‘சந்தானம் படம் என்றாலே காமெடியாக இருக்கும்’ என்கிற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் உண்டு. நகைச்சுவை நடிகராக இருந்து பிறகு நாயகன் ஆனபிறகும் கூட, அது சிறிதும் குறையவில்லை.
அதற்கேற்றவாறு அவ்வப்போது சில ‘அட்டகாசமான’ திரையனுபவங்களைத் தந்து வருகிறார்.
அந்த வகையில், பிரேம் ஆனந்தோடு ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ வெற்றிக்குப் பிறகு சந்தானம் இணைந்து தந்திருக்கும் படமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
நடிகர் ஆர்யா இதனைத் தயாரித்திருக்கிறார். ஆப்ரோ இசையமைத்திருக்கிறார். கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா, ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன் உட்படப் பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
எப்படி இருக்கிறது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ தரும் திரையனுபவம்?
‘நெக்ஸ்ட் லெவல்’ கதையா?
‘ஹாரர்’ படங்களின் மையமாக என்ன இருக்கும்? ஒரு பேய் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
குறிப்பிட்ட இடத்தில் அது குடியிருக்கும் அல்லது தன்னை, தான் வாழ்ந்த இடத்தைப் பாழாக்கியவர்களைக் கண்டுபிடித்து பழி வாங்கும்.
அப்படி பேய் அல்லது பேய்கள் இருக்கிற இடத்தை ‘ஸ்பூஃப்’ செய்து, அவற்றோடு விளையாடுகிற பாணியிலான கதைகளைக் கொண்டிருந்தது ‘தில்லுக்கு துட்டு’.
அதனை ‘வீடியோ கேம்’ பாணியில் சொன்னது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. கிட்டத்தட்ட அதன் நீட்சியாக அமைந்திருக்கிறது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.
கிருஷ்ணா (சந்தானம்) ஒரு சினிமா விமர்சகர். சமூக வலைதளங்களில் அவரது பெயர் ‘கிஸா 47’.
புதிதாக வரும் திரைப்படங்கள் பிடிக்கிறதா, இல்லையா என்று அக்குவேறாக அலசி விளாசுபவர். அவரது தந்தை பாஸ்கர் (நிழல்கள் ரவி) ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறார்.
தாய் தேவகி (கஸ்தூரி) வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். பெரிதாகப் படிப்பு இல்லாமல், வீட்டில் இருந்து வருகிறார் தங்கை தேவி (யாஷிகா ஆனந்த்).
கிருஷ்ணாவுக்கு ஒரு காதலி உண்டு. அவர் பெயர் ஹர்ஷினி (கீதிகா திவாரி). அவரும் ‘சோஷியல் மீடியா’ பிரபலம் தான்.
ஒருநாள் புதிய படமொன்றைக் காண, கிருஷ்ணாவுக்கு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பிதழே வித்தியாசமாக இருக்கிறது.
அவர், அதில் குறிப்பிடப்பட்ட இடத்திற்குச் செல்கிறார்.
அந்தத் தியேட்டரே வித்தியாசமாக இருக்கிறது. அங்கு ‘ஹிட்ச்காக் இருதயராஜ்’ எனும் படம் ஓடுவதாக போஸ்டர்கள் தென்படுகின்றன. ஆனால், அந்த இடத்தைக் கண்டதும் பயந்து கிருஷ்ணா ஓடி வந்து விடுகிறார்.
வீடு திரும்பினால், காதலி ஹர்ஷினி தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு அந்த தியேட்டருக்கு சென்றது தெரிய வருகிறது.
பீதி மூளையைப் பிறாண்ட, மீண்டும் அந்த தியேட்டருக்கு செல்கிறார் கிருஷ்ணா. அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர் இரண்டு பேர். அவர்கள் (மொட்டை ராஜேந்திரன், கணேஷ்கர்) யூடியூபில் ‘வீண் பேச்சு’ என்ற பெயரில் சினிமா கிசுகிசு பேசுகிறவர்கள்.
ஆனால், அந்தத் தியேட்டர் நிர்வாகி (கதிர்) அவர்கள் இருவரையும் தடுக்கிறார். அதையும் மீறி அவர்கள் உள்ளே செல்கின்றனர்.
தியேட்டரில் தனது குடும்பத்தினர் இல்லாதது கண்டு திகைக்கிறார் கிருஷ்ணா. அப்போது, அவர் முன் வருகிறார் ‘ஹிட்ச்காக்’ இருதயராஜ் (செல்வராகவன்). அவருக்கும் ஒரு ‘ஹிஸ்டரி’ உண்டு.
அவர் ஒரு படத் தயாரிப்பாளர் கம் இயக்குநர். அவர் ஆக்கிய படத்தை மோசமாக விமர்சித்து ஓடாமல் செய்த காரணத்தால், சினிமா விமர்சகர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்று வருகிறார்.
