Take a fresh look at your lifestyle.

மனமொத்து ஏற்றுக் கொண்ட மணமுறிவு!

தமிழ்த் திரை உலகில் காதலில் வசப்படும் நட்சத்திர ஜோடிகள் கல்யாணம் செய்து கொள்வதும், அதே வேகத்தில் விவாகரத்து செய்து கொள்வதும் சகஜமாகி விட்டது.

முறைப்படி நீதிமன்றங்களுக்கு செல்லாமல் பரஸ்பரம் பிரிந்த ஜோடிகளும் தமிழ் சினிமாவில் உண்டு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வாய்தாக்களுக்கு சென்று வந்து, டைவர்ஸ் வாங்கிய தம்பதிகள் வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளனர்  ஜி.வி.பிரகாஷ் குமாரும் சைந்தவியும்.

இசையமைப்பாளராக வலம் வந்த ஜி.வி.பிரகாஷ் குமார், படங்களில் நடித்தும் வருகிறார். இவர் தனது பள்ளித் தோழியும், சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை மனமுருகிக் காதலித்தார்.

இந்த ஜோடி, கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். 12 ஆண்டுகள் இந்த காதல் தம்பதியர் விவகாரம் ஏதுமின்று குடும்பம் நடத்தினர். வாழ்க்கை வசந்தமாகவே இருந்தது.

திடீரென திருமண உறவு இருவருக்குமே கசந்து போனது. கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நிரந்தரமாகப் பிரிய முடிவு செய்தனர்.

இதனால் அவர்கள் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இருவரும் உரிய முடிவை எடுப்பதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வழங்கினார். கால அவகாசம் அவர்கள் முடிவை மாற்றக் கூடும் என நீதிபதி நம்பினார்.

ஆனால், இருவருமே தங்கள் முடிவில் தீர்மானமாக இருந்தனர். மனம் மாறவில்லை. ஆறு மாத காலம் முடிந்த நிலையில், இந்த வழக்கு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் நேரில் ஆஜரானார்கள். விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.

குழந்தை அன்வியை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என பிரகாஷ் குமார் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதி செல்வ சுந்தரி நேற்று தீர்ப்பளித்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் – சைந்தவி தம்பதிக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி  அவர் உத்தரவிட்டார்.

குழந்தையை சைந்தவி கவனித்து கொள்ளவும் நீதிபதி அனுமதி வழங்கினார்.

– பாப்பாங்குளம் பாரதி.