எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால், ‘ஜன நாயகன்’ மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி கிராமத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றது.
பனிமழை பொழியும் அடந்த வனப்பகுதியில் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டன. விஜயைக் காண ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் 50-க்கும் மேற்பட்ட காவலாளிகள், பவுன்சர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள், விஜயை ரசிகர்கள் நெருங்கவிடவில்லை.
படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விஜய் தனி விமானத்தில் மதுரை வந்து காரில் கொடைக்கானல் சென்றார்.
அதுபோல் படப்பிடிப்பு முடிந்ததும், கொடைக்கானலில் இருந்து காரில் நேற்று பிற்பகல் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் விஜயைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்களில் ஒருவர், பாதுகாப்பு வளையத்தைத் தாண்டிச்சென்று விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்றார்.
அவரை விஜய்யின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
துப்பாக்கியை எடுத்து அந்த ரசிகரின் தலையில் வைத்து விசாரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் சால்வையை அணிவிக்க விடாமல் அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதனிடையே கொடைக்கானலில் எடுத்த காட்சிகளுடன் படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.