தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர்களின் அடுத்த இலக்காக இருப்பது, இந்தி.
கே.பாலசந்தர் (ஏக் துஜே கேலியே) கே.பாக்யராஜ், (ஆக்ரி ரஸ்தா) ஆகியோர் ஒரு ‘ஹிட்’ கொடுத்துவிட்டு மீண்டும் கோடம்பாக்கத்துக்கே திரும்பி விட்டனர்.
பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ இந்தியில் எடுபடவில்லை.
இந்தியில் பல வெற்றிப் படங்களை அளித்த மணிரத்னம், இன்றும் அங்கே விரும்பப்படும் இயக்குநராக உள்ளார்.
விஜய்க்கு தொடர்ச்சியாக, தமிழில் மூன்று வணிக வெற்றியை அளித்த அட்லீ, ஷாரூக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ பெரும் வெற்றி பெற்றது. ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் குவித்தது.
ரமணா, தீனா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, சர்கார், கத்தி போன்ற சூப்பர் டூப்பர் சினிமாக்களைத் தமிழில் கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ், இந்தியில் ஏற்கனவே இரண்டுப் படங்களை இயக்கியுள்ளார்.
அவர் இயக்கிய இந்தி ‘கஜினி’யில் அமீர்கானும், ‘ஹாலிடே’ படத்தில் அக்ஷய் குமாரும் நடித்தனர்.
இப்போது முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது, 23-வது படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
இதனை அடுத்து அவர் சல்மான் கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்க உள்ளார்.
‘5 ஆண்டுகளுக்கு முன்பே சல்மான் கானிடம் ஒரு கதை சொன்னேன். சில சூழ்நிலைகளால் அந்தப் படத்தை உடனடியாக தொடங்க முடியவில்லை. அண்மையில் என்னை சந்தித்த சல்மான் கான், நான் ஏற்கனவே சொன்ன கதையை மீண்டும் கேட்டார்.
பொறுமையாக கேட்ட அவர், உடனேயே இந்தப் படத்தை ஆரம்பித்து விடலாம்’ என ஓகே சொல்லி விட்டார்’ என்ற முருகதாஸ் மேலும் தொடர்ந்தார்.
‘இது, ஆக்ஷன் நிறைந்த கதை. கூடவே சமூகத்துக்கு தேவையான ஒரு ஆழமான கருத்தும் இருக்கும். பான் இந்தியா படமாக உருவாக்கப் போகிறோம். இதில் மாறுபட்ட சல்மான் கானை, அவரது ரசிகர்கள் காணலாம்’ என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் படத்தின் ஷுட்டிங், முடிந்ததும் சல்மான் கான் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார், ஏ.ஆர்.முருகதாஸ்.
– பாப்பாங்குளம் பாரதி.