Take a fresh look at your lifestyle.

பட்ஜெட்டை விட பலமடங்கு வசூலைக் குவித்த ‘டிராகன்’!

‘கோமாளி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். ரவி மோகன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் குறை வைக்கவில்லை.

இதனையடுத்து தனது இரண்டாவது படத்திலே ஹீரோவானார் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’ படத்தை இயக்கிய பிரதீப், தானே நடிக்கவும் செய்தார். அதுவும் சூப்பர் ஹிட்.

முதலிரண்டு படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய, பிரதீப் ரங்கநாதனுக்கு கோடம்பாக்கத்தில் நட்சத்திர அந்தஸ்து உருவானது.

அவரை, நாயகனாக வைத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கிய படம் ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த, ‘டிராகன்’ கடந்த 21 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே ‘டிராகனை’ உலகமெங்கும் விநியோகம் செய்தது. படத்திற்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் குவிந்து வருவதால் பாக்ஸ் ஆபீஸில் ‘ஹிட்’ அடித்துள்ளது.

‘டிராகன்’ படத்தின் மொத்த பட்ஜெட் 35 கோடி ரூபாய். முதல் இரு நாட்களில் இந்தப் படம் உலக அளவில் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது. மூன்றாவது நாளான நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் ரூ.11 கோடி வரை வசூலித்தது. அதாவது மூன்றே நாட்களில் பட்ஜெட்டைத் தாண்டி வசூலித்துள்ளது.

அனைத்து ஏரியாக்களிலும் கூட்டம் திரள்வதால் கூடுதல் திரைகளில் ‘டிராகன்’ திரையிட்டப்பட்டுள்ளது.

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால், ‘டிராகன்’ விரைவில் ரூ.100 கோடி வசூலைத் தொட்டுவிடும் என்பது பட நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர்கள் கணிப்பாக உள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.