித் படம் வசூலித்துள்ளது.
முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில், விஜயின் ‘கோட்’ திரைப்படம் ரூ. 20.66 கோடி வசூலித்தது சாதனையாக கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் வேட்டையன் ரூ.14.66 கோடி வசூல் செய்திருந்தது.
அந்த இரு படங்களையும் ஓரங்கட்டி விட்டது ‘குட் பேட் அக்லி’. இந்தப் படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.28.5 கோடி நிகர வசூல் செய்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூல் ஈட்டிய படம் ‘குட் பேட் அக்லி’ என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.