அதனை அறிந்த ஒரு கும்பல் அவரையும் அவரது நண்பரையும் கொல்கிறது. அதன்பிறகு பேய்களாக மாறி இருவரும் தங்களது வெறியாட்டத்தைத் தொடர்கின்றனர்.
‘என்ன கிஸா, குடும்பத்தைப் பார்க்குறியா; அந்த ஸ்கீரினுக்குள்ள இருக்குறாங்க பாரு’ என்கிறார் இருதயராஜ். அப்போது தான் திரையைப் பார்க்கிறார் கிருஷ்ணா. அவரது தாய், தங்கை, தந்தை மூவரும் அதிலிருக்கின்றனர்.
‘நீயும் அந்தப் படத்துக்குள்ளே தான் போற; அந்தப் படம் முடியறப்போ உயிர் பிழைச்சா திரும்பவும் இங்க வந்துடு’ என்று ‘சவால்’ விட்டு கிருஷ்ணாவையும் அந்தத் திரைக்குள் திணித்து விடுகிறார். கூடவே வீண்பேச்சு பாபுவும் அவருடன் செல்கிறார்.
ஒரு கப்பலில் சிலர் பயணிப்பதாகக் காட்டுகிறது அந்தத் திரைப்படம். அந்தக் கப்பலில்தான் கிருஷ்ணாவின் குடும்பமே இருக்கிறது.
ஆனால், அவர்கள் எவருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. காரணம், அவர்கள் திரைப்படப் பாத்திரங்களாக இருப்பதுதான்.
அது போதாதென்று முகமூடி அணிந்த ‘பிராங்கென்ஸ்டைன்’ டைப் கொலைகாரர் ஒருவர் அங்கிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொன்று வருவதை அறிகிறார் கிருஷ்ணா.
தனது குடும்பத்தினரைக் காப்பாற்ற அவர் என்ன செய்தார்? திரைப்படம் ஓடி முடிவதற்குள், அவர்கள் உயிர் பிழைத்தார்களா என்பதைச் சொல்கிறது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.
இந்த ‘ஐடியா’ உண்மையிலேயே ‘நெக்ஸ்ட் லெவல்’ தான். சட்டென்று ஈர்ப்பைத் தரக் கூடிய இந்தக் கருவைத் திரையில் சுவாரஸ்யமாகக் காட்ட, விடாமல் ரசிகர்களைச் சிரிக்க வைக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த்.
வித்தியாசமான அனுபவம்!
காதுக்கு மேலே ‘மெஷின்’ கட்’ ஹேர்ஸ்டைல், ‘ராப்பர்’ பாணி ஆடைகள், ‘என்ன ப்ரோ’ என்றவாறே சென்னை பாஷை தமிழுடன் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிற பாணி என்று ‘வித்தியாசமான’ அனுபவத்தைத் தருகிறார் சந்தானம்.
சிலருக்கு அந்த ‘மாற்றம்’ ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால், சீரியசாக நடித்து நம்மைச் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
நாயகியாக கீதிகா திவாரி நடித்திருக்கிறார். அவர் நாயகியாக வருகிறார் என்பதைத் தாண்டி எதுவும் சொல்வதற்கில்லை.
இதில் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் இருவருமே ‘இயக்குநர்களாக’வே இதில் நடித்திருக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே இயக்கிய படங்களை ‘ஸ்பூஃப்’ செய்து வசனம் பேசியிருக்கின்றனர். அதையும் தாண்டி, அவர்கள் பாத்திரங்களாகத் தெரிவது அழகு.
வழக்கம் போல ‘மொட்டை’ ராஜேந்திரன் தனக்கான பணியைச் சிறப்பாகச் செய்து சில காட்சிகளில் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருக்கிறார்.
அவரை விட ஒரு படி மேலேறி ‘சிக்சர்’ அடித்திருக்கிறார் நிழல்கள் ரவி. என்ன, அவர் சம்பந்தப்பட்ட ‘குசு காமெடி’தான் சில ரசிகர்களை நிறையவே நெளிய வைக்கும்.
கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் இருவரையும் கவர்ச்சியாகத் தோன்ற வைத்திருக்கிறார் இயக்குநர்.
அதற்குக் காரணமும் சொல்கிறார். அதன்பிறகு, அவ்விரு பாத்திரங்களுக்குமான முக்கியத்துவத்தை மறந்திருக்கிறார்.
இது போக ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், கணேஷ்கர், டப்பிங் கலைஞர் கதிர் உட்படச் சிலர் இதில் நடித்திருக்கின்றனர்.
