Take a fresh look at your lifestyle.

விஜய் படத்தை இயக்க வேண்டும் என்பது பெருங்கனவு!

'டிராகன்' இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விருப்பம்

‘ஓ.. மை கடவுளே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன அஸ்வத் மாரிமுத்து, முதல் படத்திலேயே, படைப்பாளிகள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரின் கவனத்தை ஈர்த்தார். தனது அடுத்த படமான ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக்கினார்.

கயாடு லோஹர், அனுபமா பரவேஸ்வரன், மிஷ்கின், கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்டோர் நடித்த ‘டிராகன்’ 150 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்தது.

சுமார் 35 கோடி ரூபாயில் உருவான ‘டிராகன்’, போட்ட முதலீட்டைவிட பல மடங்கு அதிகமாக வருவாய் ஈட்டி, கோடம்பாக்கத்தை அதிர வைத்துள்ளது.

படத்தின் இயக்குநர் அஸ்வத், ஹீரோ பிரதீப், ஹீரோயின்கள் கயாடு லோஹர், அனுபமாவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

டைரக்டர் அஸ்வத்துக்கு தனி மரியாதையை உருவாக்கி உள்ளது ‘டிராகன்’. அஸ்வத் மாரிமுத்துவை அண்மையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை, அஸ்வத் மாரிமுத்து நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ‘டிராகன்’ படக்குழுவினரும் உடன் இருந்தனர்.

விஜயை சந்தித்த போட்டோவை தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஸ்வத் மாரிமுத்து, சில தகவல்களையும பகிர்ந்துள்ளார்.

அதன் விவரம்:

“நான் விஜயின் தீவிர ரசிகன் – சினிமாவில் கடுமையாக உழைத்து, படம் இயக்குவதற்கான முழு தகுதிப் பெற்று விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. இந்தச் சூழலில் விஜயைச் சந்தித்தேன் – அவர் என்னைக் கூர்ந்து நோக்கினார்.

அப்போது நான் அழுது விட்டேன். கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது – என்னுடன் வந்திருந்த படக்குழுவினர் வியப்போடு என்னைப் பார்த்தனர்.

விஜய்யை வைத்துப் படம் இயக்குவேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து விட்டேன்.

விஜயை பார்த்ததும் ஏன் அழுதேன் – விஜய் மீது எனக்கு அவ்வளவு அன்பு. எவ்ளோ?. அதை எல்லாம் சொன்னால் புரியாது” என பதிவிட்டுள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

‘ஜனநாயகன்’, விஜய், அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு நாயகன் ஆவாரா? என்பதை காலமே தீர்மானிக்கும்.

– பாப்பாங்குளம் பாரதி.