Take a fresh look at your lifestyle.

100 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸாகும் ‘கோ’!

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் கே.வி.ஆனந்த். ஒரு கட்டத்தில் இயக்குநராக அடுத்த உயரத்தை எட்டினார். இரட்டை எழுத்தாளர்கள் சுபா – கே.வி. ஆனந்த் கூட்டணி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. அதில் ஒரு படம் ‘கோ’.

அரசியல் கலந்த ஆக்ஷன் திரில்லரில் உருவான இந்தப் படத்தில் முதலில் கதாநாயகனாக நடித்தவர் சிம்பு. அவரை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கே.வி. ஆனந்துடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் சிம்பு. அவருக்கு பதிலாக ஜீவா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கார்த்திகா, அஜ்மல், பியா பாஜ்பாய், பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாச ராவ், போஸ் வெங்கட், ஜெகன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

எல்ரெட் குமார் தயாரித்த இந்தப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘கோ’ திரைப்படம் 50 கோடி ரூபாயை வசூலித்தது.

மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் வர உள்ள நிலையில், அரசியல் படமான ‘கோ’ மார்ச் 1 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ‘நாங்கள் தயாரித்தப் படங்களில் ‘கோ’ எங்களுக்கு வெற்றிகரமான படைப்பு. இந்தத் திரைப்படத்தின் வெற்றி எங்களுக்கு விவரிக்க முடியாத மனநிறைவையும் தந்தது.

மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்தின் மேஜிக், ஜீவா, அஜ்மல் ஆகியோரின் அபாரமான நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசையால் படம் இன்றும் சோர்வு ஏற்படுத்தாமல் ரசிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

மார்ச் ஒன்றாம் தேதி தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை மீண்டும் வெளியிடவுள்ளோம்.

படத்தின் இயக்குநர் கே.வி. ஆனந்த் நம்மோடு இல்லாத இந்த சமயத்தில் இந்தப் படத்தை வெளியிடுகிறோம் என எல்ரெட் குமார் தெரிவித்தார்.

ரீ- ரிலீசிலும் ‘கோ’ சாதனை படைக்கும் என நம்புவோம்.

– பாப்பாங்குளம் பாரதி.