வழக்கமான ‘பேய் பட’ அனுபவத்தைக் கடந்து வேறுவிதமான காட்சியனுபவத்தை பெற உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி. படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகம் என்று ரசிகர்களே சொல்லும்படியாகப் பணியைச் செய்திருக்கிறார்.
படத்தில் வருகிற பல்வேறு களங்களை வடிவமைத்து, ‘வீடியோ கேம்’ பார்க்கிற உணர்வைத் தந்திருக்கிறார் கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன்.
பிளாஷ்பேக்கையும் நிகழ்காலத்தையும் ஒன்றிணைக்கிற கதை சொல்லலுக்கு வலு சேர்த்திருக்கிறது படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பணி.
சில்வா, ஹரி தினேஷின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, கொரியோகிராபர் கல்யாண் தான் ஆக்கிய காட்சியையே ‘ஸ்பூப்’ செய்திருக்கிற நடன வடிவமைப்பு என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இதிலிருக்கிறது.
விஎஃப்எக்ஸ் பணிகளை ஒருங்கிணைத்திருக்கிற ஹரிஹரசுதன், ‘இதெல்லாம் கிராபிக்ஸு’ என்று ரசிகர்கள் சொல்லிவிடாதவாறு காட்சிகளோடு அவர்கள் ஒன்றத்தக்க வகையில் பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
இது போக ஆடியோகிராஃபி உட்படச் சிலாகிக்கிற தொழில்நுட்ப அம்சங்கள் சில இப்படத்தில் உண்டு.
இயக்குநர் பிரேம் ஆனந்த் உடன் இணைந்து சந்தானத்தோடு ‘லொள்ளு சபா’ காலம் தொட்டுப் பயணிக்கிற முருகன், சேது இருவரும் இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கின்றனர்.
உண்மையைச் சொன்னால், இப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அளவுக்குச் சிறப்பான ஆக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்தவில்லை.
ஆனால், ஒரு காமெடி படம் என்பதையும் தாண்டி ஏற்கனவே புனையப்பட்ட சினிமாக்களை, அவற்றின் பின்னிருக்கிற நடைமுறை சிக்கல்களை, அது ரசிகர்களால் பார்க்கப்படுகிற விதத்தை ‘சீரியசாகவே’ விமர்சனம் செய்திருக்கிறது திரைக்கதை.
அதில் லாவகமாக நகைச்சுவையைப் புகுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இதற்கு முன் வந்த ‘தில்லுக்கு துட்டு’ வகையறா படங்களில் பேய்களின் திரை இருப்பு கிண்டலடிக்கப்பட்டிருக்கும்.
இதில் அதனை ‘ஊறுகாய்’ அளவுக்குச் சிறிதாக்கிவிட்டு, ‘பிரான்கைன்ஸ்டீன்’ வகையறா ‘சைக்கோ’ பாத்திரங்களைக் கொண்டு ‘த்ரில்’ ஊட்ட முயன்றிருக்கிறது இந்த ‘எழுத்தாக்க’ கூட்டணி. அதில் நகைச்சுவையையும் புகுத்தியிருக்கிறது.
ஒட்டுமொத்தமாகச் சிரிக்க வைக்காவிட்டாலும், ஒவ்வொரு நடிகர், நடிகையையும் திரையில் கண்டு சிரிக்கிற வகையில் நான்கைந்து காட்சிகளாவது வைத்திருக்கின்றனர்.
இன்னும் கொஞ்சம் ‘பைன் ட்யூன்’ செய்திருந்தால், ‘இதுக்கெல்லாம் சிரிக்கணுமா’ என்று ரசிர்கள் தயங்குவதைத் தவிர்த்திருக்கலாம்.
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’லில் இயக்குநர் பிரேம் ஆனந்த் கையாண்டிருக்கிற காட்சியாக்கம் மற்றும் கதை சொல்லல், ‘என்னப்பா மொக்க படமா இருக்கு’ என்று சிலரை விமர்சிக்கச் செய்யலாம்.
‘அங்கங்க சிரிக்க வைக்குற மாதிரி மொத்த படமும் இருக்கு’ என்று சொல்ல வைக்கலாம். அந்த கலவையான விமர்சனங்களைத் தாண்டி, ‘நல்ல சினிமாவ நல்லபடியா விமர்சனம் பண்ணுங்க’ என்ற திரையுலக வேண்டுகோள்களைக் கடந்து, வழக்கத்திற்கு மாறான ’ஐடியா’வை சுமக்கிற காரணத்தால் வித்தியாசப்படுகிறது இப்படம்.
இப்படத்திற்காகப் பிரேம் ஆனந்த் குழு கொட்டியிருக்கிற உழைப்பு ரொம்பவே அபரிமிதமானது. அது நிச்சயமாக இப்படத்தில் இருக்கிற குறைகளைப் புறந்தள்ளிவிடும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்.