Take a fresh look at your lifestyle.

கோடம்பாக்கத்தில் தொடரும் விவாகரத்துகள்!

விஜய் - சங்கீதா மணமுறிவின் பின்னணி

கோடம்பாக்கத்தில் அண்மைக்காலமாக பிரபலங்களின், விவாகரத்துகள் அதிகரித்துக் கொன்டே செல்கின்றன. சில முக்கிய விவாகரத்து நிகழ்வுகளை அலசிவிட்டு, இறுதியில் விஜய் விவகாரத்துக்கு வரலாம்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பள்ளிப்பருவ நண்பர்கள். 12 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தக் காதல் கல்யாணத்திலும் முடிந்தது.

சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் மண வாழ்க்கை கசந்தது. 2024 ஆம் ஆண்டு, நீதிமன்றத்தில் பரஸ்பரம் முறையிட்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். ஆனால், சண்டை, சச்சரவு இல்லை, இன்றளவும் நண்பர்களாக நட்பைத் தொடர்கிறார்கள்.

நடிகர் (ஜெயம் ரவி) ரவி மோகன், மனைவி ஆர்த்தியுடன் 15 ஆண்டுகள் சுமுகமாக குடும்பம் நடத்தி வந்தார்.

யார் கண் பட்டதோ? இவர்களுக்குள் பிரச்சினை. 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இருவரும் மனு போட்டு பிரிந்து கொண்டார்கள்.

ஆனாலும் இருவரும் பொது வெளியில் இன்னமும் மோதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு, புழுதிவாரி இறைத்து கொள்கிறார்கள்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். திடீரென, பிரிந்துகொள்ள முடிவு எடுத்தனர்.

இதனைத் தடுக்க ரஜினிகாந்த் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விஜய் மீது பகீர் புகார்.

இப்போது நடிகரும், தவெக தலைவருமான விஜய் விவாகரத்துக்கு வருவோம்.

விஜய்க்கும், சங்கீதாவுக்கும் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவுத் திருமணம் நடந்தது.

சங்கீதா இங்கிலாந்து பிரஜை. கல்யாணம் முடிந்து உற்சாகமாக சென்னை திரும்பியது இந்த ஜோடி.

இங்கு வந்தபின் இருவருக்கும் இந்து முறைப்படி 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னை ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடைபெற்றது.

விஜய் – சங்கீதா தம்பதிக்கு 25 வயதில் ஜேசன் சஞ்சய் என்ற மகனும், 20 வயதில் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் விவாகரத்து கோரி, சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், சங்கீதா விஜய் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பது:

தொடக்கத்தில் நானும், எனது கணவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தோம் – எங்களது இல்லற வாழ்க்கை பிரச்சினையின்றி சுமூகமாக சென்றது. படப்பிடிப்பு இல்லாத காலகட்டங்களில் நாங்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றுவிடுவோம்.

சென்னையில் இருக்கும்போது, சினிமா தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன்.

எங்களுக்குள் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை நாங்களே சரிசெய்து வாழ்க்கையை சீராக நடத்தி வந்தோம்.

கடந்த 2021 ஏப்ரல் மாதம் எனது கணவருக்கு, ஒரு நடிகையுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் மனதளவில் பாதிப்படைந்தேன்.

அதன்பிறகு அந்த உறவைத் துண்டித்து விடுவதாக விஜய் உறுதியளித்தார். அதன்படி அவர் நடந்துகொள்ளவில்லை.

இந்தப் பிரச்சினையை சுமூகமாகப் பேசி ஒரு முடிவுக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

குழந்தைகள் எதிர்காலம் கருதி நானும் அமைதி காத்து வந்தேன்.

ஆனால், விஜய் என்னுடன் இருந்த திருமண பந்தத்தை அறவே துண்டித்துக் கொண்டதால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதித்து தனிமைப்படுத்தப்பட்டேன்.

எனக்கும், குடும்பத்துக்கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளையும் எனது கணவர் விஜய் நிறுத்தி விட்டார்.

தற்போது எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’ என தனது மனுவில் சங்கீதா கூறி உள்ளார்.

இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு ஏப்ரல் – 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் மீது மனைவி சங்கீதா அதிரடிப் புகாரை சொல்லி இருப்பது, சினிமா வட்டாரத்திலும், அரசியல் அரங்கிலும் புயலைக் கிளப்பியுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி