Take a fresh look at your lifestyle.

தனுஷ் பட இயக்குநருடன் இணையும் ‘லெஜண்ட்’ சரவணன்!

அரசியல்வாதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் சினிமாவில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். தொழிலதிபர்கள் சிலரும் சினிமாவில் நடித்ததுண்டு.

ஹீரோவாக நடித்த முதல் தொழிலதிபர் என்ற பெருமை ‘வசந்த் & கோ’ விஜய் வசந்தையே சேரும்.

அரசியலில் சேர்ந்து மக்களவை உறுப்பினராகவும் உயர்ந்து விட்டதால் விஜய் வசந்துக்கு இப்போது சினிமா ஆசை இல்லை.

விஜய் வசந்துக்கு அடுத்தபடியாக தமிழ்த் திரை உலகில் நாயகனாக கால்பதித்த தொழிலதிபர் ‘லெஜண்ட்’ அருள் சரவணன்.

பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரான அவர் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அருள் சரவணனுடன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தது.

அதனை பொருட்படுத்தாமல் அடுத்த படத்தை தயாரித்து, ஹீரோவாக நடிக்கத் தயாராகி விட்டார் சரவணன். அவரது அடுத்த படத்தை துரை.செந்தில்குமார் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘எதிர்நீச்சல்’, ‘காக்கிக் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ ஆகியப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தற்போது சூரி நடிக்கும் ‘கருடன்’ என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார்.

இதனை அடுத்து துரை.செந்தில்குமார், லெஜண்ட் சரவணனை வைத்து புதிய படம் இயக்குகிறார். ‘கொடி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த வெங்கடேஷ் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.