‘தீர்க்கவே முடியாத பிரச்சினை எது?’ என முருகன் வினா எழுப்பினால், அதற்கு அவ்வையாரின் பதில் இதுவாகத்தான் இருக்கும்.
‘தமிழ்த்திரை உலக தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையேயான மோதல்’. உண்மைதான்.
அவ்வப்போது இந்த இரு தரப்புக்கும் இடையே புகைச்சல் எழுந்து நீண்ட பேச்சு வார்த்தைக்குப்பின், தீர்வு காணப்படும். இப்போது மீண்டும் இரு தரப்பினரிடையே ‘லடாய்’ உருவாகி இருக்கிறது.
ஓடிடி ஒளிபரப்பு மற்றும் சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட்டை குறைப்பது ஆகிய இரு பிரச்சினைகள், இந்த புதிய மோதலுக்கு காரணம்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில், ‘சின்ன பட்ஜெட் படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை தியேட்டர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
அப்போது தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரும். இதனால் இரு தரப்புமே பலன் பெறும் என தியேட்டர் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் வைத்தனர்.
இதனை தியேட்டர் உரிமையாளர்கள் நிராகரித்து விட்டனர். சென்னை ரோகிணி தியேட்டர் உரிமையாளரும், தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளருமான பன்னீர்செல்வத்தின் விளக்கம் இது:
‘ஒரு படத்தின் தயாரிப்பாளர், தனது படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிறார். இயக்குநருக்கு 40 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை ஊதியம். ஆக ஒரு படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்.
முதலில் படத்தின் பட்ஜெட் செலவை குறையுங்கள் அதன்பிறகு சின்னப் படங்களுக்கான டிக்கெட் விலையை குறைப்பது குறித்து பேசலாம்.
டிக்கெட் விலையை குறைப்பது பற்றி அரசாங்கத்திடம் தான் அவர்கள் (தயாரிப்பாளர்கள்) பேச வேண்டும். மின்சார கட்டணத்தை குறைக்க சொல்லுங்கள்’
பெயர் சொல்ல விரும்பாத சில தியேட்டர் அதிபர்கள் கருத்து இங்கே:
‘சின்ன பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் கட்டணத்தை குறைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை -எல்லா படங்களையும் ஓட்டுவதற்கான (’ஆபரேட்டிவ்’) செலவு ஒன்றுதான் அப்படி இருக்கும் போது சின்ன பட்ஜெட் படங்களுக்கு எப்படி கட்டணத்தை குறைக்க முடியும்?
தமிழ்நாட்டில் இப்போது 90 சதவீத தியேட்டர்களில் 100 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இது நியாயமான கட்டணம்.
ஒரு திரையுடன் கூடிய தியேட்டருக்கு 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. இந்த லட்சணத்தில் எப்படி டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடியும்? ‘என தியேட்டர் அதிபர்கள் எழுப்பும் வினாவில் உண்மை இல்லாமல் இல்லை.
தியேட்டர் அதிபர்கள் கேள்விக்கு தயாரிப்பாளர்கள் பதில் என்ன?
பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பதில் சொல்கிறார்:
“சின்ன படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை குறைக்க சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுத்துள்ளோம். பரீட்சார்த்தமான முறையில் இதனை செயல்படுத்தி பார்க்கலாமே? டிக்கெட் கட்டணத்தை குறைத்தால் கூட்டம் வருகிறதா என பார்க்கலாம். இரு தரப்புக்குமே அது லாபமாக அமைந்தால் தொடர்ந்து செயல்படுத்தலாம்’ என்பது பிரபுவின் வாதம்.
ஓடிடி விவகாரம்
டிக்கெட் குறைப்பு விவகாரம் முற்றுப்பெறாத நிலையில் சென்னையில் இரு நாட்களுக்கு முன் நடந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், ஓடிடி விவகாரம் குறித்து அலசப்பட்டுள்ளது.
‘தியேட்டர்களுக்கு புதிதாக வரும் திரைப்படங்கள் ஓடிடியில் நான்கு வாரத்தில் வெளியாகி விடுகிறது. இதனால் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் குறைந்து விடுகிறது.
எனவே புதிய திரைப்படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும்’ என இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளுக்கொரு கோரிக்கையை வைத்துள்ளார்கள்.
எது நிறைவேறும்? எது நிறைவேறாது? என பொருத்திருந்து பார்க்கலாம்.
-பாப்பாங்குளம் பாரதி.