Take a fresh look at your lifestyle.

விஜய் படத்தை இயக்கத் தயார்!

இயக்குநர் கவுதம் மேனன்

சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தைத் தொடர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘ஜோஷ்வா’ இமை போல காக்க.

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ‘பிக்பாஸ்’ வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராக்கே நடிக்க கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கார்த்திக் இசையமைத்துள்ள இந்தப் படம், மார்ச் ஒன்றாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தது படக்குழு.

அப்போது பேட்டி அளித்த கவுதம் மேனன், ‘இந்தப்படம் என்னுடைய 19-வது படம்.. ‘துருவ நட்சத்திரம்’ வெளியானால் அது என்னுடைய 20-வது படமாக இருக்கும்.

படத்தில் வருண் சிறப்பாக நடித்துள்ளார். கொரோனோ உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது” என தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்தும், அவரது கடைசிப் படத்தை இயக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பது பற்றியும் கவுதம் மேனனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “விஜய் இன்னும் நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் – விஜய்யின் இறுதிப் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இயக்கத் தயாராக இருக்கிறேன்” என்று பதில் அளித்தார்.

நடிகர் விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘GOAT’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இது விஜய்க்கு 68- வது படம்.

‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கப்போவதாக அறிவித்து விட்டார்.

இந்தப் படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகும் விஜய், அதன்பிறகு முழுநேர அரசியலில் பயணிக்க உள்ளார்.

விஜயின் கடைசி படத்தை இயக்க கோடம்பாக்கத்தில் பலத்த போட்டி நிலவுகிறது.

ஏற்கனவே வெற்றி மாறன், கார்த்திக் சுப்புராஜ், ஷங்கர், அட்லீ ஆகியோர் பெயர்கள் பட்டியலில் உள்ள நிலையில், புதிதாக கவுதம் மேனனும் அதில் இணைந்துள்ளார்.

விஜய்யின் கடைசி படத்தை டிவிவி எனும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